‘ஜனாதிபதி சிறிசேன நள்ளிரவில் காரியமாற்றுவதில் சூரன். இம்முறை நள்ளிரவில், அவர் மற்றொரு கெட்டித்தனத்தைக் காட்டியுள்ளார். அரச ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை தன்னிடமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார். யுத்த காலத்தில்தான் இத்தகைய நிலை மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி கையகப்படுத்தலின் பின்னணியிலும் யுத்தமொன்றே உள்ளது. அது, சிறிசேன – ரணில் யுத்தமாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் சந்தர்ப்பத்திலேயே இப்பறித்தெடுப்பு நிகழ்ந்துள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது சம்மேளன பிரசாரத்திற்காக எத்தகைய பீதியோ வெட்கமோ இன்றி ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்போது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கெதிராக கடும் தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டது.
கடந்த 10 ஆம் திகதி மாலை வேளையில் ஊடக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பலவந்தமாக அரச நிருவாகத்திலுள்ள ரூபவாஹினி தொலைக்காட்சியைக் கைப்பற்றுவதற்காக தனது அடியாட்களை அனுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் பிடியிலுள்ள ஐ.ரீ.என். தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் ரூபவாஹினியையும் கொண்டு வருவதற்கே மேற்படி முயற்சி கையாளப்பட்டுள்ளது. இராஜங்க அமைச்சரின் கையாட்களின் பிரவேசத்தால் ரூபவாஹினி நிறுவனத்திற்குள்ளே மோதல் நிலையொன்று உருவானது.
ஐ.ரீ.என். தொலைக்காட்சியின் நிரந்தர வைப்பிலிருந்த பல மில்லியன் ரூபா கணக்கான பணத்தை உறிஞ்சிக் குடித்தவாறு தற்போது அது இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு கடமையில் உள்ளார்கள். ஐ.தே.கட்சியின் ஊதுகுழலாக செயற்படும் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவையின் தலைவரை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்க முயன்ற இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அதனை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கே அவ்வாறு செய்ததாகக் கூறுவது பொய்யான வாதமாகும். ரூபவாஹினி சிறிசேனவுக்கும்– சஜித்திற்கும் சார்பான பிரசாரத்தினை முன்னெடுத்து வருவதாலே அதனை தனது உறவுக்காரரான விஜேவர்தனவிடம் கையளிக்கவே எத்தனித்துள்ளதென்பதே உண்மையாகும்.
சிறிசேனவோ, ரணிலோ அல்லது ராஜபக் ஷவோ ஊடகங்களை தமது அரசியல் பிரசார கருவியாக பயன்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ளனர். அத்துடன் தம் கையாட்களுக்கு தொழில் வழங்கும் ஒரு சாதனமாகவுமே அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விஜேவர்தன அதனைக் கைப்பற்ற முனைந்ததும், நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அதனை ஜனாதிபதி தனது அமைச்சின் கீழ் கொண்டு வரவும் அதுவே காரணமாகும்.
அரச ஊடகங்கள் சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் இருந்திருக்குமானால், இவர்கள் இருவராலும் இவ்வாறு நாடகம் ஆட முடியாது.
அரச ஊடகங்களை சுயாதீன ஆணைக்குழுவொன்றின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு ஜே.வீ.பி.க்கு 2002 ஆம் ஆண்டு இருந்தது. அவ்வாண்டில் கூட்டரசாங்கத்திற்கு அவர்களது கட்சி கைகொடுத்த போது இக்கோரிக்கையையும் முன்வைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதேபோன்று யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கும்போதும் இந்நிபந்தனையையும் முன்வைக்க ஜே.வீ.பி.க்கு மட்டுமல்ல, தமிழர் கூட்டமைப்புக்கும், நல்லாட்சியிலுள்ள சிவில் சமூகக் குழுக்களுக்கும் வாய்ப்பிருந்தது. இவர்கள் எவரும் அவ்வாறு அரச ஊடகங்களை ஜனநாயக மயப்படுத்தத் தவறிவிட்டனர்.
கம்யூனிஸ நாடுகளான சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோன்று இங்கும் இருக்கும் என்று ஜே.வீ.பி. எண்ணியிருக்கக் கூடும். சம்பிரதாய கம்யூனிஸ சிந்தனைக்குள் இருந்தே அவர்கள் அவ்வாறு எடை போடுகிறார்கள். அரச ஊடகங்கள் குறித்து ஜே.வீ.பி.க்கு தூர நோக்கொன்றும் இல்லை.
நல்லாட்சியிலுள்ள சிவில் சமூகக் குழுக்களோ, அரச ஊடகங்கள் ஐ.தே.க.வின் கீழ் இருக்கத் தக்கவாறே தம் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. அதனால் அவை ஜனநாயக மயப்படுத்துவதில் கரிசனை காட்டாதுள்ளன. அதனால் அவை இன்னும் ஐ.தே.கட்சியின் பின்னால் சென்று கரு ஜயசூரியவை மேடையேற்ற பாவாடை விரித்துக்கொண்டிருக்கின்றன.
தமிழர் கூட்டணி தனிப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில், ஊடக விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களது குறிக்கோள் எல்லாம் அதிகாரப் பகிர்வொன்றிலேயே உள்ளன. அரச ஊடகம் மட்டுமன்றி பொது ஊடகங்களதும் சீரமைப்புக் குறித்து அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
சிறிசேனவும் – ரணிலும் தம் குடும்பச் சொத்துப்போன்று அரச ஊடகத்தைப் பற்றி பிடித்துக் கொண்டிருக்க மேற்படி கவனயீனமே காரணமாகவுள்ளது. சிறிசேனவின் ஒக்டோபர் சதியின் பின்னர், அப்போது ஊடக அமைச்சராக விருந்த மங்கள சமரவீர, அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கென குழுவொன்றை நியமித்தார். இன்று வரையும் அக்குழு செய்ததொன்றுமில்லை. மாற்றம் ஒன்றுக்காக அவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் கூட அறைக்கு வெளியே வரவும் இல்லை.
சிறிசேன நள்ளிரவு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் போன்றே, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் தம் அடியாட்களை அனுப்பி அதன் தலைமையைக் கைப்பற்ற எத்தனித்த ரணிலின் நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மேற்படி மோதல் தொடர்பாக, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் மக்கள் என்ற வகையில், எம்மீதும் பொறுப்பொன்றுள்ளது. அது, அரச ஊடகங்கள் சுயாதீன மக்கள் சேவையாக மாற்றம் காண வேண்டுமென்பதேயன்றி எந்தத் தரப்பினரதும் கைத்தடியாக மாறுவதற்கல்ல.
ஜனநாயக சமூகமொன்றின், ஊடகங்களின் அடிப்படைக் கோட்பாடாக அமைவது, நாட்டின் பிரஜைகளைத் தெளிவூட்டும் பணியாகும். அத்துடன் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் தொடர்பாக வாதப்பிரதி வாதங்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதுமாகும்.
ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் இவ்வாறிருக்க ஒரு சில ஊடகவியலாளர்களோ இன்னும் மடமையுகத்திலே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் சர்வ சக்தியால் தீராத வியாதிகளைக் குணப்படுத்தித் தருவதாக பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இதனை அறிந்த மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் அளவில் குறிப்பிட்ட ஹொரவப்பொத்தான திடலில் ஒன்று திரண்டனர். கொளுத்தும் வெயிலில் ஜனத்திரள் மத்தியில் இருந்த நோயாளி மூவர் அவ்விடத்திலே உயிர்த்துறந்துள்ளனர். சிறிசேனவால், ரூபவாஹினி பறித்தெடுக்கப்பட்டதற்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பில் நூறில் ஒரு பங்களவாவது மேற்படி மூடச் செயலால் பலியான மூன்று உயிர்கள் குறித்தும் எதிர்ப்பலைகள் மேலெழவில்லை. அது மாத்திரமல்ல, இது விடயத்தை ஊடகங்கள் கூட முக்கியத்துவம் கொடுக்காது மௌனமாக நடந்துகொண்டன. இது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள். இத்தகையை கைங்கரியத்திற்கு பெரும்பாலும் ஊடகங்களால்தான் அதிக பங்களிப்பு வழங்கப்படுகின்றன. மாய, மந்திர, தந்திரங்களுக்கு ஊடகங்கள்தான் கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அதனால்தான் மேற்படி பாதிப்பு அவற்றால் மூடி மறைக்கப்படுகின்றன. இன்று ஒருசில வாராந்த இதழ்கள் மேற்படி குருட்டு நம்பிக்கையூட்டும் பொய்க் கதைகளை வைத்தே பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றன.
சில காலங்களுக்கு முன்னர் நிகவெரட்டியில் அரச மரமொன்றில் புத்தபிரான் தரிசனம் பெற்றுள்ளார் என்ற மோசடியான தகவல் ஊடகங்களாலே பரப்பப்பட்டன. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்களை அங்கு திரளச் செய்தனர். அதன்பின்னர், குருநாகல் விகாரையொன்றில் தண்ணீர் பருகுவதனூடாக நோய் சுகமாக்கப்படுவதான ஊடக செய்தியூடாக அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இப்போது சர்வ சக்தியால் நோய் குணப்படுத்தும் தகவலால் மக்கள் திரளுகின்றனர்.
மறுபுறத்தில் எமது நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்று தெரியாத தெய்வத்திடம் அச்சத்துடன் கடும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்டோர் வாழும் நாட்டிலுள்ள மக்களுக்கு இந்தியா போய் அவ்வாறு ஈடுபட முடியாத நிலையில் ஹொரவப்பொத்தானைக்கு போயாவது எண்ணத்தை நிறைவேற்றாது வேறு என்னதான் செய்ய முடியும்? சர்வ சக்தி மூலமாவது தம் நோயைக் குணப்படுத்திக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் செல்கிறார்கள் என்றால் எமது நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது நன்கு தெளிவாகிறது. இம்மக்களை மூட நம்பிக்கையின் பால் திசை திருப்பிக்கொள்ள முடிவதுபோல, இவர்களை அரசியல் வாதிகளாலும் தம் பக்கம் வளைத்துக்கொள்ளவும் இலகுவாக முடியுமாகிறது.
ஹொரவப்பொத்தானையில் கடந்த வாரம் மற்றொரு சம்பவமும் நடந்தேறியுள்ளது. தெய்வசக்தியால் பொய் சுகப்படுத்தல் செய்த அதே பன்சலயிலுள்ள சிறுவர் பிக்குகள் இருவர் சொக்லேட் திருடிய குற்றச்சாட்டில் கடையின் நபரொருவரால் கடுமையாக அடித்து உதைக்கப்பட்ட சம்பவமே அதுவாகும்.
இந்தச் சம்பவத்திலிருந்து தெரியவருவது சிறுவர்களை இளம் வயதில் பிக்குகளாக ஈடுபடுத்துவது எவ்வளவுதூரம் அவர்களை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்குகிறது என்பதாகும். இதனை ஒருபுறம் தள்ளிவிட்டு தாக்கிய நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாமும் உடன்படுகின்றோம். இது இவ்வாறிருக்க களுத்துறை போதியைப் பார்வையிடச் சென்ற போரா முஸ்லிம் குழுவொன்றை சிங்கள பௌத்தர் ஒருவர் தூஷித்து விரட்டிய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போரா குழுவில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர். குறித்த சிங்கள பௌத்தர் போரா முஸ்லிம் குழுவைப் பார்த்து ஆங்கில மொழியில் தூற்றியவாறு துரத்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் நன்கு பதிவாகியுள்ளது. அவரால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தையில், ‘‘இது எங்கள் நாடு; எதற்காக இங்கு வந்தீர்கள்? இது இந்தியாவைப்போன்று முஸ்லிம் நாடல்ல; போங்கள்…’’ என்று ஆங்கில மொழியில் கூறியவாறு, பின்னர் சிங்களத்தில் ‘‘இவனுகளை இங்கே கொண்டுவராதே…’’ என்றும் கூறியுள்ளார்.
அப்போது போரா குழுவிலிருந்த ஒரு பெண் அமைதியான முகச் சுபாவத்தோடு, ‘‘எங்களை மன்னித்து விடுங்கள்’’ என்று விடைபெற்றுள்ளார்.
இந்த இடத்தில் உண்மையான பௌத்தர் யார்?
சிங்களத்தில்: சுனந்த தேசப்பிரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி: ராவய வார இதழ்