உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை கொழும்பு – 0-7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்- 5, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால்மூலம் அனுப்பிவைக்க முடியுமென்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவல்களை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளது. கிடைக்கப்பெறும் தகவல்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 21 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சனத் டி சில்வா இதன் தலைவராக செயற்படுகிறார்.
vidivelli