சஹ்ரானின் தாக்குதல்கள் தொடர்பில் மூன்று வருடங்களில் 97 எச்சரிக்கைகள்
தேசிய புலனாய்வு பிரிவு விடுத்ததாக நீதியரசர்கள் முன் சுட்டிக்காட்டு
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2017, 2018 மற்றும் 2019 ஆகிய வருடத்திற்குள் தேசிய புலனாய்வு துறையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தன முன்வைத்துள்ள சத்தியக் கடதாசி மற்றும் ஏனைய ஆவணங்களின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தடுக்கத் தவறியமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, குறித்த தாக்குதல்களை தடுப்பதற்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் குற்றச்சாட்ட முடியாதெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது விளக்கமளித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனகே அலுவிஹார, சிசிரத ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையிலேயே 12 மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலினால் தனது இரு பிள்ளைகளை இழந்த வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த நந்தன சிறிமான, சுற்றுலா தொழிற்றுறையைச் சார்ந்த ஜனாத் வித்தானகே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஹென்றி மேரியன் அசோக் ஸ்டீவன், சரத் இந்தமல்கொட மற்றும் ஹெல் எவன்ஸ்டன் பெர்னாண்டோ ஜயவர்தன ஆகிய மதகுருக்கள், நாகானந்த கொடித்துவக்கு, ஜூட் பெரேரா, நிமல் குமாரசிறி உள்ளிட்ட பிரஜைகள், அஹ்குலுகல்ல ஜீனாநந்த தேரர் மற்றும் சட்டதரணி முதித்த ஏக்கநாயக்க உள்ளிட்டவர்களே இந்த 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
புலனாய்வுத் தகல்கள் கிடைக்கப்பெற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனது. இதனூடாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த மனுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பிரதி பொலிஸ்மா அதிபர் ஸ்ரீலால் திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டதரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் சட்டதரணி விரான் கொராயா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
vidivelli