இவ்வருட ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளின் போது யாத்திரைக்கான கட்டணம் அறவிட்டு இறுதி நேரத்தில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்ளாது கைவிடப்பட்ட 6 ஹஜ் விண்ணப்பதாரிகள் செலுத்திய கட்டணங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி திருப்பிச் செலுத்துவதாக சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு கைவிடப்பட்ட 6 ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு குறிப்பிட்ட ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் சுமார் 5 மில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஹஜ் கடமைக்காக 8 ஹஜ் விண்ணப்பதாரிகளிடம் அதற்கான பணத்தை வசூலித்துக்கொண்டு அவர்களுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்யாது ஹஜ் முகவர் கைவிட்டதால் அவர்களால் ஹஜ் கடமையை மேற்கொள்ள இயலாமற் போனது. சம்பந்தப்பட்ட முகவர் 8 பேரில் இருவர் செலுத்தியிருந்த கட்டணங்களை ஏற்கனவே திருப்பி வழங்கியிருந்த நிலையில் ஏனைய 6 பேரின் கட்டணங்களை கடந்த 10 ஆம் திகதி (நேற்று) வழங்குவதாக அரச ஹஜ் குழுவிடம் உறுதியளித்திருந்தார். என்றாலும் நேற்று கட்டணம் திருப்பியளிக்கப்படவில்லை. பணத்தை திருப்பி கையளிப்பதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியுள்ளார். குறிப்பிட்ட தினத்தில் பணம் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli