ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மறுக்கும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பரந்த கூட்டணியொன்றை அமைத்து கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க பங்காளிக்கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளதுடன், அதனை நிறைவேற்றும் வகையில் அவசர கலந்துரையாடல்களையும் முன்னெடுக்க முனைந்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் தொடர்ந்தும் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே சந்திப்புக்களை மேற்கொண்டு தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்த அமைசர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை கலந்துரையாடி அதில் பெரும்பான்மை ஆதரவை பெறும் நபர்கள் யார் என்பதையும், மக்களின் செல்வாக்கை பெற்றவரும் பிரபல்யமான நபராக கட்சியில் இருப்பவரையே களமிறக்க வேண்டும். அவ்வாறு களமிறக்கினால் மட்டுமே கூட்டணியாக எம்மால் வெற்றிபெற முடியும். இந்த விடயத்தில் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரகசியமாக வேட்பாளரை களமிறக்கி எந்தப் பயனும் இல்லை. ஆகவே இதுகுறித்து நீங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
தனித்து தீர்மானம் எடுத்தால் கட்சியாக இணைந்து பயணிக்கவும் எவரும் முன்வரப்போவதில்லை, கட்சி இரண்டாக பிளவுபடும். ஆகவே உங்களின் நிலைப்பாட்டை பிரதமரிடம் எடுத்துக்கூறி ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்க வலியுறுத்த வேண்டும் என்ற காரணிகளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதும் பரந்த கூட்டணி அமைத்து தேர்தலை கையாள்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்க எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முயற்சியை கைவிட்டு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் மற்றும் தம்முடன் இணைந்து பயணிக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர். இதனை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடமும் கூறியுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறித்த துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் என கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
vidivelli