முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு ஒரு தசாப்தகாலம் நிறைவடைந்து விட்டது.
தற்போதைய ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான குழு ஒன்பது வருடகாலமாக பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்தி தனது அறிக்கையை கடந்த வருடமே நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் கையளித்தது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு இத்தனை வருடங்களா? என்று பலரும் வியப்புக்குள்ளாகினர். திருத்தக் குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே சட்டத்திருத்த சிபாரிசுகள் தொடர்பில் நிலவிய கருத்து முரண்பாடுகளே தாமதத்திற்குக் காரணமாகும்.
நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கருத்து முரண்பாடுகளுடன் கூடிய சிபாரிசு அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டது. குழு அங்கத்தவர்களில் சிலர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் பிளவுபட்டு தனியான சிபார்சுகளைச் சமர்ப்பித்திருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், பொதுச் செயலாளரும் இணைந்திருந்தனர்.
சட்டத்திருத்த விடயங்களில் பிளவுபட்டிருந்த குழு அங்கத்தவர்களை ஒருமுகப்படுத்தி சிபாரிசுகளை நீதியமைச்சர் பெற்றுக்கொள்ள முயற்சித்தாலும் அது கைகூடாமற் போகவே, திருத்தங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் பொறுப்பினை நீதியமைச்சர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் ஒன்றுகூடி ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் ஒரு சில விடயங்களைத் தவிர பெரும்பாலான விடயங்களுக்கு அங்கீகாரம் வழங்கினார்கள். அந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையிலே பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிட்ட சட்டவரைபை உடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி கடிதமொன்றினை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் கபீர் ஹாஷிமுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்தியை எமது பத்திரிகையில் நேற்று முன்பக்க பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இவ்வருட இறுதியில் நாம் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். அரசியல் கள நிலைமை எவ்வாறு அமையும் என எதிர்வு கூறமுடியாத நிலையிலே நாட்டின் அரசியல் நிலைமை தினமும் மாற்றம் கண்டு வருகிறது.
‘ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பு உடனடியாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்களுக்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தவறும் பட்சத்தில் நாம் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகள் தேவைப்படாத ஒன்றாகிவிடும்’ என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தனது கடிதத்தில் எதிர்வு கூறியிருக்கிறார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள திருத்தங்கள் காலத்துக்கு ஏற்றனவாகும். முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காதிநீதிமன்றக் கட்டமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது. முழுநேர காதிநீதிபதிகளாக இஸ்லாமிய சட்டம் பயின்ற ஆண் சட்டத்தரணிகள் நியமிக்கப்படவுள்ளார்கள். பெண்கள் முஸ்லிம் விவாக பதிவாளர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள். திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலதார மணத்துக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திருத்தங்களினால் சமூகம் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.
காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாமல் செய்வதற்காக பெரும்பான்மையின ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயலில் இறங்கியுள்ளன. காதிநீதிபதிகள் தொடர்பாக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இச்சூழ்நிலையில் இக்கட்டமைப்பைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அமைச்சர் ஹலீம் இதனையுணர்ந்து உடனடியாக செயலில் இறங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவுடன் இணைந்து நாமும் குரல் கொடுக்கிறோம்.
vidivelli