தற்கொலை தாக்குதலை தலைமைதாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்டபின் கடந்த நான்கு மாதங்களாக நாட்டில் பிரபலமடைந்திருந்தவர் சஹ்ரான். அந்தப் பயங்கரவாதியை பின்தள்ளாவிடினும் பௌத்த பேரினவாதிகளாலும் ஊடகங்களினாலும் பிரபலமாக்கப்பட்டவர் டாக்டர் ஷாபி. இவர்களின் பெயர்களை கடந்த சிலமாதங்களாக பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தவர்கள் ஆகஸ்ட் பதினோராம் திகதிக்குப் பின்னர் மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை அடுத்து கோத்தா என்ற நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தனர். அது கடந்து ஒரு வாரத்திற்குள் காலிமுகத்திடலில் பெரும் சனத்திரளை சேர்த்து தாமும் பலமான மூன்றாம் சக்தி என அறிமுப்படுத்திக்கொண்டு வெளிக்கிளம்பிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரவின் நாமம் மேலெழத் தொடங்கியது. இவர்களுக்கெல்லாம் முன்னதாகவே சஜித் தனது பெயரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். என்றாலும் ரணிலின் அறிவிப்பு வெளிவராத நிலையில் அது உத்தியோகப்பற்றற்றதாகவே இன்றுவரை கருதப்பட்டு வருகின்றது.
தெற்காசியாவில் பழுத்த அரசியல் தலைவனாக பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பை எதிர்பார்த்து முழு நாடும், ஏன் சர்வதேசமும் காத்து நிற்கிறது.
ரணில் அரசியலில் நாசூக்காக காய் நகர்த்தக்கூடியவர், வெற்றி கிட்டுமோ இல்லையோ தனது வியூகத்தால் அரசியல் களத்தை சூடேற்றுவதில் அவர் வல்லவர். இன்றும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
பொதுஜன பெரமுனவும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கிய தேசிய மக்கள் சக்தியும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இம்முறை மும்முனை போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது.
ஏன் இந்த இழுத்தடிப்பு என்ற கேள்விக்கான பதில் ரணிலாகத்தான் இருக்கும்.
28 தேர்தல்களில் தோல்விகளை சந்தித்த பிறகு கட்சி தலைமைத்துவத்தை பறித்தெடுக்க திரைமறைவில் திட்டங்கள் வகுக்கப்பட்டபோதும் ‘சூழ்ச்சி’களையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து தனது கட்சித் தலைமை பதவியை பாதுகாத்து வந்தவர் தொடர்ந்தும் அதனை தன் வசம் வைத்திருக்க ஆசைப்படுவதே பிரதான காரணமாகும்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் மௌனம் காப்பதும், ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் இழுத்தடிப்பு செய்வதும் பலரை கிலிகொள்ள வைத்துள்ளது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை களமிறங்குவதற்கு ரணில் பச்சைக்கொடி காட்டினால்கூட அது தந்திரோபாய பின்வாங்கலாக அமையும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன், யாப்பு தயாரிக்கும் பணிகளுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன, கபீர் ஹாஷிம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். குறித்த, கூட்டணியின் யாப்பு பணிகள் நிறைவுபெற்றவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை அறிவிக்க முடியுமெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இன்று 30 ஆம் திகதி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர்களான ராஜித, அர்ஜுன உள்ளிட்டோர் உள்ளடங்கும் ஜனநாயக தேசிய இயக்கம், மனோ, திகா, ராதா உள்ளிட்டோரின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் சம்பிகவின் ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பிரதான கட்சிகள் அங்கம் வகிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இதர சிறுகட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்துகொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கப்பால் இறுதித் தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த கூட்டணியுடன் சங்கமிக்கலாம்.
கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காதிருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்குத் திண்டாட்டம் நிலவுகின்றது. இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் உடன்பட்டாலும் அறிவிக்கப்படும் வேட்பாளர் வெற்றி பெறக்கூடியவராகவும் தமக்கு சாதகமானவராகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றன.
மதில்மேல் பூனையாக மு.கா.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மக்கள் எதிர்பார்க்கும் சஜித் பிரேமதாஸ வரவேண்டும் என்பதை ஆரம்பத்தில் பிரேரித்தவர் மு.கா. தலைவர் ஹக்கீம் என்று கூறப்படுகின்றது. எனினும், ஐ.தே.க. தமது வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டுமென மு.கா. எதிர்பார்க்கிறது. வேட்பாளர் அறிமுகத்தின் பின்னரே தமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியுமென ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அவசரப்படாத அ.இ.ம.கா.
ஜனாதிபதி தேர்தலில் தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம் என்பதை அறிவிப்பதில் அவசரப்படப்போவதில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். இருந்தாலும் அ.இ.ம.கா. தரப்பினர் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பசில் ராஜபக் ஷவை திரைமறைவில் சந்தித்ததாகக் கதைகள் அடிபடுகின்றன. எனினும் இது உறுதிசெய்யப்படவில்லை.
எச்சரிக்கும் ஹெல உறுமய
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோமென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார்.
காத்திருக்கும் முற்போக்கு கூட்டணி
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே – அவர் தொடர்பில் ஆராய்ந்து – பேச்சு நடத்தி தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி காத்திருக்கின்றது.
கூட்டணியின் இணைத்தலைமைகளான திகா, மனோ, இராதா மற்றும் எம்.பி.க்களான திலகர், வேலுகுமார் உள்ளிட்டோர் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
ஐ.தே.க.வுக்குள் அழுத்தம்
ஐ.தே.க.வின் செயற்குழு, பாராளுமன்றக்குழு கூட்டங்களை ஒரே நேரத்தில் நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுமாறும் சஜித் ஆதரவு எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான எழுத்து மூலமான கோரிக்கை கடந்த வாரம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
ஐ.தே.கவின் 55 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்கூடிய மேற்படி கோரிக்கை கடிதத்தை கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீமும், சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டாரவும் இணைந்து அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்தனர்.
இதுதவிர, ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குமாறுகோரி சஜித் அணி உறுப்பினர்களால் மாவட்டந்தோறும் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் ஆரம்பகட்டமாக பாரிய கூட்டம் பதுளையில் அமைச்சர் ஹரீன் நடத்தியிருந்தார். பின்னர் மாத்தறையில் மங்கள முன்னெடுத்திருந்தார். இதனை நாடுமுழுவதும் முன்னெடுத்துச் செல்ல சஜித் அணியினர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
ஒழுக்காற்று நடவடிக்கைகள்
கட்சித் தலைமையையும், கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார்.
இதன் ஆரம்பகட்ட செயன்முறையாக கட்சி உறுப்பினர்களிடம் சுய விளக்கம் கோரப்படவுள்ளது என்றும், அதன்போது கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்டிருந்தால் – கருத்துகளை முன்வைத்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சியின் அனுமதி இல்லாமல் பேரணிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சி தலைமை தீர்மானித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
அஜித் பெரேரா, சுஜீவவுக்கு நடவடிக்கை
சஜித் ஆதரவு அணி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கட்சித் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்டதாலேயே இருவரிடமும் விளக்கம் கோருவதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கடிதங்கள் அவ்விருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் கட்சி யாப்பின் 6 சரத்துகளை அப்பட்டமாக மீறும் வகையில் இருவரும் செயற்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சஜித் மீது பாய்தல்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே சஜித் பிரேமதாச பிரசாரங்களை செய்வது கட்சியின் தலைமைத்துவ கட்டளைகளை மீறிய செயல். ஆகவே அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் கட்சி பிளவுபட அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சில தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றமை கட்சியின் விதிமுறைகளுக்கு அப்பாலான செயலாகவே கருதப்படுகின்றது. ஆகவே, அவரை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அகில சுட்டிக்காட்டியுள்ளார்.
சாடும் பொன்சேகா
“சஜித் பிரேமதாச கட்சியின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை. எனவே, எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது? கட்சி தலைவரின் கட்டளையையும், யாப்பையும் மீறும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக தராதரம் பாராது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கட்சியாகக் கூடி பேசித் தீர்மானம் எடுக்காமல் குழுக்களாகப் பிரிந்து கிளர்ச்சி செய்பவர்கள் பதவிகளை துறக்கவேண்டும். அதைவிடவும் கட்சியைவிட்டு வெளியேற்றுவதே சிறப்பாக இருக்கும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கிரிபத்கொடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கருவின் அமைதி
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் அடிபட்டு வருகின்றது. தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அதற்கு முகம்கொடுக்கத் தயாரென ஏற்கெனவே கரு அறிவித்திருந்தார்.
ரணிலுக்கும் கருவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் விருப்பம் இருப்பதாகவே கூறப்படுகின்றது. எனினும், கரு எந்தவிதத்திலும் ஆர்ப்பாடமில்லாமல் தொடர்ந்து அமைதியாக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், கரு சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக செய்தியொன்று பரவியிருந்தது. எனினும், குறித்த விடயம் வதந்தியென சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.
‘இராப்போசன விருந்து’
ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்ற சர்ச்சையால் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்று அரசியல் சமரில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சிறிகொத்த சொற்போர் களமாக மாறிவிட்டது என்றே கூறவேண்டும்.
மறுபுறத்தில் காத்திருந்தே களைத்துப்போய், பொறுமையிழந்துவரும் பங்காளிக்கட்சிகள், எந்நேரத்தில் வேண்டுமானாலும் பொங்கியெழுந்து மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் மத்தியில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்துநின்று இராப்போசன விருந்து அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
சஜித் ஆதரவு அணி அமைச்சரான சுஜீவ சேனசிங்கவே இந்த ‘டின்னர்’ அரசியலுக்கு துவக்கப் புள்ளிவைத்தார். ‘டின்னர் பார்ட்டி’ என்ற போர்வையில் சுஜீவவின் இல்லத்தில் முகாமிட்ட சஜித் ஆதரவு உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்தனர்.
இதையடுத்து அவசர – அவசரமாக ரணிலின் சகாவான சரத் பொன்சேகா வும் தனது இல்லத்தில் இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்தார்.
இதில் ரணிலுக்கு விசுவாசமான உறுப்பினர்கள் பங்கேற்று, கூட்டணி குறித்தும், ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.
அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அலரிமாளிகையில் இராப்போசன விருந்து வழங்கினார். இதில் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர்.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இராப்போசன விருந்து வைப்பதற்கு தயாராகிவருகிறார் என தகவல் கசிந்திருக்கிறது. எது எப்படியோ அரசியல் அவதானிகளுக்கு ரணிலின் இழுத்தடிப்பும் பெரும் விருந்துதான்.
ஜனாதிபதித் தேர்தலுக்குரிய காலம் எழுமாறாக குறிப்பிடப்பட்டாலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவித்த பின்னர், அல்லது அதே தினத்திலோ அண்மித்த திகதியொன்றில்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பாரென எதிர்பார்க்கலாம்.
எஸ்.என்.எம்.ஸுஹைல்
vidivelli