ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. அந்த முறையை உருவாக்கியதைப் போன்று அதை நாமே ஒழிப்போம். இதேவேளை நாட்டின் அடையாளத்தை நிலைநாட்டி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஐந்து வருடகால ஆட்சி போதாது. இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற வேண்டிய எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஐந்தாண்டுகால ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறியதாவது;
வரலாற்றில் எமது தலைவர்கள் சகலரும் இன, மத வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டனர். அதனூடாக அவர்களின் இலக்குகளை வெற்றிகொண்டார்கள். இதேவேளை நாம் முப்பது வருட யுத்த காலத்தை சந்தித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றன. பாதைகள் நிர்மாணம், கட்டிட நிர்மாணம் போன்ற பௌதிக அபிவிருத்திகள் கண்ணுக்கு புலப்படக்கூடியவை. அவ்வாறான அபிவிருத்தி பணிகள் பிரமாண்டமாகப் பார்க்கப்படக் கூடியவை.
இவற்றுக்கு அப்பால் நாட்டின் அடையாளத்தை பாதுகாப்பதிலேயே எங்களின் முன்னேற்றம் தங்கியுள்ளது. நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து வருடங்கள் போதாது. அடுத்துவரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செயற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும்.
2015 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம். அது தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாமே உருவாக்கினோம். அதேபோன்று தற்போது அந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
பொதுக் கூட்டணியொன்றினூடாகவே ஆட்சி அமைத்தோம். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. இருப்பினும் ஆட்சியை இடைநிறுத்தாமல் முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் பாதியை நிறைவு செய்துள்ளோம். எஞ்சியுள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கும் மக்கள் எங்களுக்கு ஆணையை கொடுக்க வேண்டும்.
சகல சமூகங்களையும் ஒன்று சேர்த்து எமது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோன்று வேறுபட்ட மதங்களை பின்பற்றும் ஒவ்வொருவரும் தமது கலாசாரத்தை பின்பற்றுவதற்கான உரிமையை ஏற்படுத்திக் கொடுக்கும் அதேவேளை, ஏனைய மதத்தவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்களின் உரிமைகள் முறையாக வழங்கப்படுமாக இருந்தால் அநேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான சுதந்திரம் டி.எஸ். சேனநாயக்கவின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் பிரச்சினைக்குரிய விவகாரமாக உருவெடுத்தது. தமிழ் மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமையினால் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது பிரச்சினையாக மாறியது.
சகல இனங்களினதும் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனேயே அமைச்சர் மனோ கணேசனுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சை பொறுப்பளித்தோம். அதன் விளைவுகள் இன்று நாட்டுக்கு நன்மையை தருவனவாக அமைந்துள்ளன.
vidivelli