அநாதை பிள்ளைகள் என்றால் கண்டவன் நிண்டவன் எல்லாம் கை நீட்டுவான். அப்படித்தான் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவம் இழந்து நிற்கும் புத்தளமும் ஓர் அநாதைதான். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள புத்தளத்தில்தான் மனிதவாழ்வுக்கும், இயற்கைக்கும் ஆபத்தான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே, சீமெந்து கம்பனி, சிறுகடல் ஊடாக கம்பி கொண்டுவருதல், நுரைச்சோலையில் அனல் மின்நிலைய திட்டம் அமுல்படுத்தப்பட்டதால் வாழ்வை போராட்டமாக கழித்துக்கொண்டிருக்கும் புத்தளம்வாசிகளின் நிலை, மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு வந்து முட்டியதுபோல, கழிவு முகாமைத்துவ திட்டத்தையும் அங்கேயே முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதனால் பேராபத்தொன்றை நோக்கி புத்தளம் மக்கள் நகரப்போகிறார்கள் என்கிற பீதி மேலெழுந்தது.
மஹிந்த அரசாங்க காலத்தின்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவராக இருந்த கோத்தாபயவினால் அருவாக்காலுவில் குப்பை கொட்டுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. வர்த்தக கைத்தொழில் அமைச்சின் காணியில் கழிவு முகாமைத்துவ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை, நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்தது. அமைச்சர் சம்பிக ரணவக்க திட்டத்தை கச்சிதமாக முன்னெடுத்தார்.
கொழும்பு கழிவு முகாமைத்திட்டத்திற்கு புத்தளத்தில் கடந்த சில வருடங்களாகவே எதிர்ப்பு பலமானதாக இருந்தது. இதன் ஒரு கட்டமாக நூறு நாட்களுக்கும் மேல் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டமொன்று புத்தளம் நகரில் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், தொடர் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் நடந்தவண்ணம் இருந்தன.
அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருவாக்காலு கழிவு முகாமைத்துவ திட்டத்தை தடைசெய்யுமாறு க்ளீன் புத்தளம் அமைப்பு மற்றும் பிரதேசவாசிகளால் புத்தளம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் கழிவு முகாமைத்திட்டம் எந்தவித நிகழ்வுகளுமின்றி இரகசியமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ரயில் மூலம் கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளத்திற்கு எடுத்துச் செல்லவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கனரக லொறிகள் மூலம் குப்பைகள் புத்தளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவ்வாறு குப்பைகளை எடுத்துச்சென்ற லொறிகள் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடத்தி மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட எத்தனித்தனர். கடந்த மாத நடுப்பகுதியில் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடிப் பகுதியில் மறைந்திருந்த சிலர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், புத்தளம் பொலிஸ் தலைமையகத்திற்கு சொந்தமான எல்.டி – 6907 எனும் இலக்கமுடைய பொலிஸ் ஜீப் வண்டியும் சேதமடைந்தன.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தவிர மேலும் நால்வர் தொடராகக் கைதானார்கள்.
இந்நிலையில், வணாத்தவில்லு பொலிஸ் பகுதிக்கு கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென்று புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.
இது இப்படியிருக்க க்ளீன் புத்தளம் அமைப்பு மற்றும் பிரதேசவாசிகளால், புத்தளம் அருவாக்காலு குப்பைத் திட்டத்திற்கு எதிராக புத்தளம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை கடந்த வாரம் இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் 2020.03.12 வரை அப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டது.
இதற்கமைய கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டுவந்து புத்தளத்தில் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென க்ளீன் புத்தளம் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு மீண்டும் 2020.03.12 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புத்தளம் நகரில் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தத் தீர்ப்பானது மக்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது வெற்றியென க்ளீன் புத்தளம் அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும், புத்தளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பகுதிக்கு டிப்பர் வாகனம் மூலம் தொடர்ந்தும் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றது.
புத்தளத்தைச் சேர்ந்த மூவின இளைஞர்களும் ஒன்று சேர்ந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
செவ்வாயன்று நள்ளிரவு 12.10 மணிக்கு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், “கொழும்பை அழகுபடுத்தும் நோக்கில், புத்தளத்தை அசிங்கப்படுத்தாதே”, “கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்”, ” சீனக் குப்பை எமக்கு வேண்டாம்”,”மலேசிய குப்பை எமக்கு வேண்டாம்”, “எமது சூழல் எமக்கு வேண்டும்” “எமது பிள்ளைகளின் எதிர்காலம் எமக்கு வேண்டும்” இதுபோன்ற பல கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, புத்தளம் தலைமையக, வணாத்தவில்லு, முந்தல், நுரைச்சோலை கருவலகஸ்வெவ பொலிஸாருடன் இணைந்து, இராணுவம், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிக் கொண்டு சென்ற 20 இற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள், நள்ளிரவு 12.25 மணி அளவில் புத்தளம் நகரை வந்தடைந்தன.
பாலாவி, தில்லையடி, புத்தளம் நகரம், புத்தளம் – மன்னார் வீதியில் இரு மருங்கிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், போக்குவரத்து பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புகளுடன் குறித்த டிப்பர் வாகனங்கள் வணாத்தவில்லு அருவக்காலு பகுதிக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், அத்துமீறி லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும் குப்பைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, இந்த அரசாங்கம் குப்பைகளை பலவந்தமாக புத்தளத்தில் கொட்டுவதற்கு எடுக்கும் முயற்சி வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
குப்பை லொறிகளுக்கு முப்படையின் பாதுகாப்பு வழங்கப்படுவது வெட்கப்பட வேண்டியதொன்றாகும். ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவொன்று இருக்கின்ற நிலையில் நீதித்துறையை அவமதித்து அத்துமீறி கழிவு முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
vidivelli