அப்பாவி மக்களை அடிப்படைவாதத்தின்பால் தள்ளிவிடவே சட்டம் பயன்படுத்தப்படுகிறது
பொலிசாரை அறிவுறுத்த வலியுறுத்துகிறார் பிமல் ரத்நாயக்க
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
அப்பாவி மக்கள் அடிப்படைவாதத்தின்பால் தள்ளப்படும் வகையிலே சிவில் மற்றும் சர்வதேச உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டம் பொலிஸாரினால் மிகவும் பிழையான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பிரதமர் பொலிஸாருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு இடைக்கேள்வியொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன, மதவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்திலே சிவில் மற்றும் சர்வதேச உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அண்மைக்காலமாக பொலிஸாரினால் இந்த சட்டம் மிகவும் பயங்கரமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக, இந்த சட்டத்தின் கீழ் எழுத்தாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னர் மஹியங்கனை பிரதேசத்தில் பெண்ணொருவர் அணிந்திருந்த ஆடை தொடர்பில் கைது செய்யப்பட்டார். தற்போது திருகோணமலை பிரதேசத்தில் பெண்ணொருவர் அணிந்திருந்த சாரியில் ஏதோவொன்று இருந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அதனால் சிவில் மற்றும் சர்வதேச உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டத்தை இவ்வாறு அப்பாவி மக்களை அடிப்படைவாதத்துக்குள் தள்ளும்வகையில் பயன்படுத்தாமல், உண்மையாகவே இனவாத, மதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பயன்படுத்துமாறு பொலிஸாருக்கும் அதனுடன் தொடர்புபட்ட துறைகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தவேண்டும் என்றார்.
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli