முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தங்களை உடனடியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருவதாகத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், அந்தத் திருத்தங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைய முடியும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் முதலாவது இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, ‘தாம் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார். அப்படியென்றால் அவர்கள் 13 வயதுப் பெண் பிள்ளைகளை வயதானவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் மிலேச்சத்தனமான முஸ்லிம் விவாக சட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பது தானே அர்த்தம். இல்லை அவர்களுக்கு நாட்டு மக்களின் பிள்ளைகளது மனித உரிமைகளை விடவும் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் மடியில் விழும் முஸ்லிம் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
முஸ்லிம் வாக்குக் குவியல்களைப் பாதுகாத்து தமதாக்கிக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கு இருக்கிறது. அதனாலேயே முஸ்லிம் தனியார் சட்டத்தை அடுத்த பாராளுமன்றம் வரை தாமதப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்களை பாராளுமன்றத்தில் அங்கீகரித்து சிங்களப் பெரும்பான்மையினரது 70 வீதமான வாக்குகளையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகளே பெறுமதியானவையாகத் தெரிகிறது.
நாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கூறுகிறோம். பாராளுமன்றம் இன்னும் கலைக்கப்படவில்லை. முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்களை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள். அப்போது அந்தத் திருத்தங்களை ஆதரித்து கையுயர்த்தும் கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் எம்மால் ஒத்துழைக்கலாம். சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் கட்சிகளை அரசியலிலிருந்தும் வெளியேற்றுவதற்கு மக்களை எம்மால் ஒன்று திரட்ட முடியும்.
நாங்கள் எந்தவொரு அரசியல்வாதிக்காகவும் முன்நிற்க வேண்டிய தேவையில்லை. பௌத்தத்தைப் பாதுகாக்கும் கலாசாரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாட்டை முன்னேற் றிச் செல்லும் அரசியல் தலைவருடனே நாம் கைகோர்க்கவுள்ளோம்.
ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்பு முஸ்லிம் பெண்களின் கறுப்பு உடை மற்றும் முகத்திரை என்பனவற்றுக்கு சமூகத்தில் எதிர்ப்பு மேலோங்கியது. ஆடைக்கலாசாரத்தை மாற்ற வேண்டும் என முஸ்லிம் சமூகத்திலிருந்தும் கருத்துகள் வெளிவந்தன. ஜனாதிபதியும் இந்த ஆடைக்கு தடை ஏற்படுத்தினார். என்றாலும் இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா இல்லையே. பிரபாகரன் கூறியது போன்று சிங்களவர்கள் இரண்டு வாரங்களில் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்.
சஹ்ரானின் தாக்குதல்களின் பின்பு அரசியல்வாதிகள் நடைமுறைப் படுத்துவதாகக் கூறிய உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் மறந்து விட்டனர்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு இந்நாடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. எங்களுக்கு அருகில் வசிக்கும் அயலவர்களின் நடவடிக்கை களை நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு நாம் செயற்படா விட்டால் எமக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்தினைத் தவிர்க்க முடியாமல் போகும். மீண்டும் ஒரு ஏப்ரல் 21 போன்ற தாக்குதலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.
vidivelli