நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ததன் மூலம் தன்னை ஓர் இனவாதியாக அடையாளப்படுத்திக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொலை குற்றவாளியையும் அதேபோல் விடுவித்தமையின் ஊடாக சமூக விரோதசக்திக்கு துணை போகின்றவராக தன்னை அடையானப்படுத்திக்கொண்டுள்ளார் என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். இராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத்தொகுதியில் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பளிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் வினவியபோதே அருட்தந்தை சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வந்த ஞானசார தேரரை சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தார். இந்த செயலினூடாக தன்னை ஒரு இனவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட ஜனாதிபதி தற்போது சமூக விரோதியான நபரை விடுவித்ததன் ஊடாக சமூகத்திற்கு துரோகம் இழைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறித்த இளைஞன் பாலியல் வன்புணர்விலும் ஈடுபடுபட்டுள்ளதுடன், கொலையும் செய்துள்ளார். இத்தகைய சமூக விரோதியை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்திருக்கின்றார். சட்டத்தை மதிக்காத நபரைத் தண்டிக்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையிலேயே குறித்த சமூக விரோதி தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். அதேவேளை, ஆனந்த சிவகரன் என்னும் அரசியல் கைதியை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு ஒருசமூகமே வேண்டுகோள்விடுத்திருந்தது. ஆயினும் ஜனாதிபதி அவரை விடுவிக்கவில்லை. அந்த அரசியல் கைதியின் பிள்ளைகள் தாயை இழந்து அனாதைகளாக தவித்த வேளையிலேயே நாம் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தோம். அவ்வாறாயின் ஜனாதிபதி நாட்டின் சட்ட திட்டங்கள் நீதி, கலாசாரம் என்பவற்றிற்கு மதிப்பளிக்கவில்லை என்றே கூற முடியும். குற்றவாளிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கலாசாரத்தை ஏற்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து செல்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன . இந்நிலையில் சமூகவிரோதியான கொலைக் குற்றவாளியை விடுவித்துள்ளார் எனின் இவரின் சிந்தனை என்னவாக இருக்கும் என கேள்வி எழுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.-Vidivelli