குரூர கொலையாளியை மன்னித்த ஜனாதிபதியின் செயல் கண்டனத்துக்குரியது.

0 1,320

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­வி­யி­லி­ருந்தும் ஓய்வு பெற்றுச் செல்ல சில தினங்கள் இருக்கும் நிலையில் ‘ரோயல் பார்க்’ கொலைக் குற்­ற­வா­ளிக்கு மன்­னிப்பு வழங்­கி­ய­மைக்கு பல­த­ரப்­பு­க­ளி­லி­ருந்தும் கண்­ட­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. ஜனா­தி­ப­தியின் தீர்­மானம் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

ராஜ­கி­ரிய ரோயல் பார்க் சொகுசு குடி­யி­ருப்புத் தொகு­தியின் படிக்­கட்­டு­களில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி சுவீடன் பிர­ஜை­யான 19 வய­தான இவொன் ஜொன்சன் எனும் யுவதி கொலை செய்­யப்­பட்டார். இந்தக் கொடூர கொலை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்­கப்­பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்­டனி ஜய­ம­ஹ­வுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இரு­வேறு ஜனா­தி­பதி மன்­னிப்­பு­களின் அடிப்­ப­டையில் கடந்த 10 ஆம் திகதி அவர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

கொலை செய்­யப்­பட்ட யுவதி ஜய­ம­ஹவின் காத­லி­யான கரோவின் சகோ­த­ரி­யாவார். நாட்டில் பெரும் பர­ப­ரப்­பினை ஏற்­ப­டுத்­திய இந்தக் கொலையைப் புரிந்த நப­ருக்கு 14 வரு­டங்­களின் பின்பு ஜனா­தி­ப­தி­யினால் மன்­னிப்பு வழங்­கப்­பட்டு குரு­விட்ட சிறைச்­சா­லை­யி­லி­ருந்தும் அவர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட போது வயது 19. அவ­ரது 34 வயதில் மன்­னிப்பின் கீழ் விடு­தலை வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜய­ம­ஹவை குற்­ற­வா­ளி­யாகக் கண்ட கொழும்பு மேல் நீதி­மன்றம் அவ­ருக்கு 2012 இல் 12 வருட கடூ­ழியச் சிறையும், 50 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து தீர்ப்பு வழங்­கி­யது. ஜய­மஹ தனக்கு வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்தார். வழங்­கப்­பட்ட தண்­டனை போது­மா­ன­தாக இல்லை என சட்­டமா அதி­பரும் மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்தார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் ஜய­ம­ஹவின் மனுவை நிரா­க­ரித்து சட்­டமா அதி­பரின் மேன்­மு­றை­யீட்­டினை ஏற்று அவ­ருக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்பு வழங்­கி­யது. அத்­தோடு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தீர்ப்­புக்கு எதி­ராக அவர் உயர்­நீ­தி­மன்­றுக்கு செய்த விஷேட மேன்­மு­றை­யீடும் உயர் நீதி­மன்­றினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.
2016 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தியின் விஷேட பொது மன்­னிப்பின் கீழ் இவ­ரது மரண தண்­டனை ஆயுள் தண்­ட­னை­யாக குறைக்கப்பட்டது. இந்­நி­லை­யிலே ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் தற்­போது அவர் விடு­த­லை­யா­கி­யி­ருக்­கிறார்.

ஜய­மஹ இவோனை குடி­யி­ருப்புத் தொகு­தியின் 23 ஆம் மாடி­யி­லி­ருந்து துரத்திச் சென்று 20 ஆவது மாடியின் படிக்­கட்­டு­களில் வைத்து அவரைக் கொலை செய்­துள்ளார். இவோனின் தலையை படிக்­கட்­டு­களில் மோதி­யுள்ளார். இதனால் இவோனின் மண்டை ஓடு 64 இடங்­களில் நொறுங்­கி­யுள்­ள­தாக நீதி­மன்றில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இப்படிப்பட்ட குரூர கொலையாளியை மன்னித்த ஜனா­தி­ப­தியின் இத்­தீர்­மா­னத்­திற்கு பல தரப்­பு­க­ளி­லி­ருந்தும் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச மரண தண்­டனைக் கைதி விடு­தலை செய்­யப்­பட்­டி­ருப்­பதை வன்­மை­யாகக் கண்­டித்­துள்ளார். ‘ஒரு கையெ­ழுத்தின் மூலம் விடு­தலை செய்­வது துன்­ப­க­ர­மான செயல், பிழை­யான முன்­மா­திரி’ என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். அத்­துடன் கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ளார்.
‘மன்­னிப்பு வழங்­கி­ய­மைக்கு காரணம் பணப் பரி­மாற்­றமா? ராஜபக் ஷாக்­க­ளுக்கு நன்றிக் கடனா? அல்­லது அவர் ஜனா­தி­ப­தியின் உற­வி­னரா?’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க சபையில் கேள்வி எழுப்­பி­யுள்ளார். பொது மன்­னிப்பு வழங்க தகு­தி­யா­ன­வர்கள் பலர் சிறையில் உள்­ளனர். தூக்குத் தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வ­தாக வீர வசனம் பேசிய ஜனா­தி­ப­தியா இவ்­வா­றான கொலை­யா­ளிக்கு விடு­தலை வழங்­கி­யுள்ளார்? எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பின் 34 (1) உறுப்­பு­ரைக்­க­மைய இலங்­கையில் எந்­த­வொரு நீதி­மன்­றி­னாலும் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­படும் ஒரு­வ­ருக்கு மன்­னிப்­ப­ளிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்­குள்­ளது என்­றாலும் மரண தண்­டனை கைதி­யொ­ரு­வ­ருக்கு ஜனா­தி­ப­தி­யினால் பொது மன்­னிப்பு வழங்க முடி­யுமா? என்­பது குறித்து அர­சி­ய­ல­மைப்பின் 34 (ஈ) உறுப்­பு­ரைக்கு அமைய நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி அவ்­வா­றான குற்­ற­வாளி ஒரு­வரை விடு­விப்­பதற்கு முன்னர் குறித்த வழக்கை விசா­ரித்த நீதி­ப­தி­யி­ட­மி­ருந்து அறிக்கை பெற­வேண்டும். அவ்­வ­றிக்கை ஜனா­தி­ப­திக்கு கிடைத்த பின்னர் அது தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்­வி­திகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு ஜய­ம­ஹவின் விடு­த­லையை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. மதத் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் எழுத்து மூல கோரிக்கைகளை கருத்திற் கொண்டே ஜயமஹவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் நூற்றுக்கணக்கில் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி தனது பதவியின் இறுதிக் காலத்தில் கொடூர கொலையாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கத்தக்கதுமாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.