பொதுஜன பெரமுன சிறுபான்மையினரை அச்சுறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கிறது
பிரதி அமைச்சர் பரணவிதான குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவைச் சேர்ந்தோர் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, தாம் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது,
அடுத்தவாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அவற்றின் வேட்பாளர்களை நியமித்தவண்ணம் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி அதன் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவை நியமித்திருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைளை ஜனநாயக விதிமுறைகளுக்கு இணங்க நாம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளோம். 2015 ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் தேர்தலின்போது சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் பல இடம்பெற்றன. நாம் தற்போது அவ்வாறான நிலையை மாற்றியமைத்துள்ளோம். ஆகவே, அவ்வாறான ஊழல்மிகுந்த தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறமாட்டாது. மாறாக, ஜனநாயக ரீதியாகவே தேர்தல் பிரசாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படும்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அனைவருடைய எண்ணங்களுக்கும் சுயாதீனத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முறையான விதத்திலேயே எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் யாருடைய பக்கம் உள்ளார்க.ள் என்று ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் போது கண்கூடாகப் பார்க்க முடியும்.
மொட்டு கட்சியை சார்ந்தோர் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்து தமிழ் மக்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. நாட்டுப்பற்றுள்ள சிங்கள பௌத்த பெரும்பான்மை யின மக்கள் எப்போதும் ஜனநாயகத்தின் பக்கமுள்ள சிறந்த தலைவரான சுஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பர்.
ஆகவே, எதிர் வரும் தேர்தலில் ஜனநாயக ரீதியாக வெற்றிகொண்டு ஜனநாயகத்தை உருவாக்குவோம்.
vidivelli