பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனை பார்வையிடுவதற்கு முகத்தை மறைக்காது அபாயா அணிந்து சென்ற பெண்ணுக்குத் தடை விதித்த அங்கு கடமையிலிருந்த பெரும்பான்மையின பெண் காவலாளிக்கு எதிராக மனித உரிமை ஆர்வலரால் பேராதனை போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பெண்ணுடன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெண்ணின் உறவினரும் மனித உரிமை ஆர்வலருமான மடவளை பஸாரைச் சேர்ந்த எம்.ஏ.எம். ஹனீப் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எனது உறவினரான பெண், வைத்தியசாலையின் 1 ஆம் இலக்க விடுதிக்குச் சென்றபோது கறுப்பு நிற அபாயா (முகத்திரை அற்ற) அணிந்து செல்ல முடியாதெனவும் அபாயாவைக் களையுமாறும் இந்த உத்தரவு டாக்டர்களாலும் தாதிகளாலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெண் காவலாளி தெரிவித்தார்.
அவசரகால சட்டம் அமுலில் இல்லையெனவும் முகத்திரை அணிந்திருக்கவில்லை எனவும் நான் தெரிவித்தபோது அங்கிருந்தோர் முன்னிலையில் என்னை ‘வாயை மூடிக் கொண்டு போங்கள்’ என்று கூறினார்.
இவ்வாறான பதவிகளுக்கு படித்த பண்பானவர்களை நியமனம் செய்யுங்கள் பல்லின மக்கள் வாழும் நாட்டில் இவர்களாலேயே பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.
நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் சந்தர்ப்பத்தில் இன, மத பேதங்களை ஏற்படுத்தும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli