நெருக்கடிகளுக்கு கோத்தாபய ராஜபக் ஷ ஒரு தீர்வல்ல நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம்
ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டு
‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வல்ல. உண்மையில் அந்த நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம். அவர்கள் இனங்களுக்கிடையில் பிளவை உருவாக்குவதற்கு நாட்டு மக்களின் பாதுகாப்பைத் தாரைவார்த்தார்கள். அவர்களாகவே உருவாக்கிய பிரச்சினையினால் தேசிய பாதுகாப்பிற்குத் தோன்றிய அச்சுறுத்தலை தாங்களாகவே மீட்டுத்தரப் போவதாக இப்பொழுது உறுதி கூறுகின்றார்கள். அதனால் ராஜபக் ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இன்றைய நெருக்கடிக்கு ஒரு தீர்வல்ல’என தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கின்றார்.
கொழும்பு ஆங்கி ல வாரவெளியீடு ஒன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய திஸாநாயக்கவிடம் அவரை விடவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மாத்திரமே இன்னுமொரு ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதியாகுவதற்கு அவர் பொருத்தமானவரா? என்று கேட்கப்பட்ட போது அவர் இந்தப் பதிலையளித்தார்.
எந்த அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது ராஜபக் ஷ முகாமையோ மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர முடியும்? அந்த இரு தரப்பினராலும் ஊழல், மோசடிகளை நிறுத்த இயலவில்லை. உண்மையில் அவர்களே ஊழல்களில் நிபுணர்களாக இருக்கின்றார்கள். அதேபோன்றே அவர்களால் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவோ அல்லது பொருளாதார ரீதியில் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்லவோ முடியாது. அவர்கள் தான் சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்குக் காரணம். நாட்டைக் கடன்பளுவில் சிக்கவைத்து, மோசமான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியவர்களும் அவர்களே என்றும் ஜே.வி.பியின் தலைவர் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டார்.
கேள்வி: ஜே.வி.பி. இறுதியாக 1990 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலிலேயே வேட்பாளரைக் களமிறக்கியிருந்தது. 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சொந்தமாக வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்ற தேவையை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஏன் உணர்ந்தது?
பதில் : கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது எமது நாடு குறிப்பிட்ட சில சூழ்நிலைகளை எதிர்நோக்கியது. அப்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டே குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜே.வி.பி. தீர்மானித்தது. இன்று நாடு இன்னொரு இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தோல்வி கண்டுவிட்டன. அவர்கள் இப்போது ஒருமுகமாக இணைந்தும் விட்டார்கள். முற்றுமுழுதான அழிவுப்பாதையில் நாட்டை அவர்கள் இழுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி என்ற வடிவில் மாற்று சக்தியொன்றின் எதிர்கால வெற்றியை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்கு நாங்கள் கூட்டாகத் தீர்மானித்தோம்.
ராஜபக் ஷ முகாமினது போலித்தோற்றத்தை கடந்த தசாப்தத்தில் நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம். மாற்றமொன்றைக் கொண்டுவர வேண்டுமென்ற அக்கறையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அவதானித்தோம். தற்போதைய சீர்கேடான நிலைவரத்தை எதிர்கால சந்ததியினருக்கும் கடத்தக்கூடாது என்பதற்காக சரியான தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. அந்த உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வார்களென நாம் நம்புகின்றோம்.
கேள்வி : ‘மக்களின் எதிர்பார்ப்பிற்குரிய வேட்பாளர்’ என்ற உங்களது பிரசாரத்திற்கான தொனிப்பொருளின் அடிப்படையள என்ன?
பதில் : நினைவிற்கு எட்டாத காலந்தொடங்கி வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளும், அவர்களின் தலைவர்களின் எதிர்பார்ப்புகளும் துருவமயப்பட்டு ஒத்துவராதவையாகவே இருந்தன. நாட்டின் தலைவர்களின் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த நாட்டின் மக்கள் தங்களது சொந்த எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி, ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் போன்ற எண்ணற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கையுடனேயே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்கின்றார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கக்கூடிய நல்லாட்சி முறையை உறுதிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.
கேள்வி : கோத்ததாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக வருவாரேயானால் அவரின் ஆட்சியின் கீழ் ஜே.வி.பியின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும்?
பதில் : அவரது வெற்றியைப் பற்றியோ அல்லது ஜனாதிபதியாகத் தெரிவாகும் பட்சத்தில் அவர் தொடர்ந்து எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கை பற்றியோ எமக்குக் கவலையில்லை. ராஜபக் ஷ குடும்பத்தில் மிகவும் பலவீனமான ஒரு பிரமுகரே கோத்தாபய ராஜபக் ஷ. மற்றவர்களின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமையும், பொறுமைகாக்க முடியாதமையுமே பலவீனத்தின் அறிகுறி. தனக்கெதிராக ஏதாவது எழுதப்பட்டால் பொறுமையாக அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அவர் வன்முறை சுபாவத்துடன் நடந்துகொள்வார். அவர் ஒரு பலவீனமான மனிதர். ராஜபக் ஷ குடும்பத்திற்குள் குற்றச்செயல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பவரும் அவரேயாவார்.
எனவே நாம் எவ்வித குழப்பமும் அடையப்போவதில்லை. எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுக்கத்தக்க வகை யில் எமது இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்துவோம்.
vidivelli