நாட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் உள்நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்றேல் நாடு ஸ்திரமற்ற தன்மைக்குள்ளாகும். ஒற்றுமைக்கு பிரதான தடையாக இருப்பது எமக்கிடையே உள்ள பேதங்களாகும். நாட்டைப் பிளவுபடுத்தியாவது ஆட்சி செய்ய முயற்சிப்பதும் நாடு ஸ்திரமற்ற தன்மைக்குக் காரணமாகும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்காரின் 22 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
‘இனம் மதங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி எம்மால் ஏன் ஸ்திரமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் மக்களுக்கிடையிலும் பிளவுகளை ஏற்படுத்தி நாட்டை தீயிட்டாவது ஆட்சி செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.
சாதி, மத பேதங்களினால் நாட்டில் அழிவுகளே ஏற்படும். நாட்டில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை, பேருவளை அளுத்கம சம்பவங்கள் அழிவுகளையே ஏற்படுத்தின. ஏனைய மதங்கள், இனங்களுடன் பேதங்களுடன் வாழும் போதே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன. மதங்களை அழிப்பதன் மூலம் ஓர் இனத்தை துன்பங்களுக்கு உள்ளாக்குவதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது.
இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதன் மூலமே ஸ்திரமான நாட்டை உருவாக்க முடியும். நாடு ஸ்திரமானாலே முழு உலகமும் இங்கு முதலீடுகளைச் செய்யும்.
பயங்கரவாதத்தை எம்மால் இல்லாமல் செய்வதற்கு உளவுப் பிரிவு உள்ளது. உளவுப் பிரிவின் மூலம் புதிய பயங்கரவாதத்தை தோற்கடித்து புதிய நாட்டை கட்டியெழுப்பலாம்.
எமது மனது தூய்மைப்பட வேண்டும். 2 மாதங்களில் நாம் சரியான தீர்மானம் மேற்கொண்டு புதிய நாட்டை உருவாக்குவோம்.
எமது நாட்டின் சௌபாக்கியம் அனைத்து மக்களுக்கும் சரியாகச் சென்றடையவில்லை. இதனை புள்ளி விபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் மூலம் அறிய முடிகிறது.
நாட்டின் தேசிய வருமானத்தில் 55 வீதத்தை அனுபவிப்பது 20 வீதமான பணக்கார்களே ஆவார்கள். 4 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றுக்கு உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளுக்கு மாதம் குறைந்தது 55 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
உலக வங்கி அறிக்கையின் படி 45 வீதமான குடும்பங்கள் தினம் 5 டொலர்களையே வருமானமாகப் பெறுகின்றன. இது மாதம் 27—–30 ஆயிரம் ரூபாவுக்கு உட்பட்ட தொகையாகும்.
இதன் மூலம் நாட்டின் சௌபாக்கியம் சகல மக்களுக்கும் சமமாகச் சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது.
பலமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். சிலர் வளங்கள் தமது சமயத்தை, தமது மக்களை மாத்திரம் சென்றடைய வேண்டுமென நினைக்கின்றனர்.
இராணுவ பலம், பாதுகாப்பு பலம், பொருளாதார பலம், அரசியல் பலம் அனைத்தும் நாடு முழுவதும் வியாபிக்க வேண்டும்.். சென்றடைய வேண்டும். இது ஒரு சமயத்தை, ஒரு இனத்தை மாத்திரம் சென்றடையக் கூடாது. ஸ்திரமான நாடு உருவாக்கப்பட்டு சாதி, மத, நிறம், குல பேதமின்றி தேசிய பலன்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என்றார்.
vidivelli