நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிறு சிறு இனவாத தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த வாரம் மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த பிரதேசத்திலும் நேற்று முன்தினம் அவிசாவளை, நாபாவலவிலும் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.
அவ்வப்போது ஏற்படும் தனிப்பட்ட முரண்பாடுகளை வேண்டுமென்றே பூதாகரமாக்கி இரு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக காண்பித்து வன்முறைகளைத் தோற்றுவிப்பதுடன் அவற்றை ஏனைய பிரதேசங்களுக்கும் பரவச் செய்வதே இவ்வாறான இனவாத சக்திகளின் நோக்கமாகும்.
தேர்தல் ஒன்று நெருங்குகின்ற நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை முன்னிறுத்தியும் இவ்வாறான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் வடக்கு கிழக்குக்கு வெளியே பெரும்பான்மை சமூகத்துடன் இரண்டறக் கலந்து வாழும் மக்கள் அடுத்து வரும் நாட்களை மிகவும் கவனமாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோன்றுதான் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் ஆரம்பமான முஸ்லிம்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் சம்பவங்களும் இன்று வரை தொடர்ந்த வண்ணமேயுள்ளன. கடந்த வாரம் அவ்வாறான இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் உட்புறம் வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டி அப்பாவி முஸ்லிம் பெண் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டு அப் பெண் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது கணவரை வெளியூரிலுள்ள தனது பிள்ளைகளுக்கு நேரடியாக வீடியோவாக காண்பித்த போதே அவர் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார்.
அதேபோன்றுதான் கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியை வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டி நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் பரவலாக இடம்பெறுவதானது முஸ்லிம் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை கடந்த வாரம் சர்வதேச நெருக்கடிகள் குழு வெளியிட்ட அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
”தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இருந்த குழுவினர் தெளிவாக இனங்காணப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் அரசியல்வாதிகளும் சிங்கள தேசியவாதிகளும் ஏப்ரல் குண்டுத் தாக்குதலை முஸ்லிம் சமூகத்தை துன்புறுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக கையாண்டு வருகின்றனர்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”இலங்கையின் தலைவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டுமானால் சட்டத்தை மதித்து நடக்கும் முஸ்லிம் பிரஜைகளை அந்நியப்படுத்துவதை நிறுத்துவதுடன் சீர்குலைந்துள்ள நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலும் இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு நாட்டின் தலைமைகள் முன்வர வேண்டும். தேர்தல் அண்மிக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதைக் கட்டுப்படுத்துவதற்கான அழுத்தங்களை முஸ்லிம் தலைமைகள் வழங்க முன்வர வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகமும் இனவாதிகளின் வலைகளில் சிக்காது எதிர்வரும் நாட்களில் மிகுந்த நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli