சாய்ந்தமருது போன்று போராட வேண்டிய நிலைக்கு பொத்துவில் தள்ளப்படலாம்
பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத்
Q உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் பொத்துவில் பிரதேச சுற்றுலாத்துறை எவ்வாறான நிலையில் உள்ளது?
பொத்துவில் பிரதேசத்தில் அறுகம்பை உலகளாவிய ரீதியில் நீர்ச்சறுக்கல் போட்டிக்கு பெயர்பெற்ற இடமாகக் கருதப்படுகின்றது. வருடாந்தம் இப்பிரதேசத்தில் சர்வதேச ரீதியான நீர்ச்சறுக்கல் போட்டி நடைபெறுவது வழக்கம். ஜுலை மாதம் இப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தபோதிலும் இத் தாக்குதலின் காரணமாக அதை செய்துகொள்ள முடியாமல் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு மாற்றியிருக்கிறோம். அறுகம்பை பிரதேசத்தில் 200க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் காணப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக அறுகம்பை பிரதேசத்தில் எந்தவொரு வருமானமும் இல்லாத நிலைதான் காணப்பட்டது. ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, முச்சக்கர வண்டிகள், பிரதேச சபைக்கான வருமானம் என அனைத்திலும் 100 வீதமான தாக்கங்கள் இதனால் ஏற்பட்டிருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக எமது பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. தற்போது சுற்றுலாத் துறையோடு சார்ந்து தொழில் புரிகின்ற முயற்சியாளர்கள் பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள். நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா துறையினரின் வருகை மேலும் அதிகரிக்கும். அதனூடாக நாட்டுக்கு அந்நிய செலாவணி வருமானம் உயர்ச்சியடையும் என்று நம்புகிறோம். ஆனாலும் அடிப்படைப்பிரச்சினைகள் பல உள்ளன. அவைதான் தொழிற்றுறைகளைப் பாதிக்கின்றன.
Q பொத்துவில் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் – முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் எவ்வாறான உறவு காணப்படுகின்றது?
கடந்த ஆண்டு புதிய முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் எங்களது கட்சிக்கு 6 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் புரிந்துணர்வினுடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உதவித் தவிசாளரையும் எங்களது கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கு தவிசாளரையும் பெற்றிருக்கின்றோம். குறிப்பாக என்னைத் தெரிவு செய்த மக்களுள் தமிழ் மக்களும் கணிசமானளவு வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களினுடைய தேவைகளை பரிபூரணமாக பூர்த்தி செய்வதில் தவிசாளர் என்ற அடிப்படையில் நான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றேன். தமிழ் மக்களுக்கு அபிவிருத்திகளையும், சேவைகளையும் வழங்குவதில் சரியான சமமான வாய்ப்புகள் இந்த சபையினால் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை உறுதிபடக் கூறுகின்றேன். இதுவரை எமது பிரதேசத்தில் அவர்களுக்கும் எங்களுக்கும் கட்சி அரசியலில் எந்தவிதமான முரண்பாடுகளும் ஏற்படவில்லை.
Q அண்மைக்காலமாக நாட்டில் இன முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. பொத்துவில் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மூவின மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்தும் இப்பிரதேசத்தில் சகவாழ்வைப் பேணுவதற்கு உங்களுடைய சபையினால் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
எனக்குத் தெரிந்தளவில் கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்திலும், 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திலும், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவம் போன்ற பிரச்சினைகளின் போதும் பொத்துவிலிலுள்ள மூவின மக்களும் சௌஜன்யத்தோடும் ஒற்றுமையோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கு அரசியல் அதிகாரமாக ஒரு பிரதேச சபை மாத்திரம் இருந்திட்டபோதிலும் அண்மையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் போதும் பாதுகாப்பு தரப்பின் பல்வேறு மட்டங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட நல்லுறவின் அடிப்படையில் எங்களது பிரதேசத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அந்த வகையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
இங்குள்ள மூவின மக்களும் நாட்டின் நிலைமைகளை புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் வெளியிலிருந்து வருகின்ற சிலரினால் குழப்பங்கள் ஏற்படுத்த முயற்சிக்கப் பட்டாலும் கோமாரி இராணுவ முகாமின் படையினர் இந்தப் பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தமையினால் இப்பிரதேசத்தில் எதுவிதமான பிரச்சினைகளும் எழாமல் தவிர்க்கப்பட்டது. நாங்கள் தொடர்ந்தும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், மும்மதத் தலைவர்கள் என எல்லோரையும் சபையிலும் அழைத்து கலந்துரையாடல்களை செய்து எமது பிரதேசத்தில் எவ்விதமான முரண்பாடுகளும் வராமல் பாதுகாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
Q பொத்துவில் பிரதேசத்துக்கு கிடைக்கப்பெறும் வருமான வழிகளில் சுற்றுலாவும் மிக முக்கியமான வழியாகக் காணப்படுகின்றது. இத்துறையை மேம்படுத்துவதற்கு பொத்துவில் பிரதேச சபையின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
சுற்றுலாத்துறையில் அனுமதிக்கப்பட்ட வருமானங்களை பெறக் கூடியதாக இருந்தாலும் அண்மையில் நடந்த அசம்பாவிதங்களைப் போன்று சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது வருமானங்களில் தாக்கங்கள் ஏற்படுகின்றது. இருப்பினும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நவீனரக மின்விளக்குகளை பொருத்துவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அதற்குமேலதிகமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்து ஊரணி கொட்டுக்கள் வீதி அமைப்பு பணிகளை திறந்து வைத்திருக்கிறார். சுற்றுலாத் துறைக்கு பேர்போன ஊரணி கொட்டுக்கள் வீதி பிரதேச சபையின் முன்மொழிவுக்கமைய ஒரு வழிப் பாதையாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு சுற்றுலாத் துறையினரின் தேவைகளுக்கு அமைய அவர்களது கோரிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு அவர்களுக்கான சுற்றுலா தகவல் மையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஹோட்டல் உரிமையாளர்களின் கழிவு தொடர்பில் நாளாந்தம் அகற்றுவதில் பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவர்களோடு இணைந்து முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். ஏனென்றால் எங்களிடம் இருக்கின்ற ஆளணி பற்றாக்குறை காரணமாக பிரதேச சபையால் சுற்றுலாத் துறைக்கு முற்றுமுழுதான சேவைகளை வழங்குவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனை நிவர்த்திப்பதற்கு பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
Q சுற்றுலாத்துறையினால் பொத்துவில் மீனவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களது பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கான மாற்றீடுகள் என்னவென்று தெளிவுபடுத்த முடியுமா?
பொத்துவில் பிரதேசத்தில் இது கடல் வெளியில் வருகின்ற காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. மீனவர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவர்களுடைய படகுகளை நிறுத்துவதற்கு பாதுகாப்பான வோட்யார்ட் ஒன்றை நிறுவுவதற்கு சர்வோதயபுறம், குடாகள்ளி, அறுகம்பை பாலத்தை அண்டிய பிரதேசம் என்று மூன்று இடங்களை தெரிவு செய்திருக்கிறோம். சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இங்கு வருகை தந்த போது குடாக்கடல் பிரதேசத்தை வோட்யார்ட் அமைப்பதற்கான உகந்த இடமாக தெரிவு செய்திருக்கிறார்கள்.
சுற்றுலாத்துறை ஆறு மாதமும் மீன்பிடித் துறை ஆறு மாதமும் என்று இரண்டும் ஒரே காலப்பகுதியில் வருவதால் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இங்கு ஓய்வுக்காக வருகிறார்கள். இந்நிலையில் மீனவர்களின் செயற்பாடுகள் கரையோரம் அசுத்தப்படுத்தப்படுவது, அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இந்த வோட்யார்ட் அமைக்கப்படுமாக இருந்தால் சுமார் 200 படகுகளை அங்கு நிறுத்த முடியும். அத்தோடு மீனவர்களுக்கான இதர வசதிகளையும் அங்கு பெறக்கூடியதாக அமையும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் சுற்றுலாத்துறையும் மீன்பிடித் துறையும் ஒரே நேரத்தில் பிரச்சினையின்றி பயணிக்க முடியும்.
Q பொத்துவில் கோட்டத்தில் கல்வியில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். இந்நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை தெளிவுபடுத்த முடியுமா?
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் நாங்கள் இருப்பது தான் கல்வியில் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன். ஆசிரியர்கள், அதிபர்கள் ஒரு சிறிய தேவைக்காக 50 கிலோமீட்டர் வரை பயணித்து அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டி ஏற்படுகிறது. அதிபர் கூட்டங்களுக்காக 25 பேர் அங்கு போக வேண்டி ஏற்படுகிறது.
சுமார் 400 ஆசிரியர்கள் வெளி பிரதேசங்களிலிருந்து இங்கு வந்து கல்வி கற்றுக் கொடுக்கின்றார்கள். இந்நிலைமைகளும் எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை பின் தள்ளுகின்றது. அதனால் தான் பொத்துவில் பிரதேசத்துக்கு ஒரு வலயக்கல்வி அலுவலகத்தைப் பெற்று அதன் மூலமாக எமது பிரதேசத்தின் கல்வியை உயர்த்தலாம் என்று எண்ணியிருந்தோம்.
அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின் கீழ் அட்டாளைச்சேனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய மூன்று கோட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பொத்துவில் கோட்டம் முன்பு கல்வியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாகவும் நான் கூறிய பிரச்சினைகளின் காரணமாகவும் எமது கோட்டத்தின் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இப்பிரச்சினைகளை தீர்க்கின்ற போதும் எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி மேம்படும். அதனை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
Q பொத்துவில் பிரதேசத்தில் குடிநீர் உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகள் காணப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். இப்பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?
இலங்கையில் ஏனைய பாகங்களில் நீர் வழங்குவது போன்று பொத்துவிலுக்கு நீர் வழங்கப்படுவதில்லை. சுமார் 30 நிமிடங்களுக்கு மாத்திரம்தான் நீர் வழங்கப்படுகின்றது. இதனால் உல்லாசத்துறை, விவசாயம் போன்ற பல விடயங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொத்துவில் பிரதேசத்தை கல்வி வீழ்ச்சியிலிருந்து மேம்படுத்துவதற்கு வலயக் கல்வி அலுவலகம் நிறுவப்பட வேண்டும். அத்தோடு இங்குள்ள வைத்தியசாலை நோயாளிகளை அக்கரைப்பற்று, அம்பாறை போன்ற வைத்தியசாலைகளுக்கு பரிமாற்றும் பரிமாற்ற நிலையமாகவே செயற்படுகின்றது. அதைவிடுத்து இங்குள்ள வைத்தியசாலை மக்களின் தேவை கருதி வசதியுடன் கூடிய ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும். சுமார் 2300 ஏக்கர் காணிப் பிரச்சினைகள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரு அரசியல் அதிகாரம் தேவை. சுமார் 30,000 வாக்குகளைக் கொண்ட பொத்துவில் பிரதேச மக்களின் வாக்களிப்பின் விலை என்ன என்று நான் வினவுகின்றேன்.
இங்கு ஒரு மாகாண சபை அங்கத்தவர் அதிகாரம் கூட இல்லை. பிரதேச சபை அதிகாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளெல்லாம் தீர்க்க முடியாதுள்ளது. இப்பிரச்சினைகள் எல்லாம் வெளிக்கொணரப்படாமல் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
எனவே எமது பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்புரிமை அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கின்றோம். எமது அபிலாசைகள் நிறைவேற்றப்படாது போனால் சாய்ந்தமருது மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போல் நாங்களும் செயற்படுவதற்கு தள்ளப்படுவோம் என்பதை எமது கட்சிக்கும் ஏனைய அரசியல் மட்டங்களுக்கும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
நேர்காணல்: எம்.ஐ. சம்சுடீன், ஏ.மொஹமட் பாயிஸ்
vidivelli