ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பொது ஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.சியாத் நேற்று முன்தினம் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸஹ்ரானின் தம்பியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைச்சர் ஹக்கீமுடன் தானும் பார்வையிடுவது போன்ற புகைப்படமொன்று ஊடகங்களில் வெளிவந்தது. இதன் போது நான் பொது ஜன பெரமுன ஆதரவாளராக அங்கு ஸஹ்ரானின் தம்பியை பார்வையிடச் சென்றதாக அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றார். இவரது இந்தக் கருத்துக்கெதிராகவே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்ததாக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பொது ஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலின் போது நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே ஆதரவு வழங்கினேன். அப்போது அந்த தேர்தலின் பின்னர் ஏற்பட்ட தேர்தல் வன்முறைகளையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்தார்கள். அவர்களைப் பார்க்கச் சென்ற போது ஸஹ்ரானின் தம்பியும் அங்கு இருந்தார். இந்தப் புகைப்படத்தில் நானும் காணப்படுவதால் நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர் இல்லையெனவும் பொது ஜனபெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் என்னை அமைச்சர் ஹக்கீமுக்கு தெரியாது எனவும் அமைச்சர் ஹக்கீம் தேர்தல் மேடைகளில் பேசியுள்ளார். எனக்கு இவரின் கருத்தினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனது கௌரவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. தற்போது நான் சார்ந்துள்ள பொது ஜன பெரமுன கட்சிக்கும் அமைச்சர் ஹக்கீம் என்னைக் காட்டி அபகீர்த்தியை ஏற்படுத்த முனைகின்றார். இதைக் கண்டித்தே தான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli
- எம்.எஸ்.எம்.நூர்தீன்