மேற்குலகு, பயங்கரவாதிகள் இணைந்து நாட்டில் நாசகார செயலை செய்ய முயற்சி
கேந்திரத்தை கைப்பற்ற திட்டம் என்கிறார் விமல் வீரவன்ச
அமெரிக்க மேற்குவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து இந்நாட்டில் இன்னொரு நாசகார செயலை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திரத்தை கைப்பற்றும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, கோத்தாபய ராஜபக் ஷ -மஹிந்த ராஜபக் ஷ இணைந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு நேற்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் மேற்கத்திய மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக வெற்றியை உருவாக்கிக்கொடுத்த மக்களே இன்று எம்முடன் இணைந்துள்ளனர். சவால்களுக்கே சவால் விடுக்கும் மக்கள் இன்றும் எம்முடன் இணைந்துள்ளனர். ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் மூலமாக இந்நாட்டில் இரத்தம் படிந்தது, அமைதியை விரும்பிய மக்கள் அச்சத்தில் இருந்தனர். சஹ்ரான் யாருக்கு தேவைப்பட்டார்? இந்த தாக்குதல் யாருக்குத் தேவைப்பட்டது என்பதை தேடிப்பார்க்க வேண்டிய கட்டம் உருவாகியது. விடுதலைப்புலிகளை இல்லாது ஒழித்தாலும் அவர்களின் சக்திகள் வேறு முறைமைகளில் எம்மை தாக்கிக்கொண்டே இருந்தன. காரணம், இலங்கையின் கேந்திரத்தை கைப்பற்ற வேண்டிய நோக்கமே சர்வதேச சக்திகளுக்கு ஏற்பட்டது. இன்றும் அதே நோக்கம் உள்ளது. மனித உரிமைகள் என கூறிக்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கமே உள்ளது. அதற்காகவே சஹ்ரான் போன்றவர்கள் இவர்களுக்குத் தேவைப்பட்டனர் . கறுப்புப்பணம் நாட்டில் நுழைந்தது. இந்த ஆட்சி பயங்கரவாதிகளை வளர்த்த ஆட்சியாகும். பிரதமர் முதற்கொண்டு அனைவரும் இந்தப் பயங்கரவாதத்திற்கு இடமளித்த நபர்கள். இந்தக் குற்றங்களிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. புலனாய்வுத்துறை 97 தடவைகள் அச்றுத்தல் விடுத்தும் தாக்குதலுக்கு இடம் கொடுத்தனர். ஐ. எஸ். அமைப்பை உருவாக்கியவர்கள் இந்த நாட்டுக்குள் இன்னொரு தாக்குதலை நடத்தும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்க, மேற்கு உலக சக்திகள் இந்த நாட்டில் இன்று நாசத்தை செய்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை சமூக ஊடகங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தவே முயற்சித்து வருகின்றனர். இன்று சஜித் மூலமாக தமது பயணத்தை உருவாக்க மங்கள போன்றவர்கள் முயற்சித்து வருகின்றனர். சஜித்தினால்கூட நாட்டினை மீட்டெடுக்க முடியாது. சஜித் அணியில் தான் ரிஷாத் பதியுதீன் அணியினரும் உள்ளனர். அடிப்படைவாதிகள் அனைவரும் அவர்களுடன் தான் உள்ளனர். இவர்களுக்கு இனியும் இடமளிக்க முடியாது. ஆகவே இவர்கள் அனைவரயையும் நிராகரித்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும். அன்று நாட்டை மீட்டெடுக்க மஹிந்த தேவைப்பட்டார். இன்றும் அதேபோன்று ஒரு நாசகார ஆட்சியை வீழ்த்த கோத்தாபய தேவைப்படுகின்றார். இன்று முழு நாடும் கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையையே கேட்கின்றனர். மஹிந்த -– கோத்தாவின் மூலமாக நாடு கேட்கும் சுதந்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். நோயாளியாக இன்று எமது நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது.
உணவாக உட்கொள்ளும் அனைத்துமே விஷமாக செல்லும் நாடே இது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்த நாடு பிச்சைக்கார நாடல்ல. அவ்வாறான நாடாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது. தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும், நாட்டினை கட்டியெழுப்பும் தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ளார். அதையும் தாண்டி புத்திசாலித்தனம் கொண்ட தலைவர் எமக்கு கிடைத்துள்ளார். அவர்தான் எமது கோத்தாபய ராஜபக் ஷ. அவரையே நாம் தலைவராக்க வேண்டும்.
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கோரிக்கை விடுத்து வரும் வேளையில் ரணில், தானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றார். இது எவ்வாறு என்றால் கல்யாண பத்திரிகையை சஜித் நாடு பூராகவும் பகிர்ந்து செல்லும் நிலையில் மணப்பெண்ணை கடத்தும் வேலையை ரணில் செய்கின்றார். இவ்வாறானவர்களுக்கு நாட்டினை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆகவே, மஹிந்த – –கோத்தா ஆட்சியே எமக்கு வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மோதிக்கொள்ளாது அனைவரும் இணைந்து வாழக்கூடிய நாட்டினை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் எமது வெற்றியைப்பேச வைக்க வேண்டியதே மக்களின் கடமை. கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றிபெற வைத்து நாட்டினை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வோம் அதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என கூறினார்.
vidivelli