தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி
பொது மன்னிப்பில் ஞானசார தேரர்
நீதிமன்றினை அவமதித்த குற்றத்துக்காக 6 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி உயர் நீதிமன்றம் கவனத்திற் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் அம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா என நீதிமன்றம் தீர்மானிக்கும்.
இரு மனுக்களில் ஒன்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து என்பவரால் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
இம்மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, நீதியமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல, கலகொட அத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை ஆணையாளர் டி.எம்.ஜே.டபிள்யூ.தென்னகோன் ஆகியோர் பெயர் குறிக்கப்பட்டுள்ளனர்.
மற்றைய மனு பன்னிபிட்டியவைச் சேர்ந்த சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், கலகொட அத்தே ஞானசார தேரர், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி டி.ஜி.உடுவர, ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
vidivelli