கொழும்பு, மாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாடசாலையில் குறிப்பிட்ட ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்துக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் விசாரணையொன்றினை நடாத்தியது.
அறியாமல் செய்த இந்த தவறுக்கு சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகம் ஜனாஸாவுக்கு உரிய குடும்ப அங்கத்தவர்களிடம் மன்னிப்புக் கோரியதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட ஜனாஸாவுக்கு சொந்தமான குடும்ப உறுப்பினர்களும், பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு வடக்கு மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் மொஹமட், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்கள் இதன்பிறகு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களில் இடம்பெறாதிருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு நாடளாவிய ரீதியில் எந்தப் பள்ளிவாசலிலும் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மாதம்பிட்டி பள்ளிவாசலில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு 3 ஆம் தரப்பே காரணமாக இருந்துள்ளது என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli