நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களில் 70 வீதமானோர் வாக்களிப்பார்களாயின் முன்னைய காலங்களைப் போல் இத்தேர்தல்களிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் என்று பேராசிரியர் நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் எப்படி அமையப் போகின்றன என்பது குறித்து தனது ஆய்வுக்கண்ணோட்டத்தை வெளியிடும் போதே அரசியல்துறை நிபுணரும் பேராதெனிய பல்கலைக்கழக அரசியல்துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் நவரத்ன பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக 35 பேர் களமிறங்கியுள்ளார்கள். முதல் இரு போட்டியாளர்களிடையேயும் கடும் போட்டி நிலவுவதுடன் அடுத்து வருவோரும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடிய நிலை தோன்றுகிறது. இதனால் முதல் வருபவர் அளிக்கப்படும் வாக்குகளில் 50 வீதத்தைப் பெறத்தவறும் நிலையில் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை ஏற்படும். வாக்களிப்பில் தெற்கில் உள்ளோர் சிந்திப்பதைப் போன்று வடக்கு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம்களின் வாக்களிப்பு அமைவதில்லை. அவர்கள் வித்தியாசமான முறையிலே சிந்தித்து வாக்களிக்கிறார்கள்.
நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளது போன்றே சிங்கள –பௌத்த அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள்.
பெரும்பான்மையான சிங்கள, பெளத்த மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இன, மதவாதத்தைத் தூண்டி தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இதனை அங்கீகரிப்பதில்லை.
வட மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் 14 தேர்தல் தொகுதிகள் உள்ளன. அதேபோன்றே கிழக்கு மாகாணத்திலும் மூன்று மாவட்டங்களிலும் 10 தேர்தல் தொகுதிகள் உள்ளன.
இவற்றைத் தவிர தெற்கிலுள்ள குறிப்பிடத்தக்க ஒரு சில அரசியல்வாதிகள் இன, மத மற்றும் பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்தியே வாக்கு வேட்டையாடுகின்றனர். சிங்கள பௌத்தம் அல்லது கிறிஸ்தவ உணர்வைத் தூண்டுகின்றனர். ஆனால் மேலே குறிப்பிட்ட வடக்கு –கிழக்கு தொகுதி வேட்பாளர்கள் அவ்வாறு இனவாதத் தூண்டுதலில் ஈடுபடுவதில்லை. இதனால் இனவாதம், மதவாதம் பேசுவோருக்கு எதிராகவே தமிழ், முஸ்லிம்கள் வாக்களிக்கின்றனர். எனவே தெற்கின் இனவாத்திற்கெதிராகவே தமிழ், முஸ்லிம் வாக்குகள் அமைகின்றன. இதனால் அவர்களில் கணிசமானோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் போது அது தெற்கின் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியில் தாக்கம் செலுத்தவே செய்கிறது. இவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது போனால் தெற்கில் பெரும்பான்மை வாக்குப் பெறுபவர் வெற்றி பெறுவார்.
இன்றுள்ள தேர்தல்களத்தில் தெற்கிலுள்ள வாக்குகள் இரண்டாகப் பிரிபடுகின்றன. இந்நிலையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியமையாததாகின்றன.
2005, 2010, 2015 ஆகிய கடந்தகால ஜனாதிபதித் தேர்தல்களில் மொத்த வாக்களிப்பில் வடக்கு –கிழக்கு வாக்குகள் தான் பெரும் தாக்கத்தைக் கொடுத்தன என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாகும். ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கமைய 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாக்குகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான மகிந்த ராஜபக் ஷவுக்கும் இடையேதான் கடும்போட்டி நிலவியது.
இறுதிப் பெறுபேற்றில் மகிந்த ராஜபக் ஷ 4,887,152 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50.3% வீதமாகும். ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகள் 4,706,366 ஆகும். இது 48.4% வீதமாகும். மகிந்த 180,786 வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு வடக்கு –கிழக்கு வாக்குகளே ஆதிக்கம் செலுத்தின. அதாவது 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு –கிழக்கின் கணிசமான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதனால் அப்பகுதி தமிழ் மக்களுக்கு வாக்களிப்பைப் புறக்கணிக்கும் படி எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்டுப்பட்ட அம்மக்களில் கணிசமானோர் வாக்களிக்காது தவிர்ந்து கொண்டனர்.
வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 952,324. அவற்றுள் 94398 பேரே வாக்களித்துள்ளனர். அவ்வாக்குகளில் 71321 வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்துள்ளன. எனவே தவிர்க்கப்பட்ட வாக்குகளில் கணிசமான தொகை ரணிலுக்குக் கிடைக்கவிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே காலப்பிரிவில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக் ஷவுக்கு 28,836 வாக்குகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 121,514 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 953,936 ஆகும். அவற்றுள் 595,251 வாக்குகளே அளிக்கப்பட்டன. சுமார் 358,685 வாக்குகள் அளிக்கப்படாதுள்ளன.
2010 ஜனவரி 25 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் 30 வருட உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இடம்பெற்றதால் யுத்த வெற்றியின் தாக்கம் இதில் முன்னிலை பெற்றது.
இதில் 22 வேட்பாளர்கள் களத்தில் குதித்த போதிலும் இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களுக்கிடையேதான் கடும் போட்டி நிலை ஏற்பட்டது. 2005 முதல் ஜனாதிபதி பதவியில் இருந்த மகிந்த ராஜபக் ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆகிய இருவருமே முன்னிலை போட்டியாளர்களாக விளங்கினர்.
மகிந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திலும் சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக அன்னச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
மகிந்த வெற்றி பெற்ற போதிலும் வட மாகாணத்தில் சரத் பொன்சேக்காவே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முழு வாக்காளர் எண்ணிக்கை 988,334 ஆகும். இவற்றில் 298,898 பேரே வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அளிக்கப்பட்ட வாக்குகளில் 186,410 வாக்குகள் சரத் பொன்சேக்காவுக்குக் கிடைத்துள்ளன. இந்நிலையிலும் வடக்கில் சுமார் 7 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லையென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்றே கிழக்கு மாகாணத்திலும் மகிந்தவுக்குப் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் அளிக்கப்பட்ட வாக்குகள் 690,265 இல் 386,823 வாக்குகள் சரத் பொன்சேக்காவுக்கு அளிக்கப் பட்டுள்ளன. மகிந்த ராஜபக் ஷவுக்கு 2,72,327 வாக்குகள் மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் கிடைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மகிந்த அமோக வெற்றியீட்டிய போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்த வாக்குகளில் சரத் பொன்சேக்காவே வெற்றி பெற்றுள்ளார். இதே போன்றே இலங்கையில் வடக்கு கிழக்குக்கு வெளியே நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே பொன்சேக்காவால் மகிந்தவைவிட அதிகப்படியான வாக்குகளைப் பெறமுடிந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மொத்தமாக மகிந்த 6,015,934 வாக்குகளைப் பெற்றுள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு 4,173,185 வாக்குகளே கிடைத்துள்ளன.
2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின வாக்குகள் பெரிதும் தாக்கம் செலுத்திய தேர்தலாகும். இலங்கையில் அதிகாரத்திலிருந்த நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவர், மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட முதலாவது தேர்தலாக 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியது.
தனது இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கத்தக்க நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவினாலேயே தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டது.
இத்தேர்தலில் மகிந்தவுடன் நேரடியாக எதிர்த்தரப்பு அபேட்சகராக விளங்கியவர், அவரது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவேயாகும்.
அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமையப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பொது வேட்பாளராக அன்னச் சின்னத்திலே களமிறங்கினார்.
மகிந்த ராஜபக் ஷ கடந்த தேர்தல்களைப் போன்று வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிட்டார்.
வடக்கு–கிழக்கு மாகாணங்களில் அதிகூடிய வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார்.
வடக்கில் பதிவு செய்யப்பட்ட 782,297 வாக்குகளில் 2015 ஜனாதிபதித் தேர்தலில் 531,014 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 4 இலட்சம் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்தன.
முஸ்லிம் அரசியல் கட்சிகளது ஆதரவும் புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்தன. இதனால் மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மிகவும் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று இலகுவாக வெற்றியைத் தழுவிக் கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் அளிக்கப்பட்ட 816,769 மொத்த வாக்குகளில் 583,120 வாக்குகள் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார்.
மகிந்த ராஜபக் ஷவுக்கு 214,769 வாக்குகளே பெறமுடிந்தது.
முழு நாட்டிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 6,217,162 வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தன. இது 51.28% வீதமாகும்.
இதன் மூலம் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார்.-Vidivelli
- ஏ.எல்.எம்.சத்தார்