இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்
சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் கலாநிதி அப்துல்லாஹ்
இலங்கை முஸ்லிம்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பையேற்று மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய மஜ்லிஸ் சூரா கவுன்சிலின் தலைவர் மற்றும் தூதுக்குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று முன்தினம் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஹஜ் கோட்டா தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சிறிது காலத்துக்கு குறைக்கப்பட்டிருந்தது. என்றாலும் தற்போது வழங்கப்பட்டு வரும் கோட்டா எமக்குப் போதுமானதாக இல்லை. அதனை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அத்துடன் சவூதி அரேபிய ராஜ்ஜியத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் சுமார் 2இலட்சம் இலங்கையர்கள் அந்நாட்டில் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது சவூதி மஜ்லிஸ் சூரா சபை தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது சவூதி மஜ்லிஸ் சூரா சபை தலைவர் தெரிவிக்கையில், சவூதி – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவு வலுவான நிலையில் காணப்படுகின்றது. வர்த்தகத்துறை மற்றும் இருதரப்பு முதலீடு மூலம் இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி செய்யப்படலாமென யோசனை தெரிவித்தார்.
அத்துடன் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும், அங்கு பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை துரிதகதியில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ரியாதிலுள்ள சவூதி சூரா கவுன்சிலுக்கு விஜயம் செய்யுமாறும் சபாநாயகரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் இவ்வருடம் 500 ஹஜ் பயணிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 4ஆயிரம் பேர் ஹஜ் பயணம்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பெளசி தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli