கொழும்பு, காலி முகத்திடலுக்கு நிகாப் அணிந்து சென்ற நான்கு பெண்கள் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு, உடற்பரிசோதனைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரது குடும்பத்தினரான இப் பெண்கள் காலி முகத்திடலுக்கு நிகாப் அணிந்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் அப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரர்கள் இப் பெண்களை அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்டோர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அவரது தலையீட்டினால் பெண் பொலிஸ் அதிகாரிகளால் உடற் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் பொலிஸ் வாக்குமூலமும் பெறப்பட்டது.
இதேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் முகத்திரை அணிவதற்கான தடை நீக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் சந்தேகம் நீடிப்பதால் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் கூட முகத்திரை அணிவது கட்டாயமில்லாத நிலையில் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஏன் அந்த அரேபிய கலாசாரத்தை இங்கு பின்பற்ற வேண்டும்? சிலர் வேண்டுமென்றே இதனை அணிந்து கொண்டு வெ ளியில் நடமாடுகிறார்கள். அவ்வாறானவர்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இது நிகாபை நிரந்தரமாக தடை செய்யும் நிலைக்கு இட்டுச் செல்லலாம். எனவேதான் சட்டம் வருவதற்கு முன்னராகவே, முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து நிகாப் அணிவதை தவிர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். ஏறாவூரிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னர் நிகாப் அணிந்தோரை பொலிசார் கைது செய்து சிறையிலடைத்தனர். எனினும் தற்போது நிகாப் அணிவோரை அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குமூலம் பெற்றுவிட்டு விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிசார், ஒருவர் மீது சந்தேகப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. எனினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது நாட்டின் தற்போதைய நிலையில் தேவையற்ற பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும் என்றும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசர காலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். சிலர் மீண்டும் நிகாப் அணிய ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் நாம் பதில் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரியுள்ளோம் என முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவர் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை நிகாப் அணிவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வலியுறுத்த வேண்டும் என முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் இதனை அணியத் தொடங்கினால் அது சில குழுக்களுக்கு தாக்குதல்களை நடத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் இந்த விவகாரத்தில் உலமாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறோம். முகத்திரை அணிய முடியுமா இல்லையா என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
vidivelli