கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 'விடிவெள்ளி'க்கு வழங்கிய செவ்வி
பயங்கரவாதத்துக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு, அக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், 32 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ‘விடிவெள்ளி’க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலை இங்கு தருகிறோம்.
நேர்காணல்: எம்.பி.எம். பைறூஸ்
உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணையாளர்களிடம் என்ன பதிலளித்தீர்கள். அவர்கள் அதில் திருப்திப்பட்டார்களா?
விசாரணை என்று வந்த பிறகு நான் எடுத்துக்கொண்ட முதலாவது தீர்மானம் அவர்களது விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பது என்பதுதான். எனவே சளைக்காமல் முகம் சுளிக்காமல் ஒரு கேள்வியை எத்தனை முறை எத்தனை பேர் கேட்டாலும் அந்தக் கேள்விக்குரிய பதிலை அமைதியாகக் கூறினேன். சில பதில்களை வழங்குவதற்கு என்னை விடத் தகுதியானவர்கள் எனது அமைப்பில் இருந்தார்கள். அவர்களை அழைக்குமாறு கூறினேன். அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். வாக்குமூலமும் வழங்கினார்கள். மேலும் சில கேள்விகளுக்கு ஆவணங்களால் பதில் கூற வேண்டியிருந்தது. எனவே இந்த ஆவணத்தை எடுத்துவாருங்கள் என்று கூற அவர்கள் தலைமையகத்திற்குச் சென்று குறித்த ஆவணத்தைப் பெற்றுவந்தார்கள். இவ்வாறு நான் சம்பந்தப்பட்ட மற்றும் எனது அமைப்பு சம்பந்தப்பட்ட சந்தேகம் எதுவாயினும் வாய் மொழி மூலமாகவோ ஆவணங்கள் மூலமாகவோ அல்லது தகுதியான நபர்களை வரவழைத்தோ பதில் கூறாமல் விட்டதில்லை என்றே கூற வேண்டும்.
இந்தப் பதில்களால் அவர்கள் அடைந்த திருப்தியை என்னால் ஊகிக்க முடியுமாக இருந்தது. தயக்கமற்ற உடனடியான பதில்கள் மற்றும் அவற்றிலிருந்த தெளிவு, ஆதாரங்களை வழங்கி அவர்களது விசாரணைகளுக்குக் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பு என்பன என்னைப் பற்றிய மற்றும் நான் சார்ந்திருக்கும் அமைப்பு பற்றிய சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறுகின்ற நிலையில் உங்களது கைதின் பின்னணியில் சில வெளிச் சக்திகளின் தலையீடுகள் இருக்கலாம் எனக் கருதுகின்றீர்களா?
இஸ்லாமோபோபியாவின் சர்வதேசத் தன்மையோடு இணைத்துப் பார்க்கும் போது அந்த ஊகத்தை மறுக்க முடியாது. எனினும் எந்த வெளிச் சக்தி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை சரியாகக் கூறுவதற்கான ஆதாரங்கள் என்னிடமில்லை.
இருப்பினும் விசாரணைகளின் போது தெரிய வந்த விடயம் மற்றொன்றிருக்கிறது. உள்ளூரில் எமது சமூகத்தின் உடன் பிறப்புகள் சிலர் தான் காட்டிக் கொடுக்கும் வேலையை நன்கு செய்திருக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அத்தகையவர்களின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. எனினும் அவர்களைப் பற்றி ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகின்றேன். காட்டிக் கொடுத்தவர்களுள் எவரும் ஜமாஅத்தின் உள் விவகாரங்கள் எதிலும் நேரடியாக சம்பந்தப்பட்டு உண்மை நிலைமைகளை அறிந்திருந்தவர்களல்லர். வீசிய புயல்களில் அடிபட்டு ஜமாஅத்தின் வெளிச்சுவர்களில் முட்டிச் சென்றவர்களாகத் தான் அவர்கள் காணப்படுகிறார்கள். கலந்துரையாடுகின்ற, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற சபைகளில் அவர்கள் எங்கும் எப்போதும் இருக்கவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
விசாரணையாளர்கள் ஆரம்பத்தில் உங்களோடு கடுமையாக நடந்துகொண்டதாகவும் பின்னர் மிகுந்த மரியாதையோடு உங்களை நடத்தியதாகவும் அறிந்தோம். இது பற்றி…?
உண்மைதான். அவர்களது கடுமை நாவில் இருந்தது. கைகளால் கடுமையை அவர்கள் காட்டவில்லை. நான் முதன் முறையாக எனது வாழ்வில் சந்தித்த விசாரணை என்பதால் விசாரணை எப்படியிருக்கும் என்பதையும் அங்கு போன பின்பே அறிந்து கொண்டேன்.
சந்தேகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அமர்த்தப்பட்டவர்கள் அவர்கள். அந்த வேலையை அவர்கள் செய்தே ஆக வேண்டும். அது அவர்களது அரச கருமம். அவர்கள் கடுமையாக இருந்தாலும் மென்மையாக நடந்தாலும் நான் அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஏற்கனவே வந்திருந்தேன். சந்தர்ப்பங்கள் வரும் போது இஸ்லாம் பற்றிய அவர்களது சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை வழங்கினேன். அவர்களது உணர்வுகளை மதித்து நடப்பதிலும் கவனம் செலுத்தினேன். அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் இதயங்களை சுமந்த மனிதர்கள் தானே. எனது முழுமையான ஒத்துழைப்பு அவர்கள் என்னை மரியாதையாக நடத்துவதற்குக் காரணமாக அமைந்தது என்று கூறலாம்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 நாட்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் என்ன?
பயங்கரவாத தடைச் சட்டத்தின் நடைமுறைகள் சிலவற்றைப் படித்துக் கொண்டேன். அத்துடன் சில வாரங்கள் சிங்களம் பேசும் மக்களோடு இரவு பகலாக வாழக்கிடைத்த அனுபவத்தைக் குறிப்பிடலாம். எனது 59 வருட வாழ்க்கையில் அது முதலாவது அனுபவம். அந்த அனுபவம் சிங்கள மொழிப் பரிச்சயத்தை சிறிது விருத்தி செய்து கொள்ள உதவிய அதே வேளை சிங்கள மக்களது பரிச்சயத்தையும் எனக்குத் தந்தது எனலாம். ஏப்ரல் 21 தாக்குதல் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி மோசமானதொரு பதிவை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர்கள் சகிப்புத் தன்மையுடையவர்களாகவே தென்பட்டார்கள்.
ஒரு சம்பவத்தைக் கண்டு எனது உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. TID இல் வேலை செய்கின்ற சிலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அங்கேயே இரவு தங்குகிறார்கள். ஒரு பெண் அதிகாரி (அதிகாரியாக இருக்கலாம்) ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றைத் தூக்கிக் கொண்டு நான் தங்கியிருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்த ஒருவர் ‘அப்துல்’ என்று அந்தக் குழந்தையை அழைக்க அந்தக் குழந்தையும் உடனே அவரிடம் தாவிச் சென்று சிரித்து விளையாடியது. பின்னர் அந்தப் பெண் அங்கிருந்து திரும்பிச் செல்லும் போது ”அப்துல்லாஹ் என்ட யங்” என்று கூறி பிள்ளையை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது ஏப்ரல் 21 தாக்குதலில் வெடித்துச் சிதறிய ஜமீல் என்பவரின் மகன் தான் அந்தக் குழந்தை என்று. அக் குழந்தை தாயுடன் TID இல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதியின் அந்தப் பிள்ளையை அவர்கள் மகிழ்ச்சியோடு தூக்கி அணைத்து விளையாடுகின்றார்கள்.
இந்த மனித உள்ளங்களைப் புரிந்து கொள்ளாமல் பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் குண்டு வைத்துக் கொலை செய்த பாதகர்களை எண்ணி எனது மனம் திடுக்கிட்டது. அது மட்டுமல்ல தடுத்து வைக்கப்பட்ட 32 நாட்களுக்குள் CCD மற்றும் TID தலைமையகம், TI வெலிசறை முகாம் ஆகிய மூன்று இடங்களுக்கு என்னை மாற்றினார்கள். அதனால் அதிகமான முகங்களோடு அறிமுகமாவதற்கும் பழகுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
TID வெலிசறை முகாமில் ஒரு மேலதிகாரியை சந்தித்தேன். அவர் மிகவும் நேர்மையானவர், கடமையுணர்வு மிக்கவர் என்பதை அறிந்து கொண்டு அவருடன் சந்திப்புக்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கேட்டேன். அவர் என்னை அழைத்து கதைத்து விட்டு பௌத்த மதத்தைப் பற்றி நீண்ட விளக்கத்தைத் தந்தார். நன்றி கூறிவிட்டு எனது விளக்கத்தைக் கேட்பதற்காக மற்றுமொரு சந்தர்ப்பம் தருவதாகக் கூறினார். அதற்கிடையில் நான் விடுதலையாகிவிட்டேன். என்னைப் பொறுத்த வரை தடுப்பு முகாமின் நெருக்கடிகள் இரவுகள் போலவும், அனுபவங்கள் பகல்கள் போலவும் இருந்தன என்றே கூறலாம்.
தடுப்பு முகாமில் நீங்கள் சந்தித்த முஸ்லிமல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் தெளிவுகளை வழங்கியதாகக் கூறியிருந்தீர்கள். இஸ்லாம் தொடர்பில் அங்குள்ளவர்களது மனோநிலை எவ்வாறிருந்தது?
அவர்கள் குழப்பங்களற்ற அமைதியானதொரு நாட்டை விரும்புகிறார்கள். அந்த அமைதிக்கு வழிகாட்டும் ஒன்றாகவே மதங்கள் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இஸ்லாம் அவ்வாறில்லை என்ற பதிவும் அவர்களிடம் இருக்கிறது.
அவர்களது இந்த மனோ நிலையை விளங்கிக் கொள்ளாமல் அவர்களோடு புரிந்துணர்வை ஏற்படுத்துவதென்பது கடினமானது. அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து பல்வேறு பயங்களோடு வாழ்கிறார்கள். இந்தப் பயங்களை விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கும் சில தீயசக்திகள் முற்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இந்த உண்மையை மனதில் இருத்திய நிலையிலேயே இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய விளக்கங்களை நான் வழங்கினேன்.
பிற மத சகோதரர்களோடு இஸ்லாம் பற்றி கலந்துரையாடும் போது மற்றொன்றையும் நாம் மறந்துவிடலாகாது. அது தான் சமகால உலகமாகும். நாங்கள் நேற்றைய உலகத்தை மனதில் இருத்திய வண்ணம் கலந்துரையாடினால் இன்றைய உலகில் வாழ்பவர்கள் அதனை சீரணிக்க மாட்டார்கள்.
ரோம, பாரசீக சாம்ராஜ்யங்கள் இருந்த காலப் பகுதியில் தான் உலக வரலாற்றில் முஸ்லிம்களும் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அன்றைய உலக நடைமுறைக்கு அது ஏற்புடையதாக இருந்தது. இன்றைய சூழலில் வாழ்பவர்கள் இறைமையுள்ள அரசாங்கங்களையும், ஜனநாயக வழிமுறைகளையும், மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்களையும் அவற்றிற்கான சர்வதேச சட்டங்களையும் கொண்ட ஒரு உலகைக் காண்கிறார்கள். இன்றைய இந்த உலகிற்கு ஏற்புடையதாக இஸ்லாத்தை நாம் முன்வைக்கத் தவறினால் இஸ்லாம் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுக் காலாவதியாகிவிட்ட மார்க்கமாகவே பார்க்கப்படும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் விசாரணைகளோடு வாழ்ந்த 32 நாட்களில் எனக்குக் கிடைத்தது என்றே கூறவேண்டும்.
இஸ்லாம் பற்றியோ முஸ்லிம்கள் பற்றியோ இன்று நாம் அவர்களுடன் பேசும் போது சமகாலம் பற்றிய அவர்களது பார்வைகளை அலட்சியம் செய்த நிலையில் கருத்துக்களை முன்வைத்தால் அவை செல்லாக் காசுகளாகவே மாறும் என்பது அங்கிருந்த போது எனக்குள் ஏற்பட்ட அச்சமாகும் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட மற்றும் தொடர்புபட்டிராத நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் உங்களோடு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களது நிலைமைகள் அங்கு எவ்வாறுள்ளன?
அவர்களது கூற்றுப்படி விசாரணைகள் முற்றுப் பெற்றிருக்கின்றன. அடுத்த கட்டத்துக்கு நாம் நகர்த்தப்பட வேண்டும். எனினும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களது பிரச்சினையாக இருக்கின்றது.
அவர்கள் கூறிய சுவாரஷ்யமான விடயம் யாதெனில் விசாரணையாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு நடந்தவைகளை ஒளிவு மறைவின்றி நாங்கள் ஒப்புவித்து விட்டோம். எல்.ரி.ரி.ஈ கைதியொருவரிடம் ஒரு வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு ஆறு மாத காலங்கள் செல்லும் என்றும் நீங்கள் கேட்பதற்கு முன்பே நடந்தவைகளைச் சொல்லி முடிக்கின்றீர்கள் என்றும் விசாரணையாளர்களில் சிலர் சொல்லி ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்கள்.
எந்தத் தவறையும் செய்யாதவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லாததனால் சில அசௌகரியங்களுக்கு ஆரம்பத்தில் முகம்கொடுத்தாலும் பின்னர் அவர்களைப் பற்றிய உண்மைகளை விசாரணையாளர்கள் புரிந்திருப்பதாகவும் அறியக் கிடைத்தது. அத்தகையவர்கள் ஒவ்வொருவராகத் தற்போது விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். ஏனையோருக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும் வருகின்றன. அதனை அவசரமாக செய்தால் நல்லது என்பதே அவர்களது விருப்பமாகவும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை வெடித்துச் சிதறிய தற்கொலைக் குண்டுதாரிகளை சபிக்காத எவரையும் நான் காணவில்லை. குண்டுதாரிகளின் நெருங்கிய சொந்தங்களும் அவர்களைச் சபிக்கிறார்கள். அங்கு சென்ற பிறகு தான் நான் அவர்களோடு அறிமுகமாகினேன். எனது தூரத்து உறவினர்கள் மூன்று பேர்களைத் தவிர.
அவர்கள் அனைவரும் ஒரு புதிய வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்று தான் அவர்களது அனுபவம் எனக்கு எடுத்துக் கூறுகிறது. அங்கு வந்த பின்னர் நிறையப் பாடங்களைக் கற்றிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இந்தக் கைது உங்கள் குடும்பத்தினர், ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினர் உட்பட இலங்கை முஸ்லிம்களைக் கவலையில் ஆழ்த்தியிருந்தது. இதற்கப்பாலும் உங்களது கைதைப் பலரும் கண்டித்ததுடன் பல உள்ளூராட்சி மன்றங்களில் உங்களை விடுவிக்கக் கோரி பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் இந்த பிரதிபலிப்பு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
நீங்கள் குறிப்பிட்டது போல் எனது கைது தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகம் உட்பட பிறமத சகோதரர்கள் பலரும் வெளிப்படுத்திய கவலையும் விடுதலை குறித்து அவர்கள் செலுத்திய கரிசனையும் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத நன்றிப் பிரவாகத்தை எனதுள்ளத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன. குறித்த அனைவரதும் உலக மறுமை ஈடேற்றங்களுக்காக மனமுருகிப் பிராத்திக்கின்றேன்.
என் விடயத்தில் செலுத்தப்பட்ட இந்தக் கரிசனை குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்வது பொருத்தம் என்று கருதுகின்றேன்.
விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் என்னைப் பற்றிய பிழையான தகவல்களைக் கொடுத்ததன் விளைவாகவே உண்மையில் நான் கைது செய்யப்பட்டேன். அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அதே நேரம் வேறுபாடுகளை மறந்து ஆயிரக்கணக்கான உள்ளங்கள் அழுது தொழுது பிரார்த்தனை புரிந்ததற்கும் எனது விடுதலைக்காக ஒன்றிணைந்து உழைத்ததற்கும் இந்தக் கைது தான் காரணமாக அமைந்தது.
ஒரு சிரமத்துக்குள் ஒரு சுகத்தைக் காண முடியும் என்ற குர்ஆனின் கூற்றை இதன் மூலம் அனுபவிக்க முடிந்தது என்று கூறுவது மிகையாகாது என்று நினைக்கிறேன்.
அதே வேளை நான் ஒரு இயக்கம் சார்ந்தவனாக இருந்தாலும் சமூகத்தளத்தில் நின்று பேசிய, எழுதிய இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனைகளுக்கு மக்கள் வழங்கிய நேர் சாட்சியமாகவே இதனை நான் பார்க்கின்றேன். எனவே பெருமைகள் அனைத்தும் நடுநிலை மார்க்கத்திற்கே சேரும். நாட்டுக்கோ, சமூகத்திற்கோ, மார்க்கத்திற்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் தீவிரவாத சிந்தனைகளை மார்க்கத்தின் பெயரால் விதைத்த ஸஹ்ரானுக்கும் சமூகம் சாட்சியம் வழங்கியிருந்தது. அது எதிர் சாட்சியமாகும். இத்தகைய சாட்சியங்கள் மனிதர்களுக்குக் கிடைப்பவைகள் அல்ல. மாறாக அவர்கள் சுமந்த சிந்தனைகளுக்குக் கிடைப்பதேயாகும். “மனிதர்கள் அறியப்படுவது அவர்களது சிந்தனைகளால் அன்றி சிந்தனைகள் அறியப்படுவது மனிதர்களால் அல்ல” என்ற எமது முன்னோர்களின் கூற்றும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
உங்களது விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகளின் முயற்சிகள் ஒரு புறமிருக்க முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தங்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஏப்ரல் 21 போன்ற பாரிய அனர்த்தமொன்றின் பின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்காக குரல் எழுப்புவதற்கு எவரும் துணியமாட்டார்கள். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட சிவில் சமூகம் ஒன்றிணைந்து எழுப்பிய குரலானது ஒரு மனிதனுக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதை விட வெட்ட வெளிச்சமானதொரு உண்மைக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதே உண்மை. அந்தக் குரலுக்குக் காது கொடுப்பதானது சட்டத்தின் குரலுக்குக் காது கொடுப்பதனை விடக் கனதியானது என்றே கூற வேண்டும். அந்த வகையில் இந்தக் குரலுக்கு “அழுத்தம் கொடுத்தல்” என்ற கற்பிதம் பொருத்தமற்றது என்பதே எனது கருத்தாகும். “உண்மையின் குரலுக்கு உலகம் தலை சாய்க்கும்” என்பதே இங்கு நடைபெற்றிருக்கின்றது. அதனால் சட்டத்தரணிகளின் பங்களிப்புக்கான நேரம் வருவதற்கு முன்பே விடுதலை நிச்சயமாகிவிட்டது. இது உண்மையில் ஓர் அழுத்தமல்ல.
உங்களது வாழ்வை கைது செய்யப்பட முன்னர், கைது செய்யப்பட்ட பின்னர் என்று பிரித்து நோக்கினால் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்?
உண்மையில் அது ஒரு பிரிகோடு தான். கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை என்னால் கூறமுடியாதிருக்கிறது. தடைகள் பலவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியதொரு பயணம் அது. – Vidivelli