நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் செயற்பட்டு வருவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன.
அதனால் போலி உம்ரா முகவர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உம்ரா முகவர் நிலையங்களூடாகவே பயணங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் கருத்து தெரிவிக்கையில், திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத உம்ரா முகவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறான முகவர்களால் ஏமாற்றப்பட்டால் அதற்கு திணைக்களம் பொறுப்பாக மாட்டாது. நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் இவ்வாறான முகவர்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவ்வாறு ஏமாற்றப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளாது உம்ரா பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், பதிவு செய்து கொள்ளாது இயங்கி வரும் முகவர்கள் உடனடியாக திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளார்கள் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
உம்ரா பயணத்தை திட்டமிட்டுள்ளவர்கள் தாம் பயணம் மேற்கொள்ளும் முகவர் தொடர்பிலான விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
– ஏ.ஆர்.ஏ.பரீல் / Vidivelli