அடுத்த வருட ஹஜ் கடமையை பிரச்சினைகள் எதுவுமின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
இதனடிப்படையில் அடுத்த வருடத்திற்கான ஹஜ் கடமையை 25 ஆயிரம் ரூபா மீள கையளிக்கப் படக்கூடிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு கோரப்படவுள்ளார்கள். இது தொடர்பில் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் கருத்து தெரிவிக்கையில், “ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் நிலுவையில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணத்தை உறுதி செய்யுமாறு விரைவில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அடுத்த வருடத்திற்கான ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவின்போது ஏற்கனவே பதிவுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் விண்ணப்பதாரிகள் மற்றும் ஹஜ் முகவரொருவரின் ஊழல் காரணமாக இறுதி நேரத்தில் ஹஜ் கடமையைத் தவறவிட்ட 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் என்போருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. கடந்த வருடங்களைப் போன்று அடுத்த வருட ஹஜ் யாத்திரிகர்கள் அவர்கள் விண்ணப்பித்துள்ள ஒழுங்கு முறைக்கேற்பவே தெரிவு செய்யப்படுவார்கள்.
ஊழல்களில் ஈடுபட்ட ஹஜ் முகவர்களுக்கு அடுத்த வருடம் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli