முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது சஜித் பாராளுமன்றில் பேசவில்லை
ஹன்சாட் ஆதாரத்தை நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் மேல் மாகாண ஆளுநர் முஸம்மிலுடன் நேர்காணல்
Q: நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர மேயர் உட்பட உயர்பதவியை வகித்திருந்த நிலையில் இன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்காகப் பாடுபடுகிறீர்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்?
A: இது ஒரு திடீர் மாற்றமல்ல. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 2015 ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்டோம். அந்த தேர்தலில் எல்லாப் பிரதேசங்களுக்கும் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் ராஜபக் ஷ அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்ற பிரசாரத்தை முன்னெடுத்தோம். அளுத்கமவில் எங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவமும் அதன்போது முஸ்லிம்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இந்த வன்முறையை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலை முகம்கொடுத்தோம்.
எனினும், நாங்கள் எதிர்பார்த்த நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து 100 நாட்களுக்குள் மத்திய வங்கியை கொள்ளையடித்தனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்லுமளவு மோசமடைந்தது. திறைசேரி வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அரசாங்கம், தெரிவு செய்யப்பட்ட நோக்கத்தை மறந்துவிட்டு நாட்டை கொள்ளையடித்தனர். அமைச்சர்கள் போட்டிபோட்டு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தனர்.
அத்துடன் அளுத்கம விவகாரத்திற்கு ஜனாதிபதி விசாரணைக்குழு நியமிப்பதாக முஸ்லிம் சமூகத்திடம் வாக்குறுதியளித்தோம். எனினும், இன்றுவரை அந்த விசாரணைக்குழு அமைக்கப்படவில்லை. இதுகுறித்து முஸ்லிம் தலைவர்கள் யாரும் அழுத்தம் கொடுக்கவும் இல்லை. இவ்வாறான தொடர் விரக்தியே இந்த மாற்றத்திற்கு காரணம்.
Q: அளுத்கம வன்முறைகளின் பின்னணியில் ராஜபக் ஷாக்கள்தான் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் நீடிக்கிறதே. இந்நிலையில் எப்படி நீங்கள் கோத்தாவுக்கு ஆதரவை வழங்கினீர்?
A: அளுத்கம வன்முறை சம்பவத்தின் பின்னணி வேறு, மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சம்பவமே அது. அதுதான் உண்மை. ஆனால் அளுத்கம வன்முறைகளை 24 மணித்தியாலயத்திற்குள் ராஜபக் ஷ அரசாங்கம் கட்டுப்படுத்தியது. பாதிப்புகளை சீரமைத்து முழுமையான நட்டஈட்டையும் வழங்கினர். அன்று இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடத் திட்டமிட்டிருந்தனர். எனினும் மஹிந்த அரசாங்கம் அதனை தடுத்துநிறுத்தி முஸ்லிம்களை பாதுகாத்தது.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து இந்த ஐந்து வருடங்களில் முஸ்லிம்களின் நிலைமையை பாருங்கள். முஸ்லிம்கள் மீது பல வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. கண்டி, திகன பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேல் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் இலக்குவைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. வீடுகளையும் தாக்கினர். அரசாங்கம் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்றுவரை நட்டஈடு வழங்கப்படவும் இல்லை.
காலி பகுதியில் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது மஹிந்த ராஜபக் ஷ காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு பேசி அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அம்பாறை நகரில் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டபோது அங்கு செல்லவிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் தயா கமகேயினால் தடுக்கப்பட்டார்.
ஈஸ்டர்தின பயங்கரவாத தாக்குதல் குறித்தும் பயங்கரவாதி சஹ்ரான் குறித்தும் முஸ்லிம்களால் பலமுறை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனை கண்டுகொள்ளாது அரசாங்கம் பொடுபோக்காக இருந்ததன் காரணத்தாலும் 350 க்கும் மேற்பட்ட உயிர்கள் அநியாயமாக பலியாகின. நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் இனவாதிகள் பெரும் நெருக்குதல்களை ஏற்படுத்தினர்.
இராணுவத்தினர் முஸ்லிம் வீடுகளுக்கு அத்துமீறிச் சென்று மௌலவிமார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கைது செய்தனர். நாட்டில் பாதுகாப்புத்துறை வீழ்ச்சி கண்டிருக்கிறது. அத்துடன், புலனாய்வுத் துறையும் செயலிழந்திருக்கிறது. இதனாலேயே நாம் இன்னல்களை சந்திக்கவேண்டியேற்பட்டது.
ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் மீது மிக மோசமாக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம் பெண்களின் பர்தாவையும் கழற்ற முயற்சித்தனர். இப்படி கடந்த ஐந்த வருடங்களில் எத்தனையோ அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன.
தொடராக முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் இழைக்கப்பட்டு வருகின்ற நிலையில் எனது ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க முடியாத நிலை உருவானதால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரிக்கலானேன்.
Q: இந்த தாக்குதல்களின் பின்னணியில் பொதுஜன பெரமுனவினர்தான் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றதே?
A:இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரும், முஸ்லிம் தலைவர்களுமே. இவ்வாறு குற்றம் சாட்டுபவர்களுக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இதனை யார் செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதைவிட, அரசாங்கத்தால் பாதுகாப்புக் கொடுப்பதற்கு முடியாமல் போய்விட்டது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டனர் என்பதே உண்மை. மொட்டுக் கட்சிக்காரர்கள் செய்தாலும், சிங்கள பெளத்த இனவாதிகள் செய்தாலும் அவர்களை கைது செய்து விசாரித்து தண்டனை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. இந்தக் கடமையை அரசாங்கம் செய்ய மறுத்துவிட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பெண்கள் பர்தாவை அணிந்துகொண்டு போய்த்தான் மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் முஸ்லிம்களால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் பிழையான அணுகுமுறைகளினால் பர்தா விடயத்திலும் இனவாதிகள் தலையிடலானார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தலைமைகள் சமூகத்திற்காக குரல் கொடுத்தனரா? முஸ்லிம்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுத்தனரா? அவர்கள் அமைச்சுப் பதவிகள் மூலமாக உழைத்துக்கொண்டிருந்தனர்.
Q: முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவைப்போல், சஜித் பிரேமதாசவும் சிறுபான்மையினருடன் நெருக்கமாக சேவையாற்றுவார் என்று முஸ்லிம் தலைமைகள் கூறுகின்றனர். இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
A:ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாச முஸ்லிம்கள் துன்பங்களை அனுபவித்தபோது அவர் பாராளுமன்றில் முஸ்லிம்களுக்காக ஒரு வார்த்தையேனும் பேசினாரா? முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொன்னாரா? முஸ்லிம்களுக்கு நட்டஈடு வழங்க வலியுறுத்தினாரா? இதுகுறித்து பாராளுமன்ற ஹன்சாட்டில் ஏதும் பதிவுகள் இருக்கிறதா? அவ்வாறான ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள். எனது குற்றச்சாட்டை மறுத்து அதனை நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன் என சவால் விடுக்கிறேன்.
இதுதவிர வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டாரா? ஒரு பள்ளிவாசலுக்கு போய் பார்த்தாரா? இதற்கும் அவரிடம் பதில் இருக்காது.
நாட்டை ஆளும் தகுதி அவரிடம் இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள் இருக்கிறது. இன்று அவர் மேடைகளில் பேசும்போது ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரை போலத்தான் பேசுகிறார்.
Q: அப்படியானால் மஹிந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
A:இந்த நாட்டிலே 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை கோத்தாபய ராஜபக் ஷ 3 வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டுவந்தார். யுத்தத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்ட சமூகம் வடக்கு, கிழக்கிலே வாழும் முஸ்லிம்களே. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு நிவாரணம் கிடைத்ததையொத்ததாகும்.
அதேபோல், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரியளவில் சேவையாற்றியிருக்கிறார். வில்பத்துவை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
ராஜபக் ஷ அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும் செல்வாக்கிருந்தது. இன்று முஸ்லிம் தலைவர்களால் வடக்கு கிழக்கில் எதனையும் செய்ய முடியாதுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டத்தின்போது முஸ்லிம்களுக்குப் பேச இடமளிக்கவில்லை. ஹக்கீம், ரிஷாட் போன்றோருக்கு முன் வரிசையிலும் ஆசனம் ஒதுக்கப்படவில்லை. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமுக்கோ மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கோ பேச சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. இப்படி முஸ்லிம்களை மேடையேற்றினால் சிங்கள வாக்குகள் இல்லாமல் போகுமென ஐ.தே.க. அஞ்சுகிறது. இப்படி எமது தனித்துவத்தை இழந்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆக, முஸ்லிம்களுடன் அன்னியோன்யமாக பழகும் ராஜபக் ஷாக்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு உரிய அந்தஸ்தும் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
Q: 2015 ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை கோத்தாபய ராஜபக் ஷவின் கீழிருந்தது. அப்போதிருந்தே அவருடனான நெருக்கம் ஏற்பட்டதா? அல்லது அரசின் மீதான விரக்தியால் ராஜபக் ஷாக்களுடன் இணைந்தீர்களா?
A:நான் மேயராக இருந்தபோது கொழும்பை அபிவிருத்தி செய்வதற்கு கோத்தாபய ராஜபக் ஷ எனக்கு துணை நின்றார். நான் ஐக்கிய தேசியக் கட்சி மேயர் என்று அவர் பிரித்துப் பார்த்ததில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் எங்களுக்கு காலை வாரியதுமில்லை. கொழும்பு நகரை முன்னேற்றுவதிலும் சீரமைப்பதிலும் அவர் சாதி, மத, கட்சி பேதங்கள் பார்க்கவில்லை. இவர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார். வீடு, தொடர்மாடிகள் அமைக்கப்பட்டபோது முஸ்லிம்களுக்கு சரிசமமான பங்கை வழங்கினார்.
இந்நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி, இஸ்லாத்துக்கு எதிராக சிந்தனா ரீதியில் பௌத்த மக்களை முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திய சம்பிக ரணவக்க, இன்று கொழும்பில் முஸ்லிம்களுக்கு வீடு வழங்குவதில் பின்வாங்குகின்றார். இப்போது முஸ்லிம்களுக்கு பாராமுகம் காட்டுவதைப்போல் அன்று கோத்தாபய செய்யவில்லை.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத் தப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் தலைவராக கோத்தாபய ராஜபக் ஷவைப் பார்க்கமுடியும். ஆகையால் அவரை ஜனாதிபதியாக்குவது சிறந்ததென தீர்மானித்தேன்.
முஸ்லிம்கள் இந்த தேர்தலில் மிகக் கவனமாக வாக்குகளை அளிக்க வேண்டும். நிச்சயமாக கோத்தாபய ராஜபக் ஷ நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக இருப்பார். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும்.-Vidivelli
- ஆக்கில் அஹமட்