துரோகம் வெட்கம் அறியாது
தேர்தலும் முஸ்லிம்களும் இன்ன பிறவும்
If the JVP is two self–centered to enter a broad anti – fascist compact with a leading democratic factor, the Centrist – populist then the only Viable solution is for the progressive – minded citizens to give AKD the second preference and not the first, because giving him the first preference would lead to the victory of a dictator. The stakes are far too high to wast first preference on AKD. (Dr. Dayan Jayathilake)
நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 14 நாட்கள் எஞ்சியுள்ளன. தேர்தல் பிரசாரம் கொட்டும் மழையிலும் அனல் அலையாய் பொரி கிளப்பி வருகின்றது. அரசியல்வாதிகளிடம் எஞ்சியுள்ள கடைசிப்புகலிடம் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் வார்த்தை விளையாட்டு மட்டுமே. இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அள்ளி வீசும் வாக்குறுதிகளில் உள்ளடங்காத எதுவுமே இல்லை என்ற அளவுக்கு மேடை மேடையாக வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இவ்வளவு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு இலங்கையை விற்றாலும் போதாது என Daily Mirror பத்திரிகையில் ஒருவர் கிண்டல் செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதன் அரசியல் தாற்பரியம் கவனிப்புக்குரியது என்றும் பலர் சொல்வதற்கு சில நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. சிறுபான்மையினரைப் பொறுத்த மட்டில் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு தேர்தல் பெறுபேறு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்டதும், நேரிடையானதும், இடக்கு முடக்கானதுமான வாதங்களும் தர்க்கங்களும் நீண்டு செல்கின்றன. ஒரு சாரார் கோத்தாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். ஏனென்றால் அவர்தான் வெற்றி பெறுவார். ஆக, வெற்றியாளரின் பக்கம் நிற்பதே பாதுகாப்பானது எனவும் முஸ்லிம் விரோதத் தீவிரத்தை தணிக்க அது உதவும் என்பதும் அவர்களது வாதமாக உள்ளது.
ஐ.தே. முன்னணி வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதே மிகப்பொருத்தமானது. ஏனெனில், ஒப்பீட்டு ரீதியில் இனவாதம் சற்று, குறைந்த ஒரு தலைவர் அவர் எனவும் நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய இளம் தலைவர் அவர் எனவும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகாண முடியும் எனவும் சஜித் ஆதரவாளர்கள் ஆழமாக நம்புகின்றனர்.
மூன்றாவது ஓர் அணி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமாரவுக்கே இம்முறை முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும். ஏனெனில், இரு பிரதான கட்சிகளும் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் நல்லாட்சியை உருவாக்கத் தவறிவிட்டன. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எந்தப் பொருத்தமான கொள்கைத்திட்டமும் அவற்றிடம் இருக்கவில்லை. ஆகக்குறைந்தது பன்மைப்பாங்கை முறையாகக் கையாளக் கூடிய (Dealing with Diversity) வலிமையுள்ள தலைவர்களாகவேனும் அவர்கள் இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லை கடந்த ஊழல் மோசடிகளும் முறையற்ற நிதிக்கையாள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது. ஒவ்வொரு பிரஜையின் தோளிலும் ஐந்தரை இலட்சம் ரூபா கடன் சுமையை மாறிமாறி வந்த ஆட்சியாளர்கள் திணித்துள்ளனர். 12 (Trillion) ட்ரில்லியன் ரூபா இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொகையாக உள்ளது. ஆக, இவற்றையெல்லாம் நேர்மையாகவும் மனச்சாட்சியுடனும் பரிசீலிக்கும்போது முஸ்லிம்கள் அநுரவை ஆதரிப்பது தவிர வேறெந்த தெரிவும் அவர்கள் முன்னால் இல்லை என்பது மூன்றாவது அணியின் ஆணித்தரமான நிலைப்பாடாக உள்ளது.
யதார்த்தத்தில் மூன்றாவது அணியின் நிலைப்பாடு கொள்கை அளவில் மிகச் சரியானது. நேர்மையானது. இதய சுத்தியுடன் கூடியது என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. நடைமுறையில் மூன்றாவது சக்தி வெற்றிவாகை சூடவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாக்குப் பலத்தால் அது அதிகாரத்தைக் கையேற்கும் காலம் கனிய இன்னும் நாம் காத்திருக்கவேண்டியிருப்பினும் முழு இலங்கையர்களும் இன,மத பேதமின்றி எடுக்க வேண்டிய ஒரே தீர்மானம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இவ்வாறு நேர்மையாக சிந்திக்கும் ஒரு முற்போக்கான மக்கள் இயக்கமும் கட்சியும் முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இயங்குவது நம்பிக்கை தருகின்றது. நீதியையும் நேர்மையையும் நாட்டின் மீது உண்மையான நேசத்தையும் கொண்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளனர் எனும் ஒரு கருத்தை சிங்கள சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளிடம் ஆழமாகப் பதிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த அணுகுமுறையும் பார்வையும் இன்றியமையாதது.
இத்தகையதொரு கொதிப்பான தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலை முழு முஸ்லிம் சமூகமும் எவ்வாறு நோக்கவேண்டும் என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியைத் தவிர ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்போரின் வாதங்களை நாம் சற்று நிதானித்துப் பரிசீலித்தால் அதன் உண்மைச் சொரூபம் புலனாகும்.
71 வயதான கோத்தாபய 20 வழக்குகளுடன் தொடர்பான ஒருவர். அநுர குமார சொல்வதுபோல் பாலியல் குற்றச் சாட்டு தவிர ஏனைய அனைத்து வகைக் குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன. பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கோத்தாபய மேற்கொண்ட எதேச்சதிகாரமிக்க பல நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்ததை நினைவுகூர வேண்டும். மிக் விமானக் கொள்வனவு, எவன்காட் மிதக்கும் ஆயுத தொழிற்சாலை விவகாரம், தனது தந்தை ராஜபக் ஷ நினைவு நூதனசாலை விவகாரம், இலங்கை–அமெரிக்க இரட்டை பிரஜாவுரிமை விடயம் அனைத்தும் மிக சீரியசான விவகாரங்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான விக்டர் ஐவன். அவரது கருத்து நாட்டின் அடிப்படைச் சட்டங்களையும் அரசியலமைப்பு விதிகளையும் மீறிய ஒருவரால் தேர்தலில் நிற்க முடியாது என்பதாகும்
இன்றைய ஜனாதிபதி பதவியேற்று ஒரு வாரத்தின் பின் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் “தப்பித் தவறி தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படாதிருந்தால் கொலையுண்டு மண்ணில் புதையுண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்” என்று ராஜபக் ஷாக்களை சாடியிருந்தார். காரணம், வெள்ளை வேன் கொலைக் கலாசாரம் இலங்கையின் மனித உரிமை விடயத்தைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கி இருந்ததை இலங்கையர்கள் பெரும்பாலும் மறந்திருக்க மாட்டார்கள். லசந்த, எக்னெலிகொட மற்றும் சில தமிழ் ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மிகச் சாதாரணமானவையல்ல. ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை ராஜபக் ஷாக்கள் எவ்வளவு குரூரமாக நசுக்கினார்கள் என்பதை ஊடகவியலாளர்கள் இலகுவில் மறந்துவிடார்கள். மஹிந்தவின் மன்னராட்சியில் இவை எல்லாம் சர்வ சாதாரணம்.
2015 ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர் Daily Mirror பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில் எழுதப்பட்ட தரவொன்றும் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போதைய ஆட்சியில் அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் 286 ராஜபக் ஷ குடும்ப அங்கத்தவர்கள் உள்ளனர் என்றும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விழும் பேரடி எனவும் ஆசிரியர் எழுதியிருந்தார். இதுதான் ராஜபக் ஷ ஆட்சியில் நடந்த உண்மை. அது தேசிய ஜனநாயக சக்தியின் அரசாங்கம் அல்ல. ஒரு குடும்பத்தின் ஊழலும் மோசடியும் நிறைந்த ஆட்சி. அடுத்தவர்களை ஆயுதங்கள் மூலமும் அதிகாரத்தின் மூலமும் பயமுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சி அதிகாரப் பாஸிஸம்.
இனவாதமும் மதவாதமுமே அந்த ஆட்சியின் மூலதனமாக இருந்தன. ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. அராஜகம் தலைதூக்கி தாண்டவமாடியது. இனக்கலவரங்கள் மூட்டப்பட்டன. கிறீஸ் பூதங்கள் இறக்கப்பட்டன. கொலைக்கலாசாரம் மக்களை அச்சுறுத்தியது. இன்றும் கூட கோத்தாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என “பொக்கட் மீடிங்” நடத்தும் சில மஹிந்த பக்தர்களும், முஸ்லிம் பிரபலங்களும் ‘‘கோத்தாவிற்கு வாக்களிக்காவிட்டால் அம்பானைக்கு கிடைக்கும்” என்ற அந்தப் பயத்தைக் காட்டியே அவருக்கு வாக்குக் கேட்கிறார்கள். துரோகம் வெட்கமறியாது.
சுதந்திரமும் உரிமையும் கொண்ட ஒரு சம அந்தஸ்துள்ள பிரஜை ஒரு சிவில் அரசில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த எந்தக் கொம்பனுக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதை சட்டம் தெரிந்தவர்களே மறந்துபோவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. ‘‘முஸ்லிம்களே சிந்தியுங்கள். சிலர் எம்மை ஏறி மிதித்து அடியும் தந்தார்கள். பின்னர் பணமும் தந்தார்கள். வேறு சிலர் ஏறி மிதித்துச் சென்றார்கள். நாம் பணம் தந்தவனுக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும்” என தொப்பி போட்ட ஒரு மௌலவி வெட்கமில்லாமல் கோத்தாவுக்கு ஆதரவு தருமாறு மக்களைக் கோருகின்றார்.
அந்நியர் நுகத்தடியில் அடிமைப்பட்டுக் கிடப்பதே உத்தமம் என்று நினைக்கும் இந்தக் கொத்தடிமைத்தனம் வெட்கமறியாது.
“வெல்லப்போவது கோத்தா” எனவே அவருக்கு நாம் வாக்களித்தால் முஸ்லிம் விரோதத்தைத் தணிக்கலாம் என்ற வாதத்தின் லொஜிக் எனக்குப் புரியவில்லை. ராஜபக் ஷாக்கள் நேர்மையானவர்கள் என்பதற்கு சாதகமான எந்தக் காரணியும் இல்லை. கடந்தகால ராஜபக் ஷ யுகத்தில் அத்தகைய நேர்முகமான (Positive) மாற்றம் எதனையும் முஸ்லிம்கள் காணவில்லை. மறுதலையாக முஸ்லிம் விரோதமும் குரோதமுமே திட்டமிட்டு வளர்க்கப்பட்டன. இன்று கோத்தாவின் பக்கம் நிற்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கூட்டு மறதியை ஒரு துயரம் என்பதா? துரோகம் என்பதா…?. தெரியவில்லை. கோத்தா ஜனாதிபதியானால் இலங்கைக்கு என்ன நேரும் என்பதற்கு ஓர் உதாரணம் நம் கண்கள் முன்னால் உள்ளது. அதுதான் எகிப்தில் ஸீஸி நடாத்தும் இராணுவ அராஜகம்.
உதய கம்மன்பில, அதுரலிய ரதன தேரர், ஞானசார தேரர், விமல் வீரவன்ச என பச்சை இனவாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்கு சூடு சொரணையுள்ள, யோக்கியதையான ஒரு முஸ்லிமோ தமிழனோ வாக்களிக்க மாட்டான் என்பது திண்ணம். இன்று கிழக்கில் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள அதாவுல்லாஹ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் வியாழேந்திரன், கருணா அம்மான் போன்றவர்களும் கோத்தா பக்தர்களாக மாறியதன் பின்புலம் அதிகார மோகமும் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தந்திரமுமே. அதில் எந்தவொரு சமூகப்பற்றும் நலனும் இல்லை என்பது கண்கூடு.
இத்தருணத்தில் சஜித்தை ஆதரியுங்கள். அவருக்கு வாக்களியுங்கள் என்று உணர்ச்சி வயப்பட்டு நிம்மதியான வாழ்வை உறுதி செய்யும் ஹக்கீமும், ரிஷாத்தும் சஜித் வருகை மூலம் சமூகத்திற்கு வழங்கப்போகும் நலன்கள்தான் என்ன?
கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ரணில் வாக்குறுதி அளித்த எதுவும் நடக்கவில்லை. அவர்கள் நல்லாட்சிக்குத் தலைவராகக் கொண்டு வந்த (ஆப்ப) சிறிசேன மேற்கொண்ட ஒக்டோபர் புரட்சி மீளவும் 52 நாட்கள் மஹிந்தவைப் பிரதமராக்கியது. ரணிலை ஓரங்கட்டியது. கொள்ளையர்கள், திருடர்கள், அலி பாபாக்கள் அவர்களை சட்டத்திற்கு முன்கொண்டுவருவோம். அதற்காக வாக்களியுங்கள் என்றே சரத் பொன்சேகா, சந்திரிகா, ரணில், ராஜித போன்றோர் தேர்தல் மேடைகளில் காது கிழியக் கத்தினார்கள். நடந்தது என்ன? ராஜபக் ஷாக்களுடன் ரணில் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம் கடைசிவரை அவர்களைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இறுதியில் ஐ.தே. கட்சியினர்தான் கொள்ளையர்கள் என்பதை மத்திய வங்கி பிணை முறி ஊழல் மூலம் ராஜபக் ஷாக்கள் நிரூபித்தார்கள்.
ரணில் ஒரு நம்பகத்தன்மையுள்ள தலைவரோ தேசத்தின் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்து கொண்டவரோ அல்ல. அவரது ஆட்சியில் அம்பாறை, திகன, மினுவாங்கொட, குருநாகல் எனப் பல்வேறு இன வெறியாட்டங்கள் முஸ்லிம் சமூகத்திற்கெதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக 4/21 பயங்கரவாதத் தாக்குதலும் இந்த ஆட்சியிலேயே நடந்தது. முஸ்லிம் உளவியல் மீது பேரிடியாய் இறங்கிய இந்தச் சம்பவம் ஒரு சூழ்ச்சித்திட்டம். அது ராஜபக் ஷாக்களால் தேர்தலைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டது. ஸஹ்ரான் ஒரு கொந்தராத்துக்காரன் என்றெல்லாம் இன்று மஹேஷ் சேனநாயக்க, கலாநிதி தயான் ஜயதிலக, அமீர் அலி போன்றோர் மட்டுமன்றி ஸஹ்ரான் குழுவுக்கு தாமே ஊதியம் வழங்கினோம் என கெஹலிய ரம்புக்வெல்ல தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டிருந்தார். ஞானசாரரும் இந்தத் தருணத்தில் அமைதி பூண்டுள்ளார். தூக்கத்திலும், விழிப்பிலும், சாவு வீட்டிலும், திருமண விழாவிலும் கலந்துகொண்டும் ரணில் CTA… CTA என்று புலம்பித்திரிகிறார்.
இவற்றையெல்லாம் நேர்மையாகவும் எந்த அரசியல் சார்பும் இன்றி பார்க்குமிடத்து துரோகம் வெட்கம் அறியாது என்ற வாசகமே நினைவுக்கு வருகிறது. மோகம்; அதிகார மோகம் வெட்கமறியாது என்பதைப் போலவே இலங்கையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். தமது தனிப்பட்ட சுய நலன்களுக்காக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறுவோர் சொல்லும் நியாயங்களைப் பார்த்தால் துரோகம் வெட்கம் அறியாது என்ற அரசியல் வாசகமே நெஞ்சை நெருடுகிறது. வாழ்க ஜனநாயகம். வாழ்க வாழ்க ஜனநாயகம்.-Vidivelli
- ஷகீப் அர்ஸலான்