பிளவுபடும் முஸ்லிம் அரசியல்
தற்போது நிகழவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வே பேசு பொருளாகியிருக்கிறார். சஜித்தோ, கோத்தாபயவோ பதவியைப் பெற கணிசமான வாக்குகள் குறையுமாயின் இவர் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்வைத்துப் பேரம் பேசிப் பெற்றுக்கொடுக்கப் பதவி பெறச் செய்வாராம். இவரது முஸ்லிம் வாக்கு வங்கி காத்தான்குடியிலேயே இருக்கிறது. அதிலும் கூட இவர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுப் போனார். காரணம் இவர் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டதேயாகும். அத்தேர்தலில் இவர் ஐக்கிய தேசிய கட்சியிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலோ போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார்.
அதற்குப் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தயவால் தேசிய பட்டியல் எம்பியாகி இராஜாங்க அமைச்சரும் ஆகினார். பின்னர் கிழக்கு மாகாண ஆளுனருமாக்கப்பட்டு விலக்கப்பட்டார். இப்போது முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைத் திரட்டி அவற்றின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்வைத்துப் பேரம் பேசிப் பெற்றுக் கொடுக்கவென வேட்பாளர்கள் சம அளவு வாக்குகளைப் பெறுவார்களானால் இவர் ஒரு தரப்பைப் பதவி பெறச் செய்வாராம். இதன் மூலம் இவர் ஒரு முஸ்லிம் என்பதால் நாடு முழுக்க வாழும் முஸ்லிம்களில் ஏராளமானோர் இவருக்கு வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கிறார்.
வெறுமனே அமைச்சராக மட்டும் “நானும் நீங்களும்” ஆமா சாமி போடலாமே தவிர எதையும் செய்ய முடியாது. கடந்த ஐந்தாண்டுகளும் அப்படித்தான் முஸ்லிம் சமூகத்தை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இதனால் இவ்வாறு இருக்க முடியுமே தவிர சமூகத்துக்காகப் பேசும் சமூகத்துக்கு ஏற்படும் தடைகளை உடைத்தெறியும் தகர்க்கும் சக்தியாக நம்மால் இருக்கவே முடியாது. நான் 2000 ஆம் ஆண்டே இறந்து விட்டேன். அதன் பின் ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான். நான் யாருக்கும் அஞ்சுபவனோ, அஞ்சியதோ, அஞ்சப் போவதோ இல்லை.
எனது சர்வகலாசாலையை அல்லாஹ் பாதுகாப்பான். அதற்காகவல்ல, முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கவே நான் போட்டியிடுகிறேன். இன்னும் 25 ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்திருக்கிறேன். நான் தான் இந்த முஸ்லிம் தலைமைகளில் மூத்தவன். யாரதும் முகவரும் அல்ல, முஸ்லிம்களின் முகவர் ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை. அந்த அளவுக்கு நான் மடையனும் அல்ல. முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் சமூக உரிமைகளைக் காக்கும், வெற்றி பெறும் வேட்பாளருக்கே நாம் ஆதரவளிப்போம். நான் ஜனாதிபதி வேட்பாளரல்ல. வெற்றி பெறும் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேட்பாளர் என்றெல்லாம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறியிருந்தார்.
இப்படி நினைக்கவும் போட்டியிடவும் இவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றாலும் கூட, இதில் மதியூகம் உண்டா? இது யதார்த்தமான செயற்பாடா? என்பதையே இங்கு நோக்க வேண்டும். ஒருவரைப் பதவியேற்கச் செய்ய குறை, நிரப்பும் அளவுக்கு இவரால் முஸ்லிம் வாக்குகளைத் திரட்ட முடியுமா? ஹக்கீம் தரப்பு, ரிஷாத் தரப்பு, அதாவுல்லாஹ் தரப்பு, பஷீர் ஷேகுதாவுத் தரப்பு, ஐ.தே.க முஸ்லிம் தரப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் தரப்பு, ஜே.வி.பி. முஸ்லிம் தரப்பு, ஆகியவற்றோடு ஹிஸ்புல்லாஹ் தரப்பும் உருவாகிவிடும். இது முஸ்லிம்களை ஒவ்வொரு பகுதிகளிலும் கூறுபோடவே உதவும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் இதன் தாக்கம் நிச்சயம் உணரப்படும்.
ஹிஸ்புல்லாஹ்வின் குறைநிறைப்பு முஸ்லிம் வாக்குகளால் தான் சஜித்தோ, கோத்தாபயவோ பதவி ஏற்கும் நிலை ஏற்படும் என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். இவர் சஜித் பக்கம் சேர்ந்தால் கோத்தாபய தரப்பால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள். இவர் கோத்தாபய பக்கம் சேர்ந்தால், சஜித் தரப்பால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதுவரை அக்கட்சிகள் முஸ்லிம்கள் மீது காட்டி வந்த அபிமானம் அடியோடு அழிந்துவிடும். எனவே ஹிஸ்புல்லாஹ் தனியாகப் போட்டியிடுவதை விடவும் அதாவுல்லாஹ்வோடு சேர்ந்து கோத்தாபயவுக்கு ஆதரவளித்திருக்கலாம். இருபக்கமும் இருப்பதும் கூட பாதுகாப்பேயாகும்.
ஆக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இத்தேர்தலில் ஒரு வேட்பாளராகக் களம் இறங்கியிருப்பதே தற்போது பேசப்படுகிறது. அவர் வெல்வது முயற்கொம்பு என்றாலும் கூட, கோத்தாபய ராஜபக் ஷவுக்குச் சார்பாக முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளையேனும் பெற்றுக் கொடுக்கவே முகவராக நிற்கிறார் என்றே குற்றஞ்சாட்டப்படுகிறது. எனினும் அவர் முஸ்லிம்களின் வாக்குகளைத் திரட்டி சமூகக் கோரிக்கைகளை முன்வைத்து பதவிக்கான குறை நிறைப்பு செய்ய முடியும் என்கிறார்.
எனினும் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவது முஸ்லிம் வாக்குகளை திசை திருப்பும் சதியே ஆகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கிறார். முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகளும் இணைந்து எடுத்த முடிவை பலப்படுத்துவதை விடுத்து மற்ற அணிக்குத் துணை போவதென்பது முஸ்லிம் வாக்குகளைத் திசை திருப்புவதோடு எதிர்ப்பாளரை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கேயாகும் என இது பற்றி ரவூப் ஹக்கீம் தெளிவுபடுத்துகிறார்.
இதற்கு பதிலளிக்கையில் ஹிஸ்புல்லாஹ், நான் யாரது முகவராகவும் போட்டியிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முகவராகவே போட்டியிடுகின்றேன். தற்போது எனது உயிருக்கு ஆபத்து. நான் கொல்லப்பட்டால் தேர்தல் சட்டத்தின் படி உடனே இன்னொரு வேட்பாளரை நிறுத்தி இப்புனித போராட்டத்தை நாம் கொண்டு செல்ல முடியும் என்கிறார்.
அதாவுல்லாஹ்வின் நோக்கம் மஹிந்தராஜபக் ஷ மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு விடுதலையைப் பெறுவதாகும். இனி கட்டுப்பணம் செலுத்திவிட்டு வேட்பாளர் நியமனம் பெறாத பஷீர்ஷேகுதாவுத் சொல்வதைப் பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் நாம் வாக்களித்த வேட்பாளர் வென்றாலும் கூட சிறுபான்மைகளுக்கு எந்த நன்மையும் இல்லை. தோற்றால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்கிறார். மேலும் அவர் கூறுகையில் நான் கட்டுப்பணம் செலுத்திய செய்தி ஊடகங்களில் வெளியானது. நான் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யாத செய்தியும் வெளிவந்தது. இரண்டையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
நான் கட்டுப்பணம் செலுத்திய போது வேறு சிறுபான்மைகள் செலுத்தியிருக்கவில்லை. பின்பு தான் பலரும் முனைந்தனர். நான் கட்டுவதற்கு முன்பே தமிழ் பேசும் ஒரு பொது வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்னும் கருத்தை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்திய போதும் அது மக்களையும் சிறுபான்மைத் தலைவர்களையும் சென்றடைய கால அவகாசம் இருக்கவில்லை.
தமிழ், முஸ்லிம் கட்சிகளோடு சிறுபான்மை சமூக முக்கியஸ்தர்களும் பேசிப் பொது முடிவுக்கு வராது அத்தகைய வேட்பாளர் போட்டியிடுவது சாத்தியமற்றது என்பதை நான் முன்பே உணர்ந்திருப்பினும் அந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுத் தமிழ் பேசும் அரசியல் அரங்கில் அதற்கானவரை எதிர்காலத்தில் களமிறக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கை எனக்கு இருந்தது என பஷீர் ஷேகுதாவுத் கூறினார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்; இக்கருத்து சிறிதேனும் மக்களைச் சென்றடைந்து அவ்வாறு நிகழும் என்றே நினைத்தேன். எனினும் அது நிகழவில்லை. அதன் பிறகே நான் கட்டுப்பணம் செலுத்துகையில், வேட்புமனுத்தாக்கல் செய்வதில்லை என முடிவு செய்தேன். 2005 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் வாக்களிக்காததால் தான் மகிந்த ஜனாதிபதியானார். 2010 ஆம் ஆண்டும் தமிழரின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு மிகக் குறைந்தமையும், முஸ்லிம்களின் வாக்குகள் அதிகரித்தமையுமே அவரை ஜனாதிபதியாக்கியது. 2015 ஆம் ஆண்டு தமிழரும், முஸ்லிம்களும் ஏகோபித்து வழங்கிய வாக்குகளே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது.
2005 ஆம் ஆண்டு தமிழர் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்ததாலேயே அவர்களின் ஆயுதப் போராட்ட அரசியல் முடிவுக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு எதுவும் அமையவில்லை. 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை தமிழ் பேசும் மக்கள் எதுவும் அடையவில்லை. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்பும் கூட இற்றை வரை வீணாகிப்போனது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005 ஆம், 2010 ஆம் ஆண்டு தேர்தல்களில் நானே தலைமை தாங்கி நடாத்தியிருந்தேன். விகிதாசார அடிப்படையில் மாவட்ட ரீதியில் ரணிலும் சரத்பொன்சேக்காவும் அங்கு தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
எனினும் 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் நான் மட்டக்களப்பு மாவட்ட எம்பியாக இருந்தும் கூட எந்த கட்சிக்கும், எந்த வேட்பாளருக்கும் வேலை செய்யவும் இல்லை, வாக்கை அளிக்கவும் இல்லை. சிறுபான்மைகள் ஒரு வேட்பாளருக்கே ஆதரவாக இருந்ததால் நான் பெற்ற அனுபவம் காரணமாக அவநம்பிக்கை ஏற்பட்டிருந்ததே அதற்குக் காரணமாகும். அதனால் தான் நிகழவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நமது வாக்கைப் பெற்ற வேட்பாளர் வென்றாலும் கூட சிறுபான்மைகள் எந்த நன்மையையும் பெறமாட்டார்கள். தோற்றுவிட்டால் நிலைமை மேலும் மோசம் என்னும் நம்பிக்கையே தமிழ் பேசும் பொது வேட்பாளர் என்னும் கருத்தை நான் கூறக்காரணமாக அமைந்தது.
எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் உணர்ச்சியாக முடிவெடுத்து ஏமாந்து புது வேட்பாளரைத்தேடும் போக்கை விட்டும், தமிழ் பேசும் சமூகம் விடுபட்டு, அறிவு பூர்வ முடிவை எடுக்கவும் சிந்தனாபூர்வ தலைமைகளை வருங்காலத்தில் உருவாக்கவும் முன்வரவேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவாகவும், தனித்தனியாகவும் பல பிரச்சினைகளும் அபிலாஷைகளும் இருக்கின்றன. தமிழ், முஸ்லிம் தேசிய அரசியல்களுக்கு சிங்களப் பெருந்தேசிய அரசுகளோடு உடன்படவும், முரண்படவும் நிறைய விடயங்களும் உள்ளன. இவற்றில் நாம் இணைந்து உறுதியோடு நின்றே செயற்பட வேண்டியிருந்தது என பஷீர்ஷேகுதாவுத் அபிப்பிராயப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு அஷ்ரப் தனது 4 ஆசனங்கள் மூலம் சந்திரிக்கா பிரதமராக உதவியபோது அந்த ஆசனங்களை எதிர்பார்த்துக் கிடைக்காத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது போயிற்று. அதன் விளைவாக “நானா நெதுவ நோனா நே” என்றார்கள். ஒரு முறை சேர் ராசிக் பரீத் கட்சி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது. “நானாகே தொப்பிய ஹரிச்ச ஹரிச்ச பெத்த கட” என்றார்கள். அதுபோன்ற நிலை தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களுக்குப் பாரிய பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
ஹிஸ்புல்லாஹ் இப்படிக் கூறுகின்றார். நான் யாரது முகவராகவும் போட்டியிடவில்லை. முஸ்லிம்களின் முகவராகவே போட்டியிடுகின்றேன். இப்போது எனது உயிருக்கு ஆபத்து. நான் கொல்லப்பட்டால் தேர்தல் சட்டத்தின்படி உடனே வேறொரு வேட்பாளரை நிறுத்தி இப்புனித போராட்டத்தை எம்மால் கொண்டு செல்ல முடியும். நான் எந்நேரமும் படுகொலை செய்யப்படலாம். அதற்காக சர்வதேச சக்திகளின் வலைப்பின்னல்கள் பின் தொடர்கின்றன.
முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். ரவூப் ஹகீம், ரிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்களே உங்கள் இதயங்கள் மீது கைகளை வைத்துச் சிந்தியுங்கள். நாம் முகம் கொடுக்கும் இத்தேர்தலுக்குப் பின் வரப்போகும் காலம் எத்தனை பயங்கரமானது. சகல சட்டங்களையும் அதிகாரங்களையும் பறித்து அடிமைகளாக்கத் திட்டமிடும் எதிரிகள் இரு முகாம்களிலும் இருக்கின்றனர்.
அண்மையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவைக் கண்டு முஸ்லிம் தலைமைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வரும் தமது அபிலாஷைகளை வெளியிடுமாறு கூறியுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச இவரது வீட்டுக்கும், அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் வீட்டுக்கும், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டுக்கும் வந்து பேசியபோது இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தார்களாம்.
*-முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
* நாட்டின் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும்.
*நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் தீர்வு வேண்டும் என்றார்களாம். பின்னர் இம்மூவரும் ஏ.எச்.எம்.பௌசி எம்பியின் வீட்டில் கூடி அவருடன் இணைந்து ஒரு வரைபையும் தயாரித்தார்களாம்.
*முஸ்லிம்களின் பாதுகாப்பு.
*முஸ்லிம்களின் உரிமைகள்.
*முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை.
*முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்.
*நாட்டின் தேசிய ஒற்றுமை.
*இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்னும் விடயங்கள். அந்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம். அந்த விஞ்ஞாபனம் அச்சிடப்பட முன் ஒரு நகலைப் பார்வைக்கு வழங்குமாறும் இவர்கள் கூறியுள்ளார்களாம். பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் அவரது இல்லத்தில் கூடி ஆராய்ந்தும் சஜித் பிரேமதாசவிடம் பல விடயங்களை முன்வைத்ததாம்.
*முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
*வடக்கிலிருந்து விரட்டப்பட்டு நெடுங்காலமாக மீள் குடியேற முடியாத மக்களின் பிரச்சினைகள்
*வடக்கு, கிழக்கு கிராமங்களின் எல்லைப் பிரச்சினை.
* முஸ்லிம்களின் பாதுகாப்பு விவகாரம்
*முஸ்லிம்களின் கல்வி விடயம்
*மௌலவி ஆசிரியர் நியமனம்
*பொருளாதாரப் பிரச்சினைகள் என்னும் கோரிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீடத்தின் சஜித் பிரேமதாசவிடம் சமர்ப்பித்தனராம்.
*பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுவது தடை செய்யப்பட வேண்டும்.
*முழுமையான சட்ட அமுலாக்கம் நாட்டில் வேண்டும்.
* சட்டத்திற்கு முன் யாவரும் சமம் எனக் கருதப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனராம். அவற்றை ஏற்று கவனத்திற் கொள்வதாக சஜித் பிரேமதாச கூறியதால் விஞ்ஞாபனத்தில் உள்ளாக்கப்படும் என்னும் நம்பிக்கை உண்டாம்.
முன்பு ரவூப் ஹக்கீமின் கோரிக்கைகளில் கொழும்பு முஸ்லிம்களின் விடயங்களையும் உள்ளடக்கியிருந்தார். அஷ்ரபின் தனித்துவ முஸ்லிம் சமூகப்போராட்டத்துக்கு கொழும்பு வாழ் முஸ்லிம்களே முதுகெலும்பாக இருந்தார்கள். அந்த வகையில் அவர் இம்முறை நன்றிக்கடன் செலுத்தியிருப்பதைக் கண்டு அதில் ஒரு பங்காளியாக இருந்தவன் என்னும் வகையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் அவர் அஷ்ரபின் அடிப்படைக் கோரிக்கைகளான முஸ்லிம் அலகையும் கரையோர மாவட்டத்தையும் கைவிட்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது?
வடக்கு, கிழக்கில் நில அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு செய்யப்படுகையில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகை கோர முடியுமாயினும் கரையோர மாவட்டத்தை கோராதிருக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. சிங்கள மக்களுக்கு 18 மாவட்டங்களும் தமிழ் மக்களுக்கு 7 மாவட்டங்களும் என்றால் முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டமும் இல்லாதது ஏன்? 1949 ஆம் ஆண்டு கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை நிகழ்த்தியே அதை சிங்கள மாவட்டமாக மாற்றினார்கள். அதுவே இப்போது திகாமடுல்ல என அழைக்கப்படுகின்றது. அங்கு பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியே அஷ்ரப் கரையோர மாவட்டத்தைக் கோரியிருந்தார்.
1988 ஆம் ஆண்டு அவர் கோரிக்கை விட்டபின் 2000 ஆம் ஆண்டு அவர் இறந்த போதும் கிடைக்கவில்லை. தற்போது 30 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. அஷ்ரப் உருவாக்கிய கட்சியும் செய்யவில்லை அதிலிருந்து பிரிந்த கட்சியும் செய்யவில்லை. முஸ்லிம் அலகு பற்றிய விடயத்தைத் தமிழ் தரப்புடனே பேசித்தீர்த்துக்கொள்வோம்.ஏனெனில் இணைப்பின் மூலம் தான் அது சாத்தியமாகும். முஸ்லிம்களுக்கான அதிகாரப் பரவலுக்குரிய உரிமைகளை வழங்காது தமிழ்த்தரப்பால் இணைக்க முடியாது.
எனினும் தேசிய இனம் என்னும் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வதாயின் மற்ற இனங்கள் அனுபவிக்கும் சகல பாக்கியமும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தாகவேண்டும்.
“பேசிப் பேசி கிழவன் கட்டிலுக்கு மேல் ஏறினானாம்” என்பது போல் இருந்தது, அண்மையில் நிகழ்ந்த தொகுதி நிர்ணய செயற்பாடு. அஷ்ரப் கரையோர மாவட்டமாகக் கோரியிருந்த பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பாதி பாதி மீதிப் பகுதிகளை பிரித்தெடுத்து மூன்று சிங்களத் தேர்தல் தொகுதிகளை உருவாக்க முயன்றார்கள். 21 முஸ்லிம் எம்பிக்களுக்குப் பதிலாக, 13 முஸ்லிம் எம்.பிக்களாகக் குறைக்கப் பார்த்தார்கள். இப்போதைக்கு இவை நிகழவில்லை. முஸ்லிம்களும் பங்களித்திருக்கும் இந்த அரசிலேயே இப்படியென்றால் பேரின அரசு உருவானால் நிலை எப்படி இருக்கும்? – Vidivelli
- ஏ.ஜே.எம்.நிழாம்