ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவினது அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தாலும் அவ்வாறான எந்த ஆவணமும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்திச் சேவையுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் குடியுரிமை பிரச்சினை மற்றும் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளிக்கையில்;
தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளாரா? தேவையான தகுதிகள் இருக்கின்றதா? அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளனவா? என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வேட்பாளர்களிடம் எந்த கடிதத்தையும் கேட்காது அது தொடர்பில் அவதானமும் செலுத்தப்படமாட்டாது என்றாலும் வேட்பு மனுவில் “தான் எந்தவொரு தகுதியற்ற விடயங்களுக்கும் உட்படவில்லை. இதில் நான் போட்டியிட விரும்புகிறேன்” என வேட்பாளர் கையொப்பமிட வேண்டும். சமாதான நீதிவான் அந்த கையொப்பத்தை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு வேட்பாளர் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 35 வயதுக்குக் குறைந்தவராக இருந்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். 35 வயதுக்கு குறைவாக இருந்து 35 வயதுக்கு அதிகம் என பொய் தகவல் வழங்கினாலும் தேர்தல் ஆணைக்குழுவினால் அதனை விசாரிக்க முடியாது. குடியுரிமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதையும் நாங்கள் கோருவது இல்லை. பெற்றுக் கொள்வதும் இல்லை. குறைந்தபட்சம் அடையாள அட்டையின் பிரதியைக் கூட கோருவது இல்லை.
இதன் அடிப்படையில் நாம் எந்த ஆவணத்தையும் பெறவில்லை எனத் தெரிவித்தார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்