முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 22ஆவது நினைவு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
1917 மே மாதம் 12 ஆம் திகதி, நூற்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்தார். அவரது பிறப்பு சம்பவமல்ல – சரித்திரமாகும். பிறப்பிற்கு பத்து மாதங்களுக்கு முன்னர் அன்னார் தாய் வயிற்றில் கருவானது கூட புனிதமான ஒரு தினத்தில் என்று தன் தாய் கூறிய விடயத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கூறி மகிழ்வார். அதற்காக அடிக்கடி அல்லாஹ்வைப் புகழ்வார். அந்தத் தினம் புனித லைலத்துல் கதிர் இரவு என்று சொல்லப்படும் ரமழான் 27 ஆம் நாளாகும். இந்தச் செய்தியை அவர் உளப்பூரிப்போடு கூறுவார். இத்தகைய சிறப்புமிகு ஆத்மீகத் தோன்றலே தேசமான்ய முன்னாள் சபாநாயகர், முதல் முஸ்லிம் ஆளுநர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். அப்துல் பாக்கிர் மாக்கார்.
ஒருவரது பிறப்பு சம்பவமல்ல, சரித்திரம் என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல்கலாம் சொல்லிச் சென்றார். அதேபோல் அவரும் சரித்திர நாயகரானார். மர்ஹூம் பாக்கிர் மாக்காரும் சபாநாயகராகி சரித்திரம் படைத்தவர். எத்தனை பேருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, பிரதமர் ஆர்.பிரேமதாஸ இரு தலைவர்களும் இளவரசர் சார்ள்ஸ் – டயானா திருமணத்திற்கு ஐக்கிய இராச்சியம் சென்றனர். அப்பொழுது நாட்டின் மூன்றாவது பிரஜை நமது சபாநாயகர் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் முதல் பிரஜையானார். நாட்டின் ஆட்சி அதிகாரம் அவர் கையில் வந்தது.
மர்ஹூம் அப்துல் பாக்கிர் மாக்காரின் அகன்ற நெற்றியும் தெளிந்த பார்வையும் தூய உள்ளமும் துணிந்து செய்த பணிகளும் அவரைப் புனிதராக புடம் போட்டது. அவரது 40 ஆண்டு கால அரசியல் பயணத்தையொட்டி எனது நெறியாள்கையில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன துணையோடு 25 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவரது கை தஸ்பீஹ் மணிக்கோவையை தவறவிடாமல் ஏந்தி நிற்கும் திக்ர், அவ்றாத் முதலியவற்றை அவர் உச்சரித்துக் கொண்டே இருப்பார்.
ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக அவர் அங்கீகாரம் பெற்றவர். ஆனாலும் அனைத்து தரீக்காக்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். எப்பொழுதும் எந்தக் கூட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியில் அவர் உரையாற்றும் பொழுதெல்லாம் ஏக அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியே கரீம் (ஸல்) திருநாமத்தை தப்பாமல் சொல்லித் தொடங்குவார். அவரது ஆத்மீக ஈடுபாட்டை அன்னாரின் இளம்பராயம் முதல் பார்த்த பலரும் எதிர்கால அவரது உயர்ந்த வாழ்க்கையை புகழ்ந்து கூறுவார்கள்.
தனது ஆரம்பக் கல்வியை தொடர்வதற்காக 1924 ஆம் ஆண்டில் கொழும்பு சென். செபஸ்தியன் வித்தியாலயத்தில் சேர்ந்தார். அங்கிருந்து மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் நுழைந்த அவர் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். ஸாஹிறாவிலிருந்து 1939 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்த அவர் 2 ஆவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகவே 1940 இல் நாட்டின் பாதுகாப்பிற்காக தேசிய விமானப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். அவரது துணிவையும் திறமையையும் கண்ட அன்றைய ஆட்சியினர் அவரைப் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பினர். பயிற்சியை முடித்து வந்த அவர் களுத்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டார்.
2 ஆவது உலகமகா யுத்தம் முடிய 1945 ஆம் ஆண்டு மீண்டும் சட்டக் கல்வியைத் தொடர்ந்தார். சட்டக் கல்லூரி மாணவனாக இருந்து கொண்டே 1947 ஆம் ஆண்டு பேருவளை நகரசபைத் தேர்தலில் மருதானை வட்டாரத்தில் தேர்தலில் குதித்ததன் மூலம் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். அத்தேர்தலில் மிகச்சொற்ப வாக்குகளால் தோல்விகண்ட அவர் தளர்ந்து விடவில்லை.
1949 ஆம் ஆண்டு ஜம்இய்யத்துல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை அமைத்து அதன் தலைவரானார். அவ்வியக்கத்தின் மூலம் பொதுவாக சகல முஸ்லிம்களதும் குறிப்பாக, பேருவளை முஸ்லிம்களது சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். அவரின் துணிவும் சமூகப்பற்றும் சேவை மனப்பான்மையும் மருதானை மக்களது மனதில் நீங்கா இடம் பிடிக்கக் காரணமாயிற்று. மீண்டும் 1949 ஆம் ஆண்டு அதே வட்டாரத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 1950 இல் பேருவளை நகர சபைத் தலைவரானார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஆற்றல்மிக்க பாக்கிர் மாக்கார் மும்மொழிப் புலமை மிக்கவர். அரசியல், சமூக வாழ்வில் தனக்கென தனிவழியை அமைத்துக் கொண்டவர். பணத்திற்கு அதன் பலத்திற்கு ஒருபோதும் அடிபணியவில்லை. சன்மார்க்கக் கோட்பாடுகளை அரசியல் இலாபத்திற்காக விட்டுக்கொடுக்கவில்லை. இந்த நாட்டில் அரபுக்கள், முஸ்லிம்கள் முதல் கால்பதித்த பகுதியான பேருவளை நகரின் தனித்துவம் காத்தவர். பௌத்த, இந்து, கத்தோலிக்க மத வழிபாட்டு இடங்களுக்குச் சென்றாலும் அந்தந்த மதங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறவில்லை.
களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பேருவளை தொகுதிக்கு முஸ்லிம் பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை 1957 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தல்கொடபிடிய தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுமுன் எடுத்துக் கூறினார். இதன் மூலம் அவரின் முயற்சி வெற்றிபெற்றது. 1960 ஆம் ஆண்டு தொடக்கம் பேருவளைக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தித்தவெல தேர்தல் தொகுதி ஆணைக்குழுவில் பேசி பேருவளைத் தொகுதியில் சிங்கள, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றெடுத்தார்.
தன்னுடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் மஸ்ஜிதுல் அப்ராரை அவர் விஸ்தரிப்புச் செய்தார். அதே போல் அழகான முறையில் அதனை திறந்தும் வைத்தார். இப்பள்ளித் திறப்பு விழா முதல் குத்பா பிரசங்கத்தை மர்ஹூம் மெளலவி கிண்ணியா எஸ்.எல்.எம்.ஹஸன் அஸ்ஹரியைக் கொண்டு நிகழ்த்தச் செய்தார்.
1986 ஜூலை 11 ஆம் திகதி இதன் திறப்பு விழா நடந்தேறியது. தந்தை வழியே தனயனும் தப்பாது இதே மஸ்ஜிதின் முன்னேற்றத்திற்காக தன் உடல், பொருள், உழைப்பு அனைத்தையும் அர்ப்பணித்து செய்யும் பணிகள் கண்கூடு. இன்று அதே மஸ்ஜிதின் மையவாடி பூந்தோட்டமாய் காட்சியளிப்பது மகனார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர் தம் பணிகளின் சிறுதுளியாகும். இதே மஸ்ஜிதுல் அப்ரார் ஆதி முஸ்லிம்களின் ஆரம்ப மஸ்ஜித் என்ற வரலாற்றை மையமாக வைத்து நினைவு முத்திரை வெளியிட்டதையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். தபால், தொலை தொடர்புகள் அமைச்சராக 2003 ஜுன் 8 இல் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கடமையாற்றியபோது இக்கைங்கரியம் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை அதே மஸ்ஜிதுல் அப்ரார் முன்றலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையூடாக என்னால் இலட்சக்கணக்கான நேயர்கள் கேட்கக்கூடியதாக அஞ்சல் செய்யக்கிடைத்த அரிய நிகழ்வையும் நன்றியோடு என்றும் நினைவுகூருவேன்.
இத்தகைய சிறப்பான நினைவுகளைக்கூட வேண்டுமென்றோ என்னவோ ஒரு சிலர் ஊடகத்தில் இருட்டடிப்புச் செய்தாலும் இறைவன் மத்தியில் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அவர்களுக்கு உரிய நன்மை ஸதகத்துல் ஜாரியாவாகக் கிடைக்கத்தான் செய்யும்.
“மனிதனுக்கு நன்றி செய்யாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யமாட்டான்” (அல் ஹதீஸ்) இந்தக் கூற்றுக்கு ஏற்ப அன்னாருடன் கூடப் பழகியவர்களுள் குறைந்த அறிவும் ஆற்றலும் பெற்ற நானும் (கட்டுரையாசிரியர்) நண்பர் என்.எம். அமீனும் என்றும் எமது அரசியல் தலைவராகவும் வழிகாட்டியாகவும் வாழ்வின் முன்னோடியாகவும் கொண்டோமென்பதை நன்றியோடு அவ்வப்போது நினைவுபடுத்துவோம்.
அன்னார் இலாகா இல்லா அமைச்சர் பதவி வழங்கப்பெற்ற 1983 ஜுலை கலவர காலத்திலிருந்து அன்னாருடன் மிக நெருக்கமாகவும் அன்னியோன்யமாகவும் எம்மிருவருக்கும்தான் பழகக் கிடைத்தது. அமைச்சர் பாக்கிர் மாக்காரின் அந்தரங்கச் செயலாளர் மர்ஹும் ஹாஜி ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் உத்தியோகபூர்வ கடமைகளில் கண்ணாயிருப்பார். மாறாக நானும் நண்பர் அமீனும் அன்னாரின் வலதும் இடமுமாக தினமும் அவரது அரசியல் பாசறையில் அரசியல் படித்தோம், பயணித்தோம்.
இன்று கொழும்பு பிரதான வீதிப்பக்கம் கம்பீரமாக காட்சியளிக்கும் சம்மாங்கோட்டை பள்ளிவாசல் அன்று ஹாஜி ஒமர் நம்பிக்கை நிதியக் கட்டடமாகும். நிதியத்தின் தலைவரான மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அதே கட்டடத்தில் 2 ஆம் மாடியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தையும் இயக்கினார். காலப்போக்கில் அவரோடு கடைசிவரை இருந்த ஒரு சிலரை வைத்துக்கொண்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமென்ற சமுதாய அமைச்சுக்கு மர்ஹூம் பாக்கிர் மாக்கார் தலைமைத்துவம் கொடுத்தார். 1983 ஜூலை 23 கலவரம் தலைநகரை சுட்டெரித்த காலத்தில் பாக்கிர் மாக்கார் என்ற தனி மனிதன் சம்மேளனத் தலைமையகம் வருவார். தினமும் சமூக, சமய, கல்வி, பொருளாதார பிரச்சினைகளை வைத்து நாடெங்கிலும் இருந்து வரும் கடிதங்களையும் தொலைபேசி அழைப்புக்களையும் கேட்டறிவார்.
நண்பர் என்.எம்.அமீன் உதயம் பத்திரிகை செய்திகளை தொகுத்து பத்திரிகையை தயார்படுத்துவார். தினமும் வரும் கடிதங்களைப் படித்து பரிகாரம் பெற வழிகூறுவார். குறிப்பிட்ட ஒரு சிலர் அந்திப் பொழுதில் அவரைச் சந்திப்பதற்கு சம்மேளனத் தலைமையகத்திற்கு வருவது சகஜமாகும்.
மர்ஹூம் பாக்கிர் மாக்காருடைய நாடளாவிய ரீதியான பயணங்களையும் அவற்றால் சமூகம் பெற்ற நற்பயன்களையும் நன்றியோடு நான் இங்கு பதியக் கடமைப்பட்டிருக்கின்றேன். இதன் மூலம் இன்றுள்ள சமூக அரசியல்வாதிகள் பாடம்பெற வேண்டுமென விழைகிறேன்.
1978 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தினங்கள் தங்கியிருந்து நிவாரணம் வழங்கிய நினைவுகள் இன்றும் பேசப்படுகின்றன.
1979 ஆம் ஆண்டு இந்தோனேசிய ஹஜ் யாத்திரிகர்களது விமானம் நீர்கொழும்பு ஆண்டியம்பலம் எனும் இடத்தில் விழுந்த போது சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் முன்னின்று நிவாரணப்பணிகளை நிறைவேற்றினார். இன்றும் கட்டுநாயக்கவில் அவர் விடுத்த வேண்டுகோளில் இந்தோனேசிய அரசு அமைத்துக் கொடுத்த நினைவு மண்டபம் தக்க சான்றாகும்.
மட்டக்களப்பில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் மக்களுக்கு அன்னாரின் வேண்டுகோளின் பிரகாரம் அப்போதைய ஈராக் தூதுவர் அலி அல் தைரி அமைத்துக் கொடுத்த 100 வீடுகளை உள்ளடக்கிய சதாம் ஹுஸைன் கிராமம் அன்னாரின் சேவைக்கு இன்னொரு சான்றாகும்.
1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென்று கந்தளாய் குளம் உடைப்பெடுத்தது பெருந்தொகையான முஸ்லிம்கள் இதன் மூலம் வீட்டையும், வயல் நிலங்களையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக வாலிப முன்னணிகளின் தலைவர்களையும் மற்றவர்களையும் அங்கே வரச்செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவி புரிந்தார். இன்றும் இதனை கந்தளாய், பேராற்றுவெளி பகுதி மக்கள் நன்றியோடு நினைவுகூருவார்கள்.
1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு காயல்பட்டணத்தில் நடைபெற்ற 3 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலக்கிய தூதுக்குழுவின் இலங்கைத் தலைவர், அப்போதைய கல்வி அமைச்சர் நிஸங்க விஜேரத்ன, மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் மஹ்றூப், கொழும்பு செட்டியார் தெரு மீலாத் கமிட்டித் தலைவர் மர்ஹூம் எம்.எம்.ஸஹாப்தீன், அறிஞர் அல்லாமா எம்.எம்.உவைஸ், கல்விமான் எஸ்.எம். கமால்தீன் உட்பட ஏ.எச்.எம்.அஸ்வர், பத்திரிகையாளர் மர்ஹூம் எம்.பீ.எம். அஸ்ஹர் முதலியோர் மாநாட்டிற்காக சென்று வந்ததை பதிய விழைகிறேன். அப்பொழுது சுமார் ஐம்பது பேர் அன்னார் தலைமையில் மாநாட்டில் கலந்து கொண்டனர். காயல்பட்டண மக்கள் மகத்தான வரவேற்பளித்தார்கள். இலங்கை வானொலிக்காக முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் மர்ஹூம் வீ.ஏ.கபூர் தலைமையில் சென்ற குழுவில் என்னையும் அன்புடன் மர்ஹும் பாக்கிர் மாக்கார் இணைத்து வைத்தார்.
இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் முதல் பத்துப் பேர்களுக்குள் அடங்குவார். அத்துடன் அரசியல் செய்த ஆத்மீகத் தலைவராக அவர் முதல்வராவார்.
அவரது பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பல பக்கங்களாக எழுதலாம். அவர் தன் சொந்தப் பணத்தில் நடத்திய உதயம் பத்திரிகை மற்றும் DAWN எனும் ஆங்கில இதழ் வரை பாக்கிர் மாக்கார் சமூக, சமய முன்னேற்றத்திற்காகவே வெளியிட்டு வந்தார்.
தனது பதவி, பட்டம்,பணம், பொருள் உட்பட நேரம் அத்தனையையும் சமூக எழுச்சிக்காகவே செலவழித்தார். இதன் மூலம் தன் வாழ்நாளில் வெற்றியை கண்டு மனநிறைவோடு அவர் மறைந்தார். இதனால் அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.
மர்ஹூம் பாக்கிர் மாக்கார் வாழ்வு மற்றையோர்க்கு எடுத்துக்காட்டாகும். அல்லாஹ் அன்னாரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிரார்த்திப்போமாக. ஆமீன்.
எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர்
vidivelli