கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்காது பிள்ளையானை முதலமைச்சராக்க துடிக்கின்றனர்
எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடுகிறார் பிரதமர்
“கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது. நான் பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக்கப் போகின்றேன்” என்று ராஜபக் ஷ தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம்களினாலும் முதலமைச்சரை தெரிவு செய்ய முடியுமெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு நேற்று சம்மாந்துறையில் அக்கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் முஹம்மட் முஸர்ரப் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது. நான் பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக்கப் போகின்றேன் என்று ராஜபக் ஷ தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு ஒரு முதலமைச்சர் தேவையென்றால் அதனை தமிழ் மக்கள் தெரிவு செய்யட்டும். அவர்கள் யாரும் பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்கு விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கும் ஒரு முதலமைச்சரை தெரிவு செய்வதற்கு உரிமை இருக்கின்றது. அதுபோலவே முஸ்லிம்களுக்கும் ஒரு முதலமைச்சரை தெரிவு செய்வதற்கு உரிமை இருக்கின்றது. சிங்கள மக்களுக்கும் அந்த சந்தர்ப்பம் இருக்கின்றது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதனால் அந்த பணியை கிழக்கு மாகாண மக்களிடைமே ஒப்படைக்கின்றேன்.
கோத்தாபய ராஜபக் ஷவுக்கோ, எனக்கோ இங்கு வாக்கு கிடையாது. இங்கு வாக்களிக்கும் மக்கள் அதனை தீர்மானிக்கட்டும். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் மிகச் சிறந்த செயற் திறன் கொண்டவராக அவர் இருக்க வேண்டும்.
தெற்குப் பிரதேசத்திற்கு சென்று நான் தமிழ்க் கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்கிறேன் என்று. இவ்வாறுதான் அவர்கள் இனவாதத்தை பரப்பி வருகின்றார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போதும் அதனைத்தான் அவர்கள் செய்தார்கள். இன்னும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அரசியல் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தீ வைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் மனம் கொண்டவர்கள் அவர்கள். ஆகவே, நாம் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் எல்லோரும் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாம் நாட்டை நவீனமயப்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தையும் பாரியளவில் அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு, வடக்கு மாகாணங்களுக்கும், மொனராகலை போன்ற பிரதேசங்களுக்கும் அபிவிருத்திக்காக அதிகளவு நிதியுதவிகளை வழங்குமாறு நான் சர்வதேசத்தைக் கேட்டுக் கொள்கின்றேன். கிராமங்களையும், வீதிகளையும் அழகிய முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கின்றது. மேலும், உலர் வலயத்தில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம். குறிப்பாக நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம். நெற்செய்கைக்குத் தேவையான இயந்திரங்களையும், ஏனைய கருவிகளையும் கொள்வனவு செய்வதற்கு நாங்கள் உதவிகளை செய்யவிருக்கின்றோம். கால்நடைகளை விஞ்ஞான அடிப்படையில் அபிவிருத்திகளை செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். அதன் மூலமாக பாலுற்பத்தியையும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இது மட்டுமன்றி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் ஒரு முதலீட்டு வலயத்தை வழங்கவிருக்கின்றோம் என்பதனையும் சொல்லிக் கொள்கின்றேன்.
மேற்படி துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலமாக தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரமும் அதிகரிக்கும். நாங்கள் இந்த நாட்டிற்குப் புதிய பொருளாதாரத்தையும் அறிமுகம் செய்ய இருக்கின்றோம். அதாவது, சுற்றுலா பொருளாதாரத்தை மேலும் இப்பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய வேண்டும். மட்டக்களப்பு, பலாலி விமான நிலையங்களை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே விமான சேவையை வழங்கும் விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படும். சென்னை –- மட்டக்களப்பு, சென்னை – பலாலி, மட்டக்களப்பு – கொழும்பு, பலாலி – கொழும்பு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. இதற்காக மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கான அனுமதிகளை இந்திய எயார் லைனும், இலங்கையின் பிக்ஸ் எயார் லைனும் பெற்றிருக்கின்றன. அடுத்த வருடத்திலிருந்து மத்தள விமான நிலையமும் செயற்பட ஆரம்பிக்கும்.
இதன் மூலமாக வாகரை முதல் அரும்கம்பை வரை ஒரு விசாலமான சுற்றுலா வலயத்தை அமைக்க முடியும். இந்த அபிவிருத்திகள் மூலமாக இப்பிரதேசங்களில் பல அபிவிருத்திகளும், தொழில் வாய்ப்புக்களும் ஏற்படும்.
மட்டக்களப்பு, கல்முனை. சம்மாந்துறை பிரதேசங்களில் தகவல் பயிற்சி முகாம்களையும் அமைக்க இருக்கின்றோம். இவ்வாறு பல துறைகளையும் அபிவிருத்தி செய்து இப்பிரதேங்களில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதுதான் எங்களின் அபிவிருத்தி வேலைத் திட்டமாகும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இணைந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். என்றார்.-Vidivelli
- நிந்தவூர் நிருபர்