வெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா? ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை
பொறுப்பு சி.ஐ.டி பிரதானியிடம் கையளிப்பு
அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வேன் கடத்தல்களின்போது தான் சாரதியாகக் கடமையாற்றியதாகக் கூறி, பொதுமகன் ஒருவர் வெளியிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பூரண அவதானம் திரும்பியுள்ளதாகவும், அதன்படி ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபரங்கள், ஒலி மற்றும் ஒளிபரப்புக்களின் பிரதிகளுடன் அது தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவே செயற்பட்டார் என்றும், சுமார் 300 பேர் வரை வெள்ளை வேனில் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் அந்தனி டக்ளஸ் பெர்னாண்டோ என்ற நபர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
“வெள்ளை வேன் கடத்தலுடன் தனக்கு தொடர்பில்லை என்று கோத்தாபய தற்போது தெரிவித்து வருகின்றார். ஆனால் அவரே இதன் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர். இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வேன்களின் ஒன்றினது சாரதியாக நானும் பணிபுரிந்துள்ளேன்.
இந்தக் கடத்தலுக்குப் பொலிஸாரும், இராணுவத்தினரும் பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கினர். கடத்தல் தொடர்பில் கோத்தாபய பிரிகேடியர் ஒருவருக்கும், மேஜர் ஒருவருக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர்களே இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவர். இதன்போது நபர்களை கடத்துவதற்கு வாகனமொன்று பயன்படுத்தப்படுவதுடன், அவரை மறைத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் இடத்திற்கு பிறிதொரு வாகனத்திலேயே அழைத்துச் செல்வார்கள்.
இந்த இடங்களில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள். பின்னர் மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இவ்வாறு பல கொடுமைகள் செய்த பின்னர் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள். பின்னர் சடலத்தின் உள்ளுறுப்புகளை அகற்றிவிட்டு மொனராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியிலுள்ள குளமொன்றில் போடுவார்கள். அந்தக் குளத்திலே 100க்கும் அதிகமான முதலைகள் வாழ்கின்றன. அவற்றுக்கே இவர்கள் உணவாக்கப்படுவார்கள்.
இன்றும்கூட நீங்கள் அந்தக் குளத்தை சோதனையிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்கப்பெறும். நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்” என குறித்த நபர் கூறியிருந்தார்.
மிகப் பாரதூரமான இந்தக் கூற்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நேற்று இரவோடிரவாக விஷேட ஆலோசனைகளை நடத்தியுள்ள நிலையிலேயே, நேற்று முற்பகல் இதுகுறித்து பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு சி.ஐ.டி. பிரதானியிடம் பொறுப்பளிக் கப்பட்டுள்ளது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்