சட்டவிரோதமாக கைது செய்து பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்
தடுத்து வைக்கப்பட்டுள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் புதல்வர் அஃப்fபான் செவ்வி
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பில் அவரது மூத்த மகன் அஷ்ஷெய்க் அஃப்fபான் ஹஜ்ஜுல் அக்பர் (நளீமி)
‘விடிவெள்ளி’க்கு வழங்கிய விஷேட செவ்வி.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டதை ஒரு திடீர் நிகழ்வாக நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டாரா?
நிச்சயமாக இரண்டுமில்லை என்றுதான் நாம் கருதுகிறோம். மாவனல்லை சிலையுடைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் உஸ்தாத் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்ற வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரிடமும் பல்வேறு வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமை உண்மையாகும். ஆயினும் அவரது விடயத்தில் வந்த அதிகாரிகளும் சரி, உத்தியோகத்தர்களும் சரி மிகுந்த கண்ணியத்துடனேயே நடந்து கொண்டனர். சிலபோது அத்தகைய அமர்வுகள் மணித்தியாலங்களாக நீண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வாக்குமூலங்களின் போது அவர் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்றும் ஒத்துழைத்தே வந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வந்த விசாரணைகள் எந்த அடிப்படையில் நடைபெற்றது என்பது பற்றியோ அல்லது அவ்விசாரணைகளை அடிப்படையாக வைத்துத்தான் எனது தந்தை கைது செய்யப்பட்டாரா என்பது பற்றியோ எமக்குத் தெரியாது.
ஆயினும் ஜனரஞ்சகமான ஒரு சமூகத் தலைவர் என்ற வகையிலும், இரண்டரை தசாப்த காலமளவு இலங்கையின் பழைமையான இஸ்லாமிய இயக்கமொன்றுக்கு தலைவராக இருந்தவர் என்ற வகையிலும் அவரது கைதானது வெறுமனே ஒரு திடீர் நிகழ்வாகவோ அல்லது விசாரணைகளில் ஏதும் தெரிய வந்ததன் காரணமாக இடம்பெற்ற கைதாகவோ இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.
நாட்டின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு நிறைந்த சூழலில், முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு பின்னணியில் இத்தகைய கைதுகளின் பின்னணியில் பலரது அரசியல் நலன்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியாது. வைத்தியர் ஷாஃபி விவகாரத்தில் இரண்டு மாத காலமளவு இழுத்தடித்த அரசியல் கைது நாடகத்தை யாரும் அவ்வளது எளிதில் மறந்திருக்க முடியாது. அவ்வாறான ஒரு பின்னணியில் அரங்கேற்றப்பட்ட ஓர் அரசியல் கைதாக இது இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் நிச்சயமாக இல்லாமலில்லை. அவ்வாறே, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளை முடக்குவதனை நோக்காகக் கொண்டு அதற்காக நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு செயற்பாடாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதற்கான முகாந்திரங்களும் இல்லாமலில்லை. வேறொரு வகையில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பற்றி தொடர்ந்தும் பொது வெளியில் அபாண்டங்களையும் நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வந்தவர்கள் தமது தனிப்பட்ட நலன்களுக்காக முன்னெடுத்த வேலைத் திட்டங்களின் விளைவாக அரங்கேறிய ஒரு கைதாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை. அல்லது ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பவர்களில் சிலர் அவர் தலைமை வகித்த அமைப்பிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டவர்கள் என்ற வகையில், தமது கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவரைப் பற்றி பொய்யான தகவல்களை வழங்கியிருந்திருக்கலாம். எது எப்படியோ திடீர் கைதொன்றுக்கோ அல்லது விசாரணையின் பின்னரான கைதொன்றுக்கோ காரணமாக அமையும் வகையிலான எந்த வகையான ஒரு செயலிலும் அவர் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அவரை அறிந்த அனைவரும் நன்கறிந்திருக்கின்றனர். அதன் விளைவான ஒன்றாகத்தான் அவரது கைதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடந்த பத்து நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்தும் குரலெழுப்பப்பட்டு வருவதை நோக்க வேண்டியிருக்கிறது.
நள்ளிரவில் வீடு தேடி வந்து ‘வாக்குமூலமொன்றுக்காக அழைத்துச் செல்கிறோம்’ என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாம் அறிந்து கொண்டது அடுத்த நாள் மாலையில் ஊடகங்களுக்கூடாகத்தான். அந்த செய்தி ஒரு திடீர் செய்தியாக இருந்தாலும் கூட மேற்கூறிய பின்னணியில் அது திடீர் கைதாகவோ அல்லது தொடர் விசாரணையின் பின்னரான கைதாகவோ அமைந்திருக்கவில்லை என்பதே எனது அவதானமாகும்.
சிறையில் சந்தித்த போது அவரது மனோநிலை எவ்வாறிருந்தது?
உண்மையில் இந்தக் கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களது மனோநிலையின் எதிரொலியாகவே நான் பார்க்கிறேன். இக்கேள்விக்கு பதிலளிக்கும் முன்பதாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். உஸ்தாத் அவர்கள் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்பதே உண்மையாகும். எவ்வித அடிப்படைகளும் இல்லாத நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்கள் பலவற்றை அவர் மீது சுமத்தி அவற்றோடு அவருக்கு சம்பந்தங்கள் இருக்கின்றதா என்பதை கண்டறியும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். அதாவது, வேறொரு வார்த்தையில் சொன்னால் ஒரு தொகுதி குற்றச்சாட்டுக்களை ஒரு பக்கத்திலும் உஸ்தாதை மறு பக்கத்திலும் வைத்துக் கொண்டு அவருக்கு அவற்றோடு ஏதும் சம்பந்தங்களிருக்கின்றதா என்று தேடிப் பார்க்கும் முயற்சியே இந்த விசாரணை என்று கூறலாம். வைத்தியர் ஷாஃபி மீது சுமத்தப்பட்ட அடிப்படைகள் எதுவுமற்ற குற்றச்சாட்டுக்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் இதுபற்றி உங்களால் ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இப்படியான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தன் மீது சுமத்தப்பட்டு தான் விசாரிக்கப்படுவதை சாதகமான ஒன்றாக கருதும் மனோநிலையிலேயே அவர் இருக்கிறார். இடைப்பட்ட இந்த பத்து நாட்களில் அவரை சந்திப்பதற்கான அனுமதி சுமார் பத்து நிமிடங்கள் அளவே எமக்கு வழங்கப்பட்டது. அந்த மிகக் குறுகிய அவகாசத்தில் எம்மோடு பேசிய போது, நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாக அடுத்த நாள் அவர் திட்டமிட்டு வைத்திருந்த சில வீட்டு வேலைகளைச் செய்ய முடியாதிருந்ததைக் குறிப்பிட்டு அதனை செய்து விடுமாறு கூறினார். வீட்டார் என்ன மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி நாம் சிரித்துக் கொண்டே வினவிய போது அவரும் கடைவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்துக் கொண்டே நகைச்சுவையாக அவற்றை மறுத்துரைத்தார். ‘இவர்கள் விசாரித்து முடிக்கட்டும், அது எனக்கும் நல்லது இஸ்லாமிய இயக்கத்துக்கும் நல்லது’ என்று தமாஷாகக் கூறினார். இவர்கள் போட்டிருக்கும் ஒழுங்குகளை மீற முயற்சிக்க வேண்டாம், எனக்கென்று விஷேடமாக உணவுகள் எதனையும் கொண்டு வந்து தர வேண்டியதில்லை, என்னை விசாரிப்பவர்களுக்கென்று இங்கே தயாரிக்கப்பட்டு வழங்கும் உணவைத்தான் எனக்கும் தருகிறார்கள். அதற்கு நான் இப்போது பழகி விட்டேன்’ என்று கூறினார். பொதுவாகவே வாரமொரு தடவை அல்லது பத்து நாட்களுக்கொரு தடவைதான் எமக்கும் தந்தையை சந்திக்கின்ற அவகாசம் கிடைப்பதால் இந்த சந்திப்பும் அத்தகைய ஒரு சந்திப்பாகத்தான் அமைந்திருந்தது. நாங்கள் விஷேடமாக ஒரு முஆனகா கூட செய்து கொள்ளவில்லை. ‘உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது நீங்கள் வெளியேறலாம்’ என்று கூறப்பட்ட போது உடனே எழுந்து வெளியேறிய எம்மை ஆச்சரியமாக நோக்கி, தந்தையை தொடர்ந்தும் அவதானிப்பதற்கென நியமிக்கப்பட்டிருந்த உளவுத் துறை உத்தியோகத்தர் ‘Hug கரண்னெத்த?!’ (முஆனகா செய்யவில்லையா?!) என்று கேட்டார். நாம் சிரித்துக் கொண்டே ‘அவசியமொன்றுமில்லை’ என்று பதில் கூறினோம். ‘இவரிடமும் உங்களுக்கு என்ன வேண்டும்? விஷேட ஏற்பாடுகள் எதுவும் செய்து தரப்பட வேண்டுமா? என்றெல்லாம் கேட்டோம். ஆனால் எனக்கு ஒன்றும் அவசியமில்லை என்று கூறிவிட்டு இருக்கிறார்’ என அந்த உத்தியோகத்தர் தந்தையைப் பற்றி எம்மிடமும் முறைப்பட்டுக் கொண்டார். மனதுக்குள்ளால் சிரித்துக் கொள்வதைத் தவிர நமக்கும் வேறெதுவும் தோன்றவில்லை.
தந்தை வீட்டிலிருக்கும் போது எப்படியிருப்பாரோ அதற்கு எந்த வகையிலும் மாற்றமில்லாத மிகவும் நிதானமான நகைச்சுவையான மனோநிலையுடனேயே அங்கும் இருந்தார். இதற்கு அன்றைய தினம் அவரை சந்தித்த மூன்று சட்டத்தரணிகளும் கூட சாட்சியாக இருந்தனர்.
குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை பற்றி ஏதும் கூறினாரா?
குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை பற்றி அவரிடம் விசாரித்துக் களைத்துப் போயிருந்த குறித்த உத்தியோகத்தர் கையில் பேனை மற்றும் குறிப்புப் புத்தகம் சகிதம் நமது கலந்துரையாடலிலாவது ஏதும் துப்புகள் கிடைக்குமா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார். பாவம் அவருக்கு தந்தையின் மோட்டார் சைக்கிள் பற்றிய தகவல்கள் தான் கிடைத்தன.
வெள்ளையைப் பார்த்து இது கறுப்புத்தானே என்ற ரீதியில் நடைபெற்று வந்த விசாரணைகள் விடயத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய கலவரம் அவரில் இருக்கவில்லை. ஆனால் தமது கைது நடவடிக்கையும் அதனைத் தொடர்ந்து மீடியாக்களுக்கு கசிய விடப்பட்ட அபாண்டங்களும் பொய்யானதாகவும் நகைப்புக்குரியதாகவும் மாறிவிடக் கூடாதே என்ற கலவரம் அங்கிருந்த உத்தியோகத்தர்கள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று அந்த உத்தியோகத்தர் எம்மிடம் குறைபட்டுக் கொண்டார். தந்தையின் பதிலோ ‘ஒத்துக் கொள்வதற்கு இதில் ஏதாவது இருந்தால்தானே!’ என்பதாகத்தான் இருந்தது.
மாவனல்லை சிலை உடைப்பு விவகார சூத்திரதாரிகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில், அதுபற்றிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் நிலைப்பாடு அன்று முதல் எவ்வாறிருந்தது?
உண்மையில் இக்கேள்விக்கான பதிலை அவரது எழுத்துக்களை தொடர்ந்தும் வாசித்தும், அவரது உரைகளை தொடர்ந்தும் கேட்டும் வந்த எவரும் நன்கறிவர். இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் அறிவின் முக்கியத்துவத்தையும் நடுநிலையான போக்கையும் அவர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருபவர். குறித்த சம்பவத்தைத் தொடர்ந்தும் கூட அவரது எழுத்திலும் பேச்சிலும் அது எந்தளவு தூரம் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான அம்சம் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்தார். அவையனைத்தும் பகிரங்க ஆவணங்களாகவே இருக்கின்றன.
புத்தர் சிலைகளை சேதப்படுத்திய நிகழ்வானது இஸ்லாத்துக்கு முரணானது மட்டுமல்ல, சுத்த முட்டாள்தனமானது என்ற கருத்திலும், அறிவீனத்தின் விளைவாகவும் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாகவுமே இத்தகைய முட்டாள்தனமான அதே நேரம் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஒருவன் ஈடுபடலாம் என்ற கருத்திலுமே அவர் தொடர்ந்தும் இருந்தார், இன்றும் இருக்கிறார். சிலையுடைப்பின் மூலமாக அந்த அறிவீனமான வேலையில் ஈடுபட்டவர்கள் இந்த நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பெரும் சிக்கலுக்குள் தள்ளி விட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் தொடர்ந்தும் இருக்கிறார்.
இந்த நிலைப்பாட்டை அவரிடம் இது வரையான காலங்களில் பெறப்பட்ட சகல வாக்கு மூலங்களிலும் மிகத் தெளிவாகவே வழங்கியுமிருக்கிறார். மட்டுமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களின் முன்னுரிமை எதுவாக இருக்க வேண்டும் என்பதிலும், இலங்கைக்கான இஸ்லாமிய வாழ்க்கை முறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதிலும் அவருக்கு மிகவும் தெளிவான ஒரு பார்வை இருந்தது, இப்போதும் இருக்கிறது. வன்முறைகளை விட்டும் தூரமான, இயல்பான, தெளிவான இஸ்லாமிய வாழ்க்கை முறையொன்றுக்கான அழைப்பையே அவர் தொடர்ந்தும் விடுத்து வருகிறார்.
சிலை உடைப்பு விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரதான நபர்களுள் ஒருவர், அதாவது உங்களது தந்தையின் சகோதரரின் மகன் வெளிநாட்டு பயிற்சி நெறி ஒன்றுக்கு செல்வதற்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அனுசரனை வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி?
எனது தந்தையின் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் பொதுவாகவே நகைப்புக்கிடமானதாக இருந்த போதிலும் மிகவும் குறிப்பாக என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்த குற்றச்சாட்டென்றால் அது இந்தக் குற்றச்சாட்டுத்தான்.
90களின் இறுதிப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பொன்று அவரைத் தேடி வந்த போதிலும் கூட அதனைத் தட்டிக் கழித்து விட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் வழங்கப்படும் சாதாரண மாத சம்பளத்துடன் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர்தான் (இன்று வரை அவ்வாறே தொடர்கின்றவர்) எனது தந்தை. நான் நளீமிய்யாவில் கற்கும் போது நளீமிய்யாவின் மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்கே புலமைப்பரிசில் ஒன்றில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கிருந்தது. எனது தம்பிகளில் ஒருவர் வெளிநாட்டில் தனது பட்டப்படிப்புக்காக செல்வதற்கு வாய்ப்பு கிடைத்த போது சுமார் ஒரு வருட காலத்துக்கு ஒரு தொழில் புரிந்து அதனால் வந்த வருமானத்தை சேமித்தே அதற்கான பயண செலவினங்களை அவர் ஏற்பாடு செய்து கொண்டார். நான் திருமணம் முடித்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாகின்றன. இதுவரையும் வருடாந்தம் கூலி வீடுகளில்தான் இருந்து வருகிறேன். எனது தந்தைக்கென்று சொந்தமாக இருப்பது மாவனல்லையில் இருக்கும் அவரது சாதாரண வீடும் அதனோடு இணைந்ததாக இருக்கும் சுமார் 10 -–12 பேர்ச்சஸ் காணியும் ஒரு மோட்டார் சைக்கிளும்தான். இதனையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், இத்தகைய பொருளாதார நிலையில் இருக்கும் ஒருவர் தனது சகோதரரின் மகன் வெளிநாட்டுப் பயிற்சியொன்றுக்காக செல்வதற்கு அனுசரணை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எந்தளவு தூரம் நகைப்புக்கிடமான ஒன்று என்பதை சுட்டிக் காட்டத்தான்.
மற்றப்படி அவர் யாருக்கும் எவ்விதமான பொருளாதார ரீதியான உதவிகளும் செய்யக் கூடிய ஒரு பொருளாதார நிலையைக் கொண்டவராக எச்சந்தர்ப்பத்திலும் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அதுபோக அவரது சகோதரரோ அல்லது சகோதரரின் குடும்பத்தினரோ எச்சந்தர்ப்பத்திலும் எந்தத் தேவைக்காகவும் அவரிடமோ அல்லது எம்மிடமோ எந்த உதவியையும் கேட்டு வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலை உடைப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தனது சகோதரர் இப்றாஹிம் மௌலவியையும் அவரது இரு புதல்வர்களையும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார். என்ன காரணங்களுக்காக அவர்கள் நீக்கப்பட்டனர்? தீவிரவாத சிந்தனை, செயற்பாடுகள்தான் இதற்குக் காரணமா?
உண்மையில் பலரும் கேட்கும் கேள்வியாக இது இருப்பதனாலும், இக்கேள்வியில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களில் சில மயக்கங்கள் இருப்பதாலும் முதலில் கேள்வியை தெளிவுபடுத்தி விட்டு அதற்கான பதிலுக்கு வரலாமென்று நினைக்கிறேன்.
உஸ்தாதின் சகோதரர் மற்றும் அவரது புதல்வர்கள் இருவரும் ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து நீக்கப்பட்டதாக உள்ள தகவல் உண்மையில் சரியான தகவலல்ல. அவரது சகோதரரது மகன்கள் இருவரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டனர். இக்கேள்வியில் குறிப்பிடப்பட்ட மூவரில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து விலக்கப்பட்டவர் அவரது சகோதரர் மாத்திரமே. அவரது மகன்மாரல்ல.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பானது தனியான யாப்பு மற்றும் ஒழுங்கு விதிகளுடன் கூடிய தனியான சுதந்திரமான அமைப்பாகும். ஜமாஅதே இஸ்லாமிக்கும் மாணவர் அமைப்புக்குமிடையிலான உறவு ஓர் ஆத்மார்த்தமான உறவேயன்றி வேறு எதுவுமில்லை. ஆலோசனைகள் தேவைப்படின் கேட்டுக் கொள்ளல், மனித வளங்களையும் சில பௌதீக வளங்களையும் அனுமதியுடன் பயன்படுத்துதல் என்பவற்றைத் தாண்டியதாக அந்த உறவு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தாயும் சேயுமானாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்களே! அது போன்றதொரு உறவுதான் இரு அமைப்புக்களுக்குமிடையிலான உறவாகும். மாணவர் அமைப்பானது அதன் அங்கத்துவத்துக்காக குறிப்பிட்ட வயதெல்லையொன்றை நிர்ணயம் செய்து வைத்திருக்கும் அமைப்பாகும். அந்த வயதெல்லையை ஒருவர் எட்டும் போது அதன் அங்கத்துவத்திலிருந்து வெளியேறியவராக கருதப்படுவார். அவ்வாறு வெளியேறும் அனைவரும் ஜமாஅதே இஸ்லாமியின் அங்கத்தவர்களாக ஆகிவிடுவதில்லை. அவ்வாறான ஒரு முறைமையுமில்லை. மாணவர் அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து குறிப்பிட்ட வயதைக் கடந்து வெளியேறிய பெரும்பாலானவர்கள் ஜமாஅதே இஸ்லாமியில் அங்கத்துவம் பெற விண்ணப்பிக்காமல் தத்தமக்கென்று வெவ்வேறு பாதைகளைத் தெரிவு செய்து கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உஸ்தாதின் சகோதரரது மூத்த மகனும் 2016ம் வருடத்தின் ஆரம்பப் பகுதியில் அவரது சகோதரரது இரண்டாவது மகனும் மாணவர் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர். இதில் மூத்தவர் நீக்கப்படுவதற்கான ஆலோசனையைப் பெறுவதிலும் அவரை விசாரிப்பதற்கான ஒத்தாசையைப் பெறுவதிலும் மாணவர் அமைப்பானது தனது முன்னாள் அங்கத்தவர்களான ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய அங்கத்தவர்கள் சிலரது உதவியை நாடியிருந்தது.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பானது கடந்த நான்கு தசாப்தங்களுக்கு அண்மித்த காலமளவு இலங்கையில் இயங்கி வரும் அமைப்பாகும். இக்காலப் பகுதியில் இவ்வமைப்பானது யாப்பு ரீதியிலும் சரி நடைமுறை ரீதியிலும் சரி சில ஒழுங்குகளையும் உள்ளகக் கலாசாரத்தையும் பேணி வரும் அமைப்பாகும்.
அந்த வகையில் அமைப்புக்குள் தலைவர் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான தெரிவுகள் ஒரு போதும் போட்டியின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. நான் தலைவராக வரவேண்டும் என்ற ரீதியிலான பிரசாரங்களோ, அல்லது இருக்கும் தலைவருக்கெதிரான உள்ளக பிரசாரங்களோ, தனக்கான ஆதரவு வட்டமொன்றை உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளோ அல்லாஹ்வின் அருளால் இவ்வமைப்புக்குள் நடைபெற்றிராத விடயங்களாகும்.
உஸ்தாதின் சகோதரரது மூத்த மகனது செயற்பாடுகள் இந்தப் பாரம்பரியத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதை அதன் சிரேஷ்ட அங்கத்தவர்கள் சிலர் அவதானித்த போது மேற்கொண்ட உள்ளக விசாரணைகளில் குறித்த நபர் தனக்கான ஆதரவு வட்டமொன்றைத் திரட்டும் செயற்பாடுகளிலும், தலைமையின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அதற்கு எதிரான கருத்துக்களை அங்கத்தவர்கள் மத்தியில் இரகசியமாக பரப்பும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இந்தப் பின்னணியில் இவர் இரகசியக் கூட்டங்களைக் கூட்டியிருக்கிறார் என்பதும் தான் அமைப்பின் தலைவராக வருவதற்கான மறைமுகமான முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்பதும் சாட்சிகள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டவுடன், ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இவர் தொடர்பாக முடிவொன்றை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு ஜமாஅதே இஸ்லாமியின் அங்கத்தவர்கள் சிலரது உதவியை நாடியது. தான் தலைவராக வர வேண்டும் என்று ஒருவர் நினைப்பதிலும் அதற்கான முயற்சிகளை ஒருவர் மேற்கொள்வதிலும் என்ன தவறிருக்கலாம்? என்று ஒருவர் கேள்வியெழுப்பலாம்.
உண்மையில் இது ஓர் அரசியல் கட்சியாக அல்லது இஸ்லாமிய விழுமியங்களை விட்டும் தூரமான ஓர் அமைப்பாக இருந்திருப்பின் இத்தகைய ஒரு கேள்வியை நியாயமான கேள்வியாக கருதலாம். ஆனால் தசாப்தங்களாக தலைமைத்துவத்தை ஒரு பதவியாக கருதாமல் ஒரு பொறுப்பாகக் கருதி சுமக்க வேண்டும் என்ற மனப்பாங்கை அங்கத்தவர்களுக்கு மத்தியில் விதைத்திருந்த ஓர் இஸ்லாமிய இயக்கத்துக்கு இந்த முயற்சியானது அதிர்ச்சியளிக்கும் ஆபத்தாகவே தென்பட்டது என்ற உண்மையை இங்கு கட்டாயம் சொல்லியாக வேண்டும். இந்தப் பின்னணியில்தான் குறித்த விவகாரம் பாரதூரமானதாகக் கருதப்பட்டு மிகவும் சீரியஸாக அணுகப்பட்டது. அதே நேரம் அவர் சகவாழ்வு, மற்றும் சமூக வாழ்வின் இன்னோரன்ன அம்சங்கள் போன்றவற்றில் தீவிரமான கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்தார்.
அந்த அடிப்படையில் குறித்த நபர் இங்கிதம் கருதி அவரது தந்தையின் முன்னிலையில் மாணவர் அமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் மூலமாக விசாரிக்கப்பட்டார். குறித்த விசாரணையின் முடிவாக ‘இவரை நீங்கள் நீக்கி விடுவதே பொருத்தமாகும்’ என்ற ஆலோசனையை குறித்த குழுவினர் மாணவர் அமைப்புக்கு வழங்கினர். இந்த ஆலோசனையை கருத்திலெடுத்த மாணவர் அமைப்பின் மத்திய செயற்குழு அது தொடர்பான மேலதிக கலந்துரையாடலுக்குப் பின்னர் அவரது அங்கத்துவத்தை இரத்துச் செய்வதாக முடிவெடுத்தது. இது சம்பந்தப்பட்ட ஆவணங்கள் யாவும் உளவுத் துறையினருக்கு வழங்கப்பட்டுமிருக்கின்றன.
இவ்வாறு இவர் அங்கத்துவ நீக்கம் செய்யப்பட்டதும் அது தொடர்பான அறிவித்தல் மாணவர் அமைப்பின் சகல கிளைகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது. குறித்த நபர் தற்போது முதல் அமைப்பின் அங்கத்தவரல்ல என்றும் அவர் அமைப்பில் எந்தப் பொறுப்பையும் வகிப்பவரல்ல என்றும் எனவே அவரோடு அமைப்பு சார்ந்த உறவைப் பேணுவதோ அல்லது அவர் ஏதேனும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் அதில் கலந்து கொள்வதோ கூடாது என்றும் அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், சுமார் ஆறு மாத காலமளவில் அவரது சகோதரர் அவரோடிணைந்து சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துகிறார் என்ற செய்தி மத்திய செயற்குழுவுக்கு கிடைத்ததும், அந்த விடயமும் விசாரிக்கப்பட்டு அது உண்மை என்று கண்டறியப்பட்டவுடன் அவரும் அறிவுறுத்தல்களை மீறியதன் பேரில் அங்கத்துவ நீக்கம் செய்யப்பட்டார்.
இவர்களது தந்தை ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து இடைநிறுத்தப்பட்டது தொடர்பிலான விளக்கத்தை வழங்குவதற்கு உண்மையில் நான் பொருத்தமானவனல்ல. ஏனெனில் நான் ஜமாஅதே இஸ்லாமியின் செயற்குழுவிலோ அல்லது குறித்த விவகாரத்தைக் கையாண்ட குழுவிலோ அங்கத்துவம் வகித்தவனல்ல. எனினும் குறித்த விடயம் தொடர்பில் நானறிந்த விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என்று கருதுகிறேன்.
அந்த வகையில், ஆரம்பத்தில் தனது மூத்த புதல்வர் மாணவர் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டதை அவர் ஓர் அநீதியான விடயமாகவும் குறித்த விடயத்தை விசாரித்த ஜமாஅத்தின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுவினர் அநீதியாக நடந்துகொண்டிருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் மாணவர் அமைப்புக்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி உபதேசம் வழங்க வேண்டும் என்றும் அவர் ஜமாஅதே இஸ்லாமியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இவரது வேண்டுகோளை பரீட்சித்த ஜமாஅதே இஸ்லாமியின் மத்திய செயற்குழு அவரையும் அவரது மகனையும் அழைத்து அவர்களது தரப்பு வாதங்களைக் கேட்டறிந்திருக்கிறது. பின்னர் அதே சந்தர்ப்பத்தில் அவரை விசாரித்தவர்களது வாக்குமூலத்தையும் பெற்றிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் விடயத்தை அதன் மத்திய செயற்குழுவை தெரிவு செய்யும் அதிகாரமிக்க பிரதிநிதிகள் சபைக்கு கையளித்திருக்கிறது. அங்கே குறித்த விசாரணை மிகவும் நீதியாகவும் பக்கச்சார்பற்றதாகவுமே நடைபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பில் குறித்த விசாரணைக் குழுவினரது விசாரணை நடவடிக்கைகள் நடுநிலையானதாகவே நடைபெற்றிருக்கின்றன என்ற விடயமும், மாணவர் அமைப்பு குறித்த குழுவினரது ஆலோசனையின் பிரகாரம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தீர்மானம் தனக்கு சார்பானதாக வராமலிருந்ததன் காரணமாக உஸ்தாதின் சகோதரர் மெல்ல மெல்ல ஜமாஅதே இஸ்லாமியின் அதிருப்தியாளராக மாற ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் தீர்மானம் சரியானது, தனது மகன்மாரின் மீதே தவறு இருக்கின்றது என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்ததாகவும் எமக்கு சில தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும், போகப் போக அவர் படிப்படியாகத் தனது மகன்மாரின் பக்கம் சாயத் துவங்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு உரிய தெளிவை வழங்குவதற்காக ஜமாஅதே இஸ்லாமி பல்வேறு முயற்சிகளை தொடர்ந்தும் செய்து வந்திருக்கின்றது. உஸ்தாத் தனிப்பட்ட ரீதியிலும் ஜமாஅதே இஸ்லாமியினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் தனிப்பட்டவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரோடு கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கின்றனர். எனினும் அவையனைத்தும் ஆற்றில் கரைத்த சீனியின் கதையாகவே முடிவடைந்திருக்கின்றன.
ஒரு கட்டத்தில் அவர் ஜமாஅதே இஸ்லாமி வழிகேட்டிலிருப்பதாகவும், இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களை தனது யாப்பில் கொண்டிருப்பதாகவும் பகிரங்கமாக பேசத் தொடங்கியிருந்தார். இது தொடர்பாக ஜமாஅதே இஸ்லாமி அவரிடம் விளக்கம் கோரிய போது தனது நிலைப்பாடு தொடர்பில் அவர் ஜமாஅதே இஸ்லாமிக்கு ஒரு கடிதமும் அனுப்பியிருக்கிறார். இவையனைத்தையும் அடிப்டையாக வைத்து கடந்த 2018 ஜூன் மாதமளவில் இவரை அங்கத்துவ நீக்கம் செய்வதே பொருத்தமானது என்ற தீர்மானத்தை ஜமாஅதே இஸ்லாமியின் மத்திய செயற்குழு ஏகமனதாக நிறைவேற்றி அதனது பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றது.
இத்தகைய பின்னணிகளில்தான் உஸ்தாதின் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமியிலிருந்தும் அவரது சகோதரரது மகன்கள் மாணவர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தீவிரவாத சிந்தனையின் பால் செல்கின்றனர் என்பது பற்றி அறிந்ததும் அதுபற்றி ஜமாஅதே இஸ்லாமி மூலமாகவோ அல்லது தனிப்பட்ட வகையிலோ பொலிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டனவா?
உண்மையில் இக்கேள்வியானது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட மனோநிலையின் விளைவாக பிறக்கும் கேள்வியாகும். நான்கு வருடங்களுக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தையும் அதனடியான செயற்பாடுகளையும் தற்போதைய அரசியல் சூழலின் விளைவாக ஏற்பட்டிருக்கும் பொது உளவியல் சார்ந்து நின்று புரிந்துகொள்ள முயற்சிப்பது பொருத்தமானதாக இருக்காது என்பது மட்டுமல்ல பிழையான முடிவுகளுக்கும் அது காரணமாக அமையக் கூடும்.
குறித்த தீர்மானத்தை மாணவர் அமைப்பு மேற்கொண்ட காலப்பகுதியும் சரி, அல்லது ஜமாஅதே இஸ்லாமி மேற்கொண்ட காலமும் சரி நாட்டில் ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலமாகும். ஒரு பக்கத்தில் வெறுப்புப் பேச்சுக்களும் அவ்வப்போதான அராஜகங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் கூட அவை பெரும்பாலும் முஸ்லிம்களுக்கெதிரானதாகவே அமைந்திருந்தன. ஸஹ்ரான் போன்ற இன்று பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட ஒருவனும் கூட அப்போதைய காலப்பிரிவில் சுதந்திரமாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி வந்த விடயத்தில் இந்த சமூகமும், முழு நாடும் ஏன் உளவுத் துறையும் கூட பராமுகமாகவே இருந்து வந்ததை அனைவரும் நன்கறிவர். இப்படியான ஒரு சூழலில் ஒப்பீட்டளவில் யாரும் பாரதூரமாக எடுத்துக் கொள்ள முடியாத சில விடயங்கள் காரணமாக, அதாவது அமைப்பின் உள்ளக ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானதன் காரணமாகவும், அமைப்பில் அங்கத்தவராக இருக்கும் நிலையில் அதன் யாப்பு இஸ்லாத்துக்கு முரணான ஷரத்துக்களை கொண்டிருக்கின்றது என்று திடீர் குற்றச்சாட்டை முன்வைத்து அதனை அடிப்படையாக வைத்து ஜமாஅதே இஸ்லாமிக்கு வழிகேட்டுப் பட்டம் சுமத்தியவர் ஒருவரை அங்கத்தவராக வைத்துக் கொள்ள முடியாது என்ற பின்னணியின் காரணமாகவும் அங்கத்துவ நீக்கம் செய்யப்பட்டவர்களைப் பற்றி உளவுப் பிரிவுக்கு விஷேட தகவல்கள் வழங்குவதற்கு எதுவும் இருக்கவில்லை.
எனினும், நாட்டில் நடக்கும் சகலவற்றையும் உளவுத்துறையினர் அவதானித்து வருகின்றனர் என்ற பரம இரகசியத்தின் அடிப்படையில் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் மாணவர் அமைப்பு ஆகியவற்றின் அலுவலகங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்ந்தும் உளவுத் துறையினர் வருகை தருவதும் அவ்வப்போது அவர்களது நிகழ்வுகள் தொடர்பாக கேட்டறிவதும் வழமையாக இருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் இவர்களது அங்கத்துவ நீக்கம் தொடர்பிலும் அதற்கான காரணம் தொடர்பிலும் அந்தந்த சந்தர்ப்பங்களில் பொறுப்பிலிருந்தவர்களிடமிருந்து அவர்கள் தகவல்களைப் பெற்றே வந்திருந்தனர். மற்றப்படி இது தொடர்பில் உளவுத் துறையிடமிருந்து மறைப்பதற்கு குறித்த இரு அமைப்புக்களிடமும் எதுவும் இருக்கவில்லை என்பதும், மேற்படி இரு அமைப்புக்களும் தொடர்ந்தும் எதுவித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடனேயே செயற்பட்டு வந்திருக்கின்றன என்பதும் உளவுத் துறையினரும் கூட அறிந்த உண்மையாகும்.
உங்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில், “அவரைத் தொந்தரவு செய்யும் முகமாக அவருக்கு எதிரான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்ட தரப்பினர் சில தவறான தகவல்களை வழங்கியிருப்பதற்கான உறுதியான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன” என பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் கூற வருவது என்ன?
இது மிகவும் தெளிவான விடயம். சமூகப் பணியொன்றில் ஈடுபடும் போது மாற்றுக் கருத்துக்களில் உள்ள பலர் இருப்பது இயல்பானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சகிப்புத்தன்மையோடு இருந்தாலும் அனைவரும் சகிப்புத்தன்மையோடு இருப்பதில்லை என்பதுவும் யதார்த்தபூர்வமானது. அவ்வாறான பரஸ்பர சகிப்புத்தன்மையற்ற பலர் இன்னும் பலரை அநியாயமாக எவ்வித ஆதாரங்களுமின்றி காட்டிக் கொடுக்கும் அவலங்களும் தாராளமாக நடைபெற்றிருப்பதை அனைவரும் நன்கறிவர். அவ்வாறான ஒரு செயற்பாடாக இது இருக்கலாம். அல்லது அவ்வப்போது ஆங்காங்கே மீடியாக்களில் தோன்றி பரஷூட்டில் வந்திறங்கியவர்கள் போல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக வழங்கிய பொய்யான தகவல்களாக இருக்கலாம். அல்லது பலரும் கூறுவது போன்று, அமைப்புக்குள் எடுக்கப்பட்டிருந்த மேற்படி தீர்மானங்களில் இருந்த அதிருப்தியின் விளைவாக, கைது செய்யப்பட்டிருப்பவர்களால் ஏதோ காரணங்களுக்காக வழங்கப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் காரணமாக இருக்கலாம், அல்லது ஜமாஅதே இஸ்லாமியை ஒரு சவாலாகப் பார்க்கின்ற அரசியல் பின்னணி கொண்ட யாருடையதாவது அழுத்தங்களாக இருக்கலாம்.
யார் அவர்கள் என்று தேடுவதோ அவர்களைப் பழிவாங்குவதோ எமது நோக்கமுமல்ல, அத்தகைய எண்ணமும் எமக்கில்லை. ஆயினும் கூட பிழையான தகவல்களும் அரசியல் சூழலும் அல்லது வெறுப்புகளும் இக்கைதின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கான உறுதியான சாத்தியப்பாடுகள் இருப்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. அந்தப் பின்னணியில்தான் குறித்த கடிதத்தில் அவ்விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஓர் உத்தியோகபூர்வ கடிதத்தில் இந்த அத்தனை விளக்கங்களும் விலாவாரியாக உள்ளடக்கப்பட முடியாது என்ற அடிப்படையிலும், விசாரணைகளில் மேற்படி விடயங்கள் யாவும் உரிய அதிகாரிகளுக்கே தெளிவாக தெரிய வந்திருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலுமே குறித்த விடயம் மிகவும் சுருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
சில சிங்கள ஊடகங்களில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2027இல் இலங்கையைக் கைப்பற்ற திட்டமிட்டார், ஆப்கானிஸ்தானில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார், 70 நாடுகளுடன் இவருக்கு தொடர்புகள் உள்ளன என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பற்றி…?
சட்டம் என்று வரும் போது தொழிற்படும் அடிப்படையான விதியொன்று பற்றி பலரும் அறியாதிருப்பதும், இலங்கையில் தொடர்ந்தும் அந்த விதி படுபயங்கரமாக மீறப்பட்டு வருவதும்தான் இந்தக் கேள்விக்கான காரணமாகும் என்று நினைக்கிறேன்.
‘அடிப்படையில் அனைவரும் நிரபராதிகள், ஆதாரங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளியென்று நிரூபிக்கப்படாத வரையில்’ என்பதே அந்த சட்ட விதியாகும். இது மதங்கள், சித்தாந்தங்கள் கடந்து உலகளாவிய அளவில் அனைவராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியாகும். இந்த விதியின் அடிப்படையில்தான் உலகின் சகல சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன.
ஆனால் இலங்கையின் அரசியல் கொந்தளிப்புகளால் சூழப்பட்ட சட்டமானது ஒருவனை கைது செய்து வைத்துக் கொண்டு அவன் மீதான குற்றத்தை சோடிக்கின்ற வேலைக்கு இடம் கொடுக்கக் கூடிய வகையிலும், குற்றம் சாட்டுபவர்களின் கைவசம் எவ்வித ஆதாரமும் இல்லாதிருக்கின்ற நிலையில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டவனிடம் ‘முடியுமானால் நீ நிரபராதி என்று நிரூபித்துக் கொள்!’ என்று நிர்ப்பந்திக்கின்ற வங்குரோத்து நிலையிலும் இருப்பதை மிகவும் கவலையுடனேயே நோக்க வேண்டியிருக்கின்றது. ஆங்கிலத்தில் அதனை burden of proof என்று சொல்வார்கள். அதாவது ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடி நிலை எப்போது குற்றம் சாட்டும் தரப்பினரின் மீதே இருக்கும். ஆனால் இங்கு எல்லாமே மாறித்தான் போயிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்ட நிலையில் இக்குற்றச்சாட்டுக்களின் போலித்தன்மையையும் அதற்குள் புதைந்திருக்கும் அரசியலையும் தோலுரிப்பது கட்டாயமானது.
1957ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வரும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் யாப்பும், அதில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் திருத்தங்களும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தலைவராக இருந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எந்தளவு தூரம் அடிப்படையற்றவை என்பதை விளங்கிக் கொள்ள போதுமான ஆதாரங்களாகும்.
வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ தமது அமைப்பின் அதே பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ இயங்கும் எந்தவொரு அமைப்புடனும் எவ்விதமான உடன்படிக்கைகளோ அல்லது தொடர்புகளோ அற்ற, இலங்கையில் உருவாக்கப்பட்டு இலங்கைக்காக இலங்கையில் இயங்கி வரும் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு சிவில் அமைப்பே இலங்கை ஜமாஅதே இஸ்லாமி என்பதை அதன் யாப்பை பார்க்கின்ற எவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படைகளுக்கு முரணாக ஜமாஅதே இஸ்லாமியோ அதன் அங்கத்தவர்களோ என்றும் நடந்து கொண்டதில்லை.
ஒரு பள்ளிவாசலின் நிர்வாக சபையைக் கைப்பற்றுவதைக் கூட நோக்காகக் கொண்டு செயற்படாத, அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளவா என்று கேட்டு வருகின்ற அங்கத்தவர்களுக்கு அதற்கு மாற்றமான ஆலோசனையை வழங்குகின்ற, ஊர் மக்களின் ஆதரவுடன் பள்ளிவாசல் நிர்வாக சபைக்குத் தெரிவு செய்யப்படுகின்ற ஜமாஅதே இஸ்லாமி அங்கத்தவர்களைக் கூட விஷேட பயிற்சிகள் கொண்டு வழிநடத்தாத, அவரவர் அவரவரது ஊர் நிலைக்கும் அறிவுத் தரத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பொருத்தமான தீர்மானங்களை அந்தந்த ஊர்களில் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதே பொருத்தமானது என்று அவ்வாறானவர்களுக்கு அறிவுறுத்தி வந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் 2027 இல் நாட்டைக் கைப்பற்றத் திட்டம் வைத்திருந்தார் என்பதெல்லாம் உலக மகா நகைச்சுவை.
எனது தந்தை முதன் முதலாக எப்போது தனது கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டார் என்ற அடிப்படைத் தகவலை அறிய முயற்சித்திருந்தால் கூட ‘அவர் ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் பங்கெடுத்தார்’ என்ற படுமுட்டாள்தனமான குற்றச்சாட்டை முன்வைக்கும் கேவலமான அறிவீனத்திலிருந்து அத்தகையவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அவர் முதன்முதலாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டது முதல் தற்போது வரையில் மொத்தம் அவரிடம் மூன்று கடவுச்சீட்டுக்கள் இருக்கின்றன. அவற்றின் பிரதிகள் யாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுமிருக்கின்றன. அவர் எந்தெந்த நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார் என்பதும் அங்கு எத்தனை நாட்கள் என்ன காரணத்துக்காக தங்கியிருந்தார் என்பதும் அவற்றின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியுமான தகவல்களாகும்.
அவரது வெளிநாட்டுப் பயணங்கள் யாவும் ஒன்றில் வேறு நாடுகளில் தொழிலுக்காக சென்று வசிக்கும் ஜமாஅதே இஸ்லாமி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்காக அவர்களது அனுசரணையில் சென்ற பயணங்களாகவோ அல்லது ஜமாஅதே இஸ்லாமிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்ட சர்வதேச மாநாடுகளுக்கு அமைப்பின் பிரதிநிதியாக ஏற்பாட்டாளர்களின் அனுசரணையில் சென்ற பயணங்களாகவோ அல்லது ஹஜ் மற்றும் உம்ராவுக்கு சென்ற பயணங்களாகவோதான் அமைந்திருக்கின்றன. இதற்குள் 70 நாடுகளுடன் தொடர்பு என்ற கதைகளெல்லாம் பெரும்பாலும் எதிர்கால நகைச்சுவை அமர்வுகளுக்கான தலைப்புகளேயன்றி வேறில்லை.
தந்தையை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன?
சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டுக்கள் பல சுமத்தப்பட்டிருப்பினும் கூட ஜமாஅதே இஸ்லாமியோ அல்லது குடும்பமோ இது வரையில் அவரை விடுதலை செய்வதற்கு எவ்வித சட்டபூர்வமற்ற நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாட்டின் சட்டத்துக்குட்பட்டு ஜனநாயக வழிமுறையில் என்னென்ன முயற்சிகளெல்லாம் மேற்கொள்ளப்பட முடியுமோ அந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனை அநீதிக்கெதிரான நீதிக்கான ஒரு போராட்டமாகவே முன்னெடுக்கிறோம். குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு அதிகமாக அந்தப் போராட்டத்தைத் தவிர வேறு ஒன்றை செய்வதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் ஒத்துழைத்த இன்னும் ஒத்துழைத்துக் கொண்டிருக்கின்ற அத்தனை பேருக்கும் அவருக்காக பிரார்த்திக்கின்ற அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹுத் தஆலா அவனது அருளை அதிகமதிகம் சொரிய வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் பலர் தீவிரவாதத்துடன் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிராத நிலையில் அநியாயமான முறையிலேயே கைது செய்யப்பட்டனர். உங்கள் தந்தையும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உங்களதும் ஜமாஅதே இஸ்லாமி அங்கத்தவர்களினதும் மனோநிலை எவ்வாறுள்ளது?
உண்மை. கைது செய்யப்பட்டவர்களில் ஏதோ ஒரு வகையில் தீவிரவாதத்துடனும் பயங்கரவாதத்துடனும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி நீதியான விசாரணைகளில் தெரிய வந்தால் அவர்கள் விடயத்தில் சட்டம் எடுக்கும் தீர்மானத்துக்கு முஸ்லிம் சமூகம் தனது மனப்பூர்வமான ஆதரவை வழங்கியே ஆக வேண்டும். முஸ்லிம் சமூகம் அவ்வாறு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே நேரம் நீங்கள் குறிப்பிட்டது போன்று கைதானவர்களில் பலர் எவ்வித குற்றமுமற்ற அப்பாவிகள் என்பதும் உள்ளக காட்டிக் கொடுப்புகள் மற்றும் பிழையான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அநீதியான கைதுகள் மேற்கொண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை சமூகத் தலைமைகள் மேற்கொள்வது கடமையாகும். அத்துடன் அவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் விடுதலைக்காக பிரார்த்திக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருப்பதோடு அவர்களின் விடுதலைக்காக முயற்சிக்க வேண்டிய பொறுப்பும் சமூகத்தின் சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகளுக்கு இருக்கின்றது.
காத்தான்குடி அலியார் மௌலவி, திஹாரியைச் சேர்ந்த ஷேய்க் ரஈஸுல் இஸ்லாம், பரகஹதெனிய அன்ஸார் மௌலவி, சகோதரர் டில்ஷான் முஹம்மத், வைத்தியர் ஷாஃபி, மற்றும் இன்னும் பல்வேறு தௌஹீத் அமைப்புக்களைச் சேர்ந்த பல சகோதரர்கள் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போது விடுதலையாகியிருந்தாலும் கூட இன்னும் பலர் அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். இந்த அநீதிக்கெதிராக குரலெழுப்ப வேண்டிய, சாத்வீகமாகப் போராட வேண்டிய தார்மீகக் கடமை முழு முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்றது. இல்லாத போது ஒற்றுமையின்மை என்ற எமது பலவீனத்தின் காரணமாக இந்த அநீதி எமது வீட்டுக் கதவுகளையும் தட்டும் அபாயம் வரலாம்.
தந்தையின் கைது விடயத்தைக் கையாளும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைப் பீடம் மிகவும் சீரியஸான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. அதன் அங்கத்தவர்கள் பலரும் அவரால் அறிவு ரீதியாக பிரயோசனமடைந்தவர்கள் என்ற வகையில் தமது உணர்வுகளை பொதுத் தளத்தில் வெளிப்படுத்தியும் இதற்கெதிராக குரல்கொடுத்தும் வருகின்றனர். மனதளவில் பலருக்கு இக்கைது அதிர்ச்சியானதாக இருப்பினும் கூட யதார்த்தத்தைப் புரிந்த நிலையிலேயே அனைவரும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருவதானது உண்மையில் பாராட்டத்தக்கது. இதனை தனது பணிகளுக்கான ஒரு தடைக்கல்லாக எடுத்துக் கொள்ளாமல் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு படிக்கல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஜமாஅதே இஸ்லாமி மிகவும் உறுதியோடிருக்கின்றது.
குடும்ப அங்கத்தவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் அருளால் இதனை ஒரு சோதனையாக எடுத்துக் கொண்டு, இதற்கு காரணமானவர்கள் யாரும் இருப்பின் அவர்கள் மீதோ, அல்லது இந்த அநீதியை இழைத்த இந்த அரச இயந்திரத்தின் மீதோ வெறுப்புக் கொள்ளாமல் இந்த நாட்டு மக்களது சுபீட்சத்துக்கும் அதனது வளர்ச்சிக்கும் தம்மாலான அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கி நீதியான ஒரு சூழலை உருவாக்குவதில் தம்மாலான அத்தனை பங்களிப்புகளையும் இன்னும் வீரியமாக வழங்க வேண்டும் என்ற ஒரு மனோநிலையிலேயே அனைவரும் இருக்கின்றனர். யாரையும் பழிவாங்குகின்ற எண்ணத்திலோ அல்லது ஆத்திரத்தையும் எரிச்சலையும் கொட்டித் தீர்க்கும் மனோநிலையிலோ ஒருவர் கூட இல்லை அல்ஹம்துலில்லாஹ்.
இந்தக் கைது விடயத்தில் நடைபெற்றிருக்கும் அநீதி என்ற அம்சத்தையும் அந்த அநீதியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் சோதனை என்ற விடயத்தையும் நாம் வெவ்வேறாகவே அணுகுகிறோம். அநீதிக்கெதிராகப் போராடுகிறோம், அதே நேரம் சோதனையை உளமாற ஏற்று அதனை தாங்கிக் கொள்கிறோம். அல்லாஹ்வின் அருளால் அதன் விளைவாக குடும்பத்தினர் அனைவரும் முகம் சுளிக்காமல் அவரவரது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமாக இருக்கின்றது. நானும் எனது மூத்த தம்பியும் மாத்திரமே இதனை சட்டரீதியாக எதிர்கொள்கின்ற பணிகளில் ஜமாஅதே இஸ்லாமியுடன் இணைந்து செயற்படுகிறோம். தந்தையை சந்திப்பதற்கான வாய்ப்பின் போது கூட எனது தாயாரோ அல்லது எனது ஏனைய சகோதர சகோதரிகளோ தாமும் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளைக் கூட முன்வைக்கவில்லை. வீடு அழுகைச் சத்தங்கள் இல்லாமல் சோபையிழந்து போகாமல் அல்லாஹ்வின் அருளால் எப்போதும் போல் சாதாரணமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற கவலையுடன் வீட்டுக்கு வரும் அன்பர்கள் யாவரும் ஆறுதல் பெற்றுச் செல்லும் இடமாகவே அவரது வீடு அமைந்திருக்கின்றது. எமது கவலைகள் யாவற்றையும் துஆக்களாகவும் எமது முயற்சிகளின் விளைவுகள் யாவற்றையும் தவக்குலாகவும் மாற்றி வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
vidivelli