முஸ்லிம்களைத் தாக்கியவர்கள் வெட்கமின்றி அவர்களிடம் வாக்குக் கேட்கின்றனர்
புத்தளத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மதஸ்தலங்களையும், அவர்களது சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் இன்று முஸ்லிம் மக்களிடத்தில் வந்து வெட்கமற்ற முறையில் வாக்குகேட்க முனைவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமான சஜித் பிரேமதாச, ஒருபோதும் உண்மையான முஸ்லிம்கள் இதனை அங்கீகரிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கத்தோலிக்க மதவழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்வதற்காக வேண்டி காசோலைகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரிய பள்ளி) பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஏ.ஜனாப் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான எ.எச்.எம்.பௌசி, பாலித ரங்க பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, டாக்டர் இல்யாஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், ஐக்கிய தேசிய கட்சி கற்பிட்டி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.சித்ரானந்த உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இந்நாட்டில் இன ரீதியிலான மோதல்களை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட இனவாதிகள் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது போனது. நாட்டையும், மக்களையும் நேசிக்கும் பெரும்பாலான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாடு தீப்பற்றி எரியும் நிலையினை ஏற்படுத்தவிடாமல் தடுத்ததை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவில் புத்தமதத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை பாதுகாப்பதும் எமது அனைவரினதும் பொறுப்பாகும். அது மட்டுமல்ல, 14 ஆவது பிரிவில் அதேபோன்று ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பினையும், உரிமையினையும் வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்றேன்.
புத்தபிரான் போதித்த தர்மத்துக்கு அமைவாக சகலரும் சமமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாம் எம்மில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை புரிந்துகொள்ளும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. யதார்த்தத்தை புரிந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளது.
மத ரீதியானதும், இனரீதியானதுமான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எமது நாட்டில் இனி இடம் கொடுக்க முடியாது.
நாட்டில் ஏதாவது வடிவில் மதங்களுக்குள்ளும், நாட்டுக்குள்ளும் அடிப்படைவாதம் எங்காவது காணப்படும் என்றால் அதனை ஒழித்தேயாக வேண்டும். இதுமட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இனி எமது நாட்டில் இடம் கொடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், எவ்வாறு பௌத்த விகாரைகளை நாங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றோமோ அதேபோன்று எமது நாட்டிலுள்ள அனைத்து ஏனைய மதஸ்தலங்களையும் நாம் பாதுகாப்பதற்கான உறுதியினை வழங்குகின்றேன் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
இதன்போது, புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, பெரிய பள்ளி நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.
vidivelli