அல்குர்ஆனை மனனமிட்டு வந்த 26 மாணவர்கள் தீ விபத்தில் பலி
லைபீரியாவில் சம்பவம் ; அனைவரும் 10 முதல் 20 வயதுக்கிடைப்பட்டவர்கள்
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிவாசல் ஒன்றுடன் இணைந்ததாக செயற்பட்டு வந்த குறித்த மத்ரஸாவில் அல்குர்ஆனை மனனமிட்டு வந்த சிறார்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவர்.
லைபீரியா தலைநகர் மொன்ரோவியாவின் புறநகர்ப்பகுதியான பேனேஸ்வில்லே என்ற பிரதேசத்தில் இந்த மத்ரஸா அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மாணவர்களின் விடுதிக்கட்டடம் மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பவற்றில் தீ பரவியுள்ளது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் தவிர ஒரு ஆசிரியரும் ஒரு விடுதி கண்காணிப்பாளரும் இந்த தீவிபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மோஸஸ் கார்ட்டர் தெரிவித்ததுடன், லைபீரிய ஜனாதிபதி அலுவலகம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் இருவரே உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்கள் ஒவ்வொருவரும் 10 தொடக்கம் 20 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
“பிள்ளைகள் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த சமயம் தீ ஏற்பட்டுள்ளது” என கார்ட்டர் தெரிவித்தார். பாடசாலை வளாகத்தினுள் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை லைபீரிய பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயில் கருகிய பிள்ளைகளின் உடல்களை பையில் எடுத்துச் செல்வதைக் காணும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.
அழுதும் புலம்பியும் செய்வதறியாது பொலிஸாருடன் சண்டையிடும் பெற்றோர்களையும் கூடியிருக்கும் கூட்டத்தினரையும் பாதுகாப்புப்படையினர் விலக்கிவிட்டு அம்புலன்ஸ் வண்டிகளில் உடல்களை கொண்டு செல்லும் காட்சிகள் காண்போரை கண்ணீரின் எல்லை வரை கொண்டுசெல்கிறது.
பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் எம்மானுவேல் ஹர்பேட்டும் தேவாலயத்தில் இருந்த சிலரும் திடீரென கேட்ட சத்தத்தினால் விழித்தெழுந்து உதவிக்கு ஆட்களைத் திரட்டிக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பாதிரியார் எம்மானுவேல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, “நான் சம்பவ இடத்துக்கு சென்றபோது நான் பார்த்த எல்லா இடமும் சிவப்பு நிறமாகவே காட்சியளித்தது. நான் அந்த ஜன்னல்களைப் பார்த்தபோது உள்ளிருந்த மொத்த பகுதியும் தீயினால் நிறைந்திருந்தது. அந்த நெருப்பு மிகவும் கடுமையாக பரவியிருந்தது. அதனால் கட்டடத்துக்கு உள்ளே செல்ல எந்தவிதமான வாய்ப்பும் எங்களுக்கு இருக்கவில்லை” என்றார்.
குறித்த தீ விபத்து ஏற்பட்ட பேனேஸ்வல்லே மத்ரஸாவுக்கு லைபீரியாவின் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஹ் விஜயம் செய்தார். அங்கு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி வாஹ், பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு உறுதுணையாக அவர்களை உணர்வு ரீதியாக பலப்படுத்தவே நாம் இங்கு வந்திருக்கின்றோம். தமது குழந்தைகளை அவர்கள் இழந்திருப்பது உண்மையிலேயே வலி நிறைந்த ஒன்று என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் எங்களுக்கு புலனாகவில்லை. ஆனால் இந்த தீ விபத்து தொடர்பான சகல விசாரணைகளையும் ஊக்கப்படுத்தி வருகின்றோம் என வாஹ் தெரிவித்தார்.
லைபீரிய பாதுகாப்பு அதிகாரிகள் தீ விபத்துக்களை அணைப்பதில் நன்கு பரிச்சயம் பெற்றிருந்தபோதிலும் இந்தத் தீயினை எளிதில் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
லைபீரியாவில் பெரும்பான்மையினத்தவர்களாக கிறிஸ்தவர்களே உள்ளனர். இருந்தபோதிலும் அந்நாட்டு சனத்தொகையில் சிறுபான்மையாக 4.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
“ஒரு முஸ்லிமாக நான் அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது நம்பிக்கை கொள்கிறேன். அவனது அருளுக்கு நன்றி செலுத்துபவனாக இருக்கின்றேன். ஆனால் இன்று நடந்த சம்பவத்தினால் என்னால் பேசவே முடியவில்லை. நான் எப்படி எனது சகோதரனை இழந்தேன்” என குறித்த தீ விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் சகோதரர் ஊடகங்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.
தேசிய அனர்த்த முகவரகத்தின் தலைமை நிர்வாகி ஹென்றி வில்லியம்ஸ் இந்த தீ விபத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. 28 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த 26 சிறுவர்களுமே ஆண் பிள்ளைகள். மேலும் ஒரு ஆசிரியரும் ஓர் கண்காணிப்பாளரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள் என்றார்.
‘இரவு 1 மணியளவில் அனைவரும் கத்துவது போன்ற சத்தங்கள் கேட்ட போதும் அதுதொடர்பான ஒரு குழப்பமான மனநிலையில் இருந்ததால் வெளியிறங்காமல் இருந்ததாக குறித்த பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் ஹோவர்ட் தெரிவித்தார்.
“அந்த சத்தங்கள் கொள்ளையர்கள் அல்லது திருடர்களுடைய சதித்திட்டம் என்று நினைத்தோம். அண்மைக்காலமாகவே கொள்ளையர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதனால் நாங்கள் வெளியில் வந்து பார்க்க பயப்பட்டோம்” என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் முஸ்லிம்கள் என்பதன் அடிப்படையில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் தொழுகையில் துஆ கேட்க கடமைப்பட்டிருக்கின்றோம். நாம் இந்த நாட்டை தொழுகையின் மூலம்தான் கட்டியெழுப்பலாம். முன்னர் நிம்பாவில் மண்சரிவு ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டார்கள். இப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்மையிலேயே இது வருத்தமளிக்கக்கூடயது” என ஷெய்க் கமாரா தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பாக மேலும் கூறுகையில், நாம் இந்த நாட்டின் நாளைய தலைவர்களை இழந்திருக்கின்றோம். இந்த வருத்தத்துக்கான காரணத்தினை அல்லாஹ் ஒருவனே அறிவான். நாம் தொடர்ந்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வோம் என்றார்.
லைபீரியாவுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இது ஒரு துக்கதினம் என லைபீரிய ஜனாதிபதி ஜோர்ஜ் வாஹ் தெரிவித்திருந்தார்.
காயே நகரம் மற்றும் சுக்பூர் ஆகிய இடங்களிலுள்ள முஸ்லிம் மையவாடிகளில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் மறுநாள் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்த நல்லடக்கத்தில் நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதில் ஆயிரக்கணக்கான லைபீரிய முஸ்லிம்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்களின் மையவாடிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாத போதும் ஒரு சிறுவனின் உறவுக்காரப் பெண்ணொருவரின் அழுகுரலினையும் கவலையையும் தாங்க முடியாதவர்கள் மையவாடிக்குள் ஒரு சில பெண்களையும் அனுமதித்தார்கள். உயிரிழந்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஜனாஸா தொழுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ஜனாஸாக்களும் ஒன்றன் பின் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டன.
எம்.ஏ.எம்.அஹ்ஸன்
vidivelli