குப்பைத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக உறுதி வழங்குபவர்களுக்கே புத்தளம் மக்கள் ஆதரவளிப்பர்
ஆதரவளிப்பர் கட்சி மாறியதாக வெளிவரும் தகவல்களை மறுக்கிறார் நகரபிதா கே.ஏ.பாயிஸ்
ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு, கட்சியின் தீர்மானத்துடன் இணைந்தே பயணிக்கிறேன். நான் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துவிட்டேன் என்று வெளியாகும் தகவல்களல் எவ்வித உண்மையும் இல்லையென புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தலைவர்கள் எந்தப் பக்கம் நின்றாலும் புத்தளம் குப்பைத் திட்டத்தை யார் நிறுத்துவதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கே தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் வழங்குவது என்று புத்தளத்தில் வாழும் மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.
நான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மாறிவிட்டதாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
நான் ஒருபோதும் கட்சி மாறப்போவதில்லை. எப்போதும் எனது தலைவருக்கு கட்டுப்பட்டு நடப்பேன், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படவும் மாட்டேன்.
எனினும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நான் மக்களுடைய கருத்துகளுக்கும், தீர்மானங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடும் எனக்கு உள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் அறுவக்காலு பிரதேசத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளை உடனடியாக நிறுத்துமாறு மூவின மக்களும் ஒன்றிணைந்து பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.
ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த போராட்டங்களை மலினப்படுத்தி, கணக்கிலேயே எடுக்கவில்லை.
தேர்தல் பிரசாரத்திற்காக அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச புத்தளத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போது தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் புத்தளம் குப்பைத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லிச் சென்றாரே தவிர, முழுமையாக நிறுத்துவேன் என்று உறுதியான வாக்குறுதிகள் வழங்கவில்லை. புத்தளம் குப்பை விவகாரத்தை அவர் கணக்கிலேயே எடுக்கவில்லை.
கடந்த வாரம் புத்தளத்தில் உள்ள சமயத் தலைவர்கள், க்ளீன் புத்தளம் முக்கியஸ்தர்கள் சகிதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை சந்தித்துக் கலந்துரையாடிய போது தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் உடனடியாக குப்பைத் திட்டத்தை நிறுத்துவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.
அதுபோல சனிக்கிழமை புத்தளத்திற்கு வருகை தந்த சுயேட்சையாக ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வையும் மேற்படி அமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
அவரும் இந்த குப்பைத் திட்டத்தை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அதுமாத்திரமின்றி, எதிர்வரும் 6 ஆம் திகதி புத்தளத்திற்கு வருகை தரவுள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
குப்பைத் திட்டத்தை முழுமையாக நிறுத்துவதாக யார் வாக்குறுதிகளை தருகிறார்களோ அவர்களையே ஆதரிக்க வேண்டும் என்பதுதான் புத்தளத்தில் வாழும் மக்களுடைய நிலைப்பாடாகும்.
மக்களுடைய இந்த நிலைப்பாடுகள் தொடர்பில் நான் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நேற்று தொடர்புகொண்டு தெளிவுபடுத்தினேன். தொடர்ந்தும் இதுபற்றி கட்சியோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.-Vidivelli
- புத்தளம் மேலதிக நிருபர்