மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவலபிட்டியவில் 29.05.1960 இல் பிறந்தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவலப்பிட்டி சென். மேரிஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்விக்காக 1976 ஆம் ஆண்டு பேருவளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாகவும் இணைந்து கொண்டார். 1984ஆம் ஆண்டு கலைமானிப் பட்டப்படிப்பையும் (பி.ஏ) பூர்த்தி செய்து கொண்டதனையடுத்து திருமண பந்தத்தில் இணைந்தார். 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகளின் தந்தையாரான இவர், தற்போது ஹிங்குலோயா, மாவனல்லை பகுதியில் வசித்து வருகிறார்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மென்மையானவர். இங்கிதமானவர். ஆரவாரமின்றி பணி செய்பவர். உள்ளத்திலும் உலகத்திலும் நன்மைகளை வளரச் செய்து தீமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருபவர். அமைதியும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலட்சியத்தை இலக்காகக் கொண்டவர். அதற்கேற்ப பணியாற்றி வருபவர். வன்முறைக்கு எதிரானவர். நன்முறையே எங்கள் வழி என உரத்துச் சொல்பவர்.
“அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர உறவு, மனித நேயம் முதலான உயரிய விழுமியங்களை மேம்படுத்தல், நாட்டின் முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றில் பங்களிப்பு வழங்குதல்…” என்ற இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் யாப்புக்குள் நின்று தனது உரைகளையும் எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் அமைத்து வருபவர்.
பொதுவாக இலங்கைப் பிரஜைகளுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் பயனளிக்கக்கூடிய சமூக நலத் திட்டங்கள், நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்குமான செயற்திட்டங்களை வகுப்பதில் முன்னின்று உழைத்து வருபவர்.
சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க உதவும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் கூடுதல் கரிசனை கொண்டவர்.
மனித நலன்கள், மனித உரிமைகள் முதலானவற்றை உறுதிப்படுத்துவதில் தன்னாலான பங்களிப்பை நல்கி வருபவர்.
மனித நலன் காக்க எல்லா வழிகளிலும் உழைக்க வேண்டும், மனித குலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், எமது நாட்டில் வாழும் அனைவரும் அடிப்படை வாழ்க்கைத் தரத்தைப் பெறுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேசி வருபவர்.
பன்மைத்துவத்தை அங்கீகரித்தல், இன, மத, சாதி, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் ‘நாம் இலங்கையர்’ என்ற தேசிய அடையாளத்துடன் தேசத்தை நேசித்தல், பாதுகாத்தல் அதன் உண்மையான அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்தல், இவற்றினூடாக சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் அவரது கனவு. அதற்காக தனது பேனா முனையை ஆயுதமாகப் பயன்படுத்தி வருபவர்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல அவற்றை வளப்படுத்தி, விருத்தி செய்து அடுத்த பரம்பரைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக தேசிய மரநடுகை வேலைத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி வருபவர்.
நீதியை நிலைநாட்டுகின்ற, மக்கள் நலனை முன்னிறுத்தி வெளிப்படைத் தன்மையோடு செயற்படுகின்ற ஒரு சிறந்த ஆட்சியை இந்த நாடு கொண்டிருக்க முன்னெடுக்கப்படும் அரசியல் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும் என அழுத்திச் சொல்பவர்.
நாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகின்ற… சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கின்ற… உண்மையின் பக்கம் மட்டுமே மக்களை வழிநடத்துகின்ற விழுமியமிக்க ஊடக கலாசாரம் (Value based media Culture)ஒன்றைக் கட்டியெழுப்புவதன் தேவையை வலியுறுத்தி வருபவர்.
இஸ்லாத்தைக் கற்பதற்கு ஊக்கமளித்தல்… இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல்களை முன்வைத்தல்… இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முஸ்லிம்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்… இஸ்லாமிய வழியில் வாழ விரும்பும் தனி மனிதர்களையும் அத்தகையவர்களைக் கொண்ட இஸ்லாமியக் குடும்பங்களையும் உருவாக்குதல் முதலான உயர்ந்த இலட்சியங்களோடு வாழ்ந்து வருபவர்.
நடுநிலைச் சிந்தனையுடன் வாழ்ந்து வரும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், நடுநிலைச் சிந்தனையின்பால் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுபவர்.
உயர்ந்த நோக்கத்திற்காக உழைக்கும் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதுடன் மனிதம் மேலோங்க இணையும் அனைவருடனும் கைகோர்த்து நல்லதொரு தேசம் காண வேண்டும் எனும் நோக்கில் 1994 முதல் 2018 வரை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கு தலைமைத்துவம் வழங்கி வழிநடத்தி வந்தவர்.
இவை எல்லாவற்றுக்கும் அவரது உரைகளும் சொற்பொழிவுகளும் விரிவுரைகளும் கட்டுரைகளும் ஆக்கங்களும் தகுந்த சான்றாதாரங்கள்.
அல்ஹஸனாத் மாத இதழ், எங்கள் தேசம் பத்திரிகையிலும் விடிவெள்ளி, நவமணி ஆகிய தேசிய நாளிதழ்களிலும் பல்வேறு தலைப்புகளில் 250 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில:
·பல்லின சமூகத்தின் மத்தியில் பண்பாட்டு எழுச்சியின் தேவை ·முஸ்லிமின் தேச அடையாளம் ·நல்லவர்களே! உங்களுக்குதான் இந்தச் செய்தி! ·பயங்கரவாதம் ஒழியுமா? ·சமூக ஒருமைப்பாட்டின் மையப்புள்ளி·தன்பாட்டிலிருந்து சமூக வாழ்வில் பங்கெடுக்கும் பண்பாடு நோக்கி, சகோதர சிங்கள மக்களுடன் ஒரு சில நிமிடங்கள், பயங்கரவாதம் தொடர்பில் பண்பட்டவர்களின் பார்வை, நல்லாட்சி மலரட்டும்!, சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்கள், இலங்கையர்கள் இல்லாத இலங்கை (தேச அடையாளத்தை இழந்து நிற்கும் இலங்கையர்கள்), நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள், மனிதர்களை மதிப்பதில் நாமும் அவர்களும், வட கிழக்கில் இனமுறுகல், காரணம்?, எமது மண்ணின் உடன் பிறப்பா? முரண்பாடு,அமைதியின்மைக்கு ஓர் அதிசயமான காரணம், தீர்க்கப்பட வேண்டியது மக்களின் பிரச்சினைகளா? அரசியல் தலைவர்களின் பிரச்சினைகளா?, அறிவு இருக்கிறது ஒழுக்கமில்லையா? அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா? ·விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்,யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்…, பிறந்து வாழ்தலும் அறிந்து வாழ்தலும், திரை பெண்களுக்கா? ஆண்களுக்கா?, முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் கரை சேருமா?, பாதை தெளிவானது, பயணிக்க யார் தயார்? (1997), ஆழிப் பேரலையின் அடியினிலே (2005), அழைப்பின் நிலம் (2012), பெண் நீதமும் நிதர்சனமும் (2014), தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள் (2014), அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம் (2016), அழைப்பின் மொழி (2016), ஸூரதுல் கஃப் விளக்கவுரை (2016), முஸ்லிம் கான்தா எந்தும (2019) முதலான நூல்களை எழுதி மக்கள் மனம் வென்றவர்.
vidivelli