ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராகக் கருதப்படும் ஒருவரை, 4/21உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.
மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் குறித்த சந்தேக நபர் கட்டார் பொலிஸ் நிலையமொன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் சஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திப் பேணியுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
கட்டாரில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாபுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்பவர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள குறித்த நபரை சி.ஐ.டி., விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த தகவல்களை கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு விஷேட விசாரணை அறிக்கை ஒன்றூடாக சமர்ப்பித்தார்.
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விசேட வலையமைப்பொன்றூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் அஹமது முஹமது அர்ஷாத் எனும் காத்தான்குடியைச் சேர்ந்த நபரை இராணுவ புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது.
தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்கிய உறுப்பினர், மாத்தளையைச் சேர்ந்த பஸ்ஹுல் சஹ்ரான் என அறியப்படும் மொஹமட் சஹ்ரான் பஸ்ஹுல் ரஹ்மான் எனும் சந்தேக நபரிடம் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரமே அர்ஷாதின் கைது இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் சி.ஐ.டி. முன்னெடுத்துள்ள விசேட விசாரணைகளில் பஸ்ஹுல் சஹ்ரானின் சகோதரி ஒருவர் மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் நபரைத் திருமணம் முடித்துள்ளார். இந்த மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாபுடன் பஸ்ஹுல் சஹ்ரானும் கட்டாரில் இருந்தபோது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர்.
இந்நிலையிலேயே கடந்த 4/21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் கட்டார் பொலிஸ் நிலையமொன்றால் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், இதன்போது அவருடன் தங்கியிருந்த மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் எனும் இலங்கையரையும் கைது செய்திருந்த கட்டார், அவரை இரண்டரை மாத தடுப்புக்காவல் விசாரணையின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. இதனையடுத்து அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து தற்போது தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக சமத் மொஹம்மட் ரியாஸ், சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்துள்ளாரா என்பது குறித்து இந்த விசாரணைகளில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு கொடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி சமத் மொஹமட் றியாஸ், அவரது குடும்ப உறுப்பினர்களான மொஹமட் நியாஸ் பாத்திமா நிஸ்லா, மொஹமட் பெளஸ் சித்தி நிஜாரா ஆகியோருக்கு சொந்தமான வங்கிக்கணக்குகள் மற்றும் அதன் விபரங்களை சி.ஐ.டி.க்கு வழங்க 19 வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அதுகுறித்த மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் மேற்பார்வை ஆலோசனைக்கமைய விசேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 4 பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli