மாகாண சபைத் தேர்தலை பழைய முறையின் கீழோ அல்லது புதிய முறையின் கீழோ நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஏகமனதாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இதுவரை ஜனாதிபதி வேட்பாளர்களாக பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமையவுள்ள ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி அபேட்சகராக அறிவிக்கப்பட்டதும் அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது தான் பொலித்தீன் மற்றும் கட்அவுட், பதாகைகள் அற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்தோடு அவர் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுகளின்போது அப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்அவுட், மற்றும் பெனர்களை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார் என்ற விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்க காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றிலே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்தக்கூட்டம் நிறைவுற்றதும் அக்கட்சியின் அங்கத்தவர்கள் கூட்டம் நடைபெற்ற காலி முகத்திடல் பிரதேசத்தை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள இரு அபேட்சகர்களும் சூழல் பாதிப்புறாத, மாசுபடாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளமை இதன்மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ள தேர்தல்கள் வன்செயல்களை கொண்டதாகவும் சூழலை மாசுப்படுத்துவதாகவுமே அமைந்திருந்தன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், வன்செயல்களைத் தவிர்ப்பதற்கும் மக்கள் ஆலோசனைகளை முன்வைத்தாலும் அரசியல்வாதிகளால் அவை கவனத்திற்கொள்ளப்படவில்லை. அரசியல்வாதிகள் தாம் மக்களை விட உயர்வானவர்கள் என்றே கருதி வந்தனர். தாங்கள் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது.
தற்போது மக்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாகத் தோன்றுகிறது. இதனாலேயே சூழல் மாசுபடாத தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப் படவுள்ளன. இந்த மாற்றம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தேர்தல் பிரசாரங்களில் பிரதான இடத்தினை பொலித்தீனே வகிக்கிறது. உக்காத மண்ணுடன் கலக்காத இந்த பொலித்தீன் எமது சூழலின் எதிரியாகும். என்றாலும் அரசியல் கட்சிகள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. நாட்டுக்கும், சூழலுக்கும் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. வெற்றி மாத்திரமே அவர்களது இலக்காக இருக்கிறது. இதனாலேயே தேர்தல் நடவடிக்கைகள் சூழலை அழிவுக்குள்ளாக்கும் செயற்பாடாக அமைகின்றன.
சூழல் அழிவுக்குட்படுத்தப்படுவதனாலே நாம் பல அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்றது. வெள்ள அனர்த்தம், மண்சரிவு அனர்த்தம் என்பன இதற்குச்சான்றாகும். மண்சரிவுகளினால் மக்கள் உயிரோடு புதையுண்டும் விடுகிறார்கள். இவை சூழல் அழிவுக்குட்படுத்தப்படுவதன் பிரதிபலன்களாகும்.
சூழல் அழிவுக்குள்ளாவதன் பின்னணியில் அரசியல் வாதிகளே இருக்கிறார்கள். இவர்கள் திரைமறைவில் இருந்து செயற்படுகிறார்கள். காடுகளை அழித்தல், மணல் அகழ்வது உட்பட சூழல் மாசுபடும் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு அரசியல் வாதிகளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
மக்களை சுற்றுசூழல் பாதுகாவலர்களாக மாற்றுவதற்கு முன்பு அரசியல் வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் சூழல் பாதுகாப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்களா? என்பதில் மக்கள் அவதானம் செலுத்தவேண்டும்.
vidivelli