இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரைவிட எம்மிடம் சிறந்த நல்ல அறிவுள்ள குழு இருக்கின்றது
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க
இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரை விடவும் எம்மிடம் சிறந்த நல்லறிவுள்ள குழு இருப்பதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் திஸ்ஸமஹராமை தெபரவெவ மைதானத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, எம்மிடம் வேலை செய்வதற்கு தகுதியானவர்களும் ஒரு குழுவும் இல்லையென ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள். இதுவரை நாட்டை ஆட்சி செய்த அனைத்துக் குழுவினரை விடவும் எம்மிடமே சகலதையும் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செய்யக்கூடிய எவ்வித ஊழல்களுமற்ற ஒரு குழு உள்ளது. இந்த மேடையும் அவர்களாலேயே தற்பொழுது நிரம்பியுள்ளது.
தற்பொழுது எமது நாட்டிலுள்ள மக்களுக்கு நாட்டிற்கு சிறந்ததோர் ஆட்சியை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனூடாக நாட்டிற்கும் மக்களுக்கும் புதியதோர் ஆட்சி கிடைக்கவுள்ளது. இது எமது நாட்டு மக்களுக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பமல்ல. நாம் மிகவும் நீண்ட தூரம் செல்லாமல் 2015 இற்கு சென்றதால் இச்சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. இதன்போது அன்றிருந்த ஆட்சியாளர்கள் திருட்டை நிறுத்துவார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. திருடர்களுக்குத் தண்டனை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். நாட்டிலுள்ள மக்களது அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார்கள் என எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவர்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை வீணடித்தார்கள்.
இந்த ஆட்சியை மாற்றி மீண்டும் 2015 இல் தோல்வியடையச் செய்த கூட்டத்தினரையா மீண்டும் ஆட்சியமைக்க செய்வது? அவ்வாறாக இருந்தால் அன்று அவர்களை மக்கள் தோல்வியடையச் செய்யாமல் இருந்திருக்க முடியும். தோல்வியடைந்தவர்களை மீண்டும் ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வழங்குவோமாக இருந்தால் அதுவும் தவறாகும். இந்த ஆட்சியையும் மாற்றி தோல்வியடைந்தவர்களையும் ஆட்சிபீடமேறாமல் பாதுகாக்க வேண்டும். நாம் உங்களை சந்திக்க வந்தது புதிய ஆட்சியை அமைப்பதற்காக புதியதோர் தலைவரை எமது நாட்டிற்காக தெரிவு செய்து கொள்வதற்காகவே உங்களுக்கு அழைப்பினை விடுக்கிறோம்.
இந்த இரண்டு குழுவினரும் எமது நாட்டிற்கு செய்ய முடியுமான அனைத்து அநியாயங்களையும் அழிவுகளையும் செய்து நாட்டை வறுமைக்குள் தள்ளியுள்ளார்கள். நாடு சகல துறைகளிளும் பின்னடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அறிவு, சக்தி, பலம் ஆகிய அனைத்தும் எம்மிடம் உள்ளன எனவும் தெரிவித்தார்.-Vidivelli
- ஹம்பாந்தோட்டை நிருபர்