தூதுவராலயங்கள் ஹோட்டல்கள் மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு
அபூபக்கர் அல் பக்தாதியின் மரணத்தையடுத்து நடவடிக்கை என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன
வெளிநாட்டு தூதுவராலயங்கள், உயர்ஸ்தானிகர் காரியாலயங்கள், ஹோட்டல்கள், வெளிநாட்டவர்கள் நடமாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க படைகளின் அதிரடி நடவடிக்கைகளையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி மரணமானதையடுத்து முழு உலகிலுமுள்ள நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ள நிலையில் இலங்கையிலும் வெளிநாட்டு தூதுவராலயங்கள், உயர் ஸ்தானிகர் காரியாலயங்கள், ஹோட்டல்கள்,
வெளிநாட்டவர் நடமாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் விசேட கவனம் செலுத்தும்படி பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ள விசேட பொலிஸ் அறிவித்தலில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த பக்தாதியின் மரணத்தின் பின்பு முழு உலகிலும் பாதுகாப்பு திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் கிறிஸ்தவர்களின் முக்கிய மத நிகழ்வுகளின் போதும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் உயர் பொலிஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளார். கிறிஸ்தவர்களின் விசேட தினங்களின்போது பெரும் எண்ணிக்கையானோர் ஆலயங்களில் ஒன்று கூடுவார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்