2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்தேறிய கொடூரத்தின் நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம்களின் சிறு குழுவினரால் மட்டுமே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டதாயினும், இலங்கைப் பெரும்பான்மையினரது வன்மையான கண்டிப்பைத் தொடர்ந்து, சகல இலங்கை முஸ்லிம்களின் மீதான கண்ணோட்டம், சந்தேகமாகவும் நம்பிக்கையின்மையாகவும் உருவெடுத்துள்ளது. இன்றுவரை முழுதாக களையகற்றப்படாத அடிப்படைவாதிகளால் வழிநடத்தப்பட்ட ஒரு குழுவின் மிலேச்சத்தனமான நடவடிக்கையினால் ஒரு சமூகமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தண்டிக்கப்படுகிறோம்.
சுருங்கக்கூறின், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பாகவே பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் காணப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான மனப்பாங்கு, கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள், இத்தாக்குதலுக்கு பிற்பாடான காலங்களில் மிக வெளிப்படையாகவும் தயக்கமின்றியதாகவும் காக்கப்படுகின்றன. சிறுபான்மை மக்கள் (குறிப்பாக முஸ்லிம்கள்) சமகாலத்தில் முகங்கொடுக்கும் இச்சிக்கலை முன்வைக்க சாதகமான ஒரு தளமாக இதைக் கருதுகிறேன். தனி மனித சகிப்புத்தன்மை எனும் புள்ளிக்கே இப்புதிருக்கான விடை குவிவதை உணரமுடிகிறது. சகிப்புத்தன்மை (Tolerance) எனும் கொள்கை இயல்பாக ஒவ்வொரு மனிதனிலும் குடிகொண்டிருப்பதன்று. மாறாக, ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மனப்பாங்கு எனக்கூறலாம். ஆய்வுகளின்படி, சகிப்புத்தன்மை ஒருநாட்டின் சட்டதிட்டங்களை முறையாக அமுல்படுத்துவதற்கும் அரசின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் வழிகாட்டுகிறது.
இச்சிந்தனை பெரும்பான்மை மக்களின் திருப்திகரமான ஒப்புதலுக்கு உட்படாமைக்கு காரணங்களும் இயல்பாக எழும் கேள்விகளும் இருக்கலாம்.
சகிப்புத்தன்மைக்கான வருடத்தில் முஸ்லிம்களையும் தமிழரையும் பெரும்பான்மையினரான நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்.
பல்லாயிரம் வருடங்களாக அவர்களை சகித்தும் அவர்கள் செய்த அல்லது செய்து வரும் செயற்பாடுகளைப் பார்த்த பின்னரும் அவர்களை சகிக்க வேண்டுமா? பகரமாக ஏன் அவர்கள் எம்மை சகித்துக்கொள்ளக் கூடாது? சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிறுபான்மை சிங்கள பௌத்தர்களை சகித்துக்கொள்வார்களா?
இலங்கையராக இதுபோன்ற வினாக்களுக்கு முகங்கொடுக்க நேரலாம். இன, மத, பிரதேச, சமூக, கலாசார, அரசியல் வேறுபாடுகளை கொண்டிருப்பினும் இலங்கையர் எனும் அடையாளம் எம் அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது. இது ஒன்றே 2020ஐ சகிப்புத்தன்மையின் வருடமாக பிரகடனப்படுத்துவதற்குப் போதுமானது.
இச்சிந்தனைக்கான செயற்பாடுகளை கலந்தாலோசிக்கலாம். கொள்கையை முன்னெடுத்துச்செல்வதற்கு சமூகவியல் ரீதியில் தொடர்புபட்ட என்னைவிட மிகப் பொருத்தமான நிபுணர்கள் இருக்கிறார்கள். எனினும் இச்சிந்தனையை வலுப்படுத்தக்கூடிய 6 வழிமுறைகளை முன்வைக்கலாம் எனக் கருதுகிறேன்.
1.பச்சாதாபம் (Empathy)
2.பரிவு (Compassion)
3.உரையாடல் (Dialog)
4.முரண்பாடுகளைத் தீர்த்தல் (Colflict resolution)
5.நெகிழ்வுத்தன்மை (Resilience)
6.குழுச்செயற்பாடு (Team work)
இச்செயற்பாடுகள் எமது பல்லின, சமய வழிமுறைகளில் ஏற்கனவே இடம்பிடித்திருப்பவையாயினும், சமய, அரசியல் மற்றும் இன முற்போக்குவாதத்தினாலும், தத்தமது சுய இலாபங்க ளுக்காகவும் திட்டமிடப்பட்டு தகர்த்தெறியப்பட்டுள்ளன.
புத்த பெருமானின் கூற்றுக்கமைய நடுநிலைமையான வழிமுறைகளை பின்பற்றுவோம். இதுவே மிகச்சிறந்த தீர்வென நம்புவதோடு, இதன் அடிப்படையிலேயே 2020 ஐ சகிப்புத்தன்மைக்குரிய ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் என கூறிக்கொள்கிறேன்.
டாக்டர் ருவைஸ் ஹனீபா
vidivelli