இன, சமயங்களுக்கு இடையிலான பதற்ற நிலைமைகளை உதாசீனம் செய்ய முடியாது
ஐ. நா. விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட்
இலங்கையில் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் மதிக்கப்படும் நிலையைப் பலப்படுத்தும் பொருட்டு, அந்நாட்டில் இனங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடையிலும் நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருக்கும் பதற்ற நிலைமைகளைத் தணிப்பதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் மேற்கொண்ட 12 நாள் விஜயமொன்றின் முடிவின்போது சமர்ப்பித்திருக்கும் ஓர் அறிக்கையில் சஹீட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “இலங்கையில் இவ்வாண்டில் இடம்பெற்ற நாசகரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் நிகழ்ந்த கும்பல் வன்முறை என்பவற்றையடுத்து, இலங்கையில் இனத்துவ, சமய சமூகங்களுக்கிடையில் மிகவும் பாராதூரமான ஒரு நம்பிக்கைக் குலைவு தோன்றியுள்ளது. இந்தப் பதற்ற நிலைமைகளை உதாசீனம் செய்யமுடியாது.”
“குண்டுத் தாக்குதல்களையடுத்து அரசாங்கம் உடனடியாக நிலைமைகளைப் பெருமளவுக்கு அல்லது ஓரளவுக்கு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தது. அதேவேளையில், பல்வேறு சமயங்களைப் பின்பற்றி வரும் சமூகங்கள் தமது பாதுகாப்பு தொடர்பாக பெருமளவுக்கு கவலை கொண்டவர்களாக இருந்து வருகின்றார்கள். ஒருசில சமயத் தீவிரவாதிகள் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை என்பவற்றைத் தூண்டிவருவதே இதற்கான காரணமாகும்.
“முஸ்லிம் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பைத் தூண்டும் பிரச்சாரங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த வெறுப்பு பிரசாரங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத ஊடகங்களுக்கு ஊடாக பரப்பப்பட்டு வருவதுடன், அவற்றின் மூலம் அரசியல் தாயத்திற்காக இனங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடையிலும் முறுகல் நிலைமைகள் தூண்டப்பட்டு வருகின்றன.
“வெறுப்பு மற்றும் வன்முறை என்பவற்றைத் தூண்டுவதற்கான செயல்களைத் தடுக்கும் விடயத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு உசிதமான ஒரு சூழல் தோன்றுவதுடன், சமாதானத்தைக் கட்டியெழுப்பும் விடயத்திலும் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் தோன்றியிருக்கும் இந்த முறுகல் நிலைமைகளுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் வெறுமனே தனித்த சம்பவங்களாக இருந்து வருகின்றதெனக் கருதப்படக்கூடாது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள், அதனையடுத்து நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரேயே இலங்கையில் இனங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடையிலும் பதற்ற நிலை மைகளும், முறுகல் நிலைமைகளும் நிலவி வந்துள்ளன.”
இலங்கை நீண்ட காலமாக நிலவி வந்திருக்கும் சமய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான பாரம்பரியங்களையும், அதேபோல சகிப்புத்தன்மை மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானம் என்பவற்றையும் கொண்ட ஒரு நாடாக இருந்து வந்துள்ளது. சமய மற்றும் அரசியல் வன்முறை, பொறுப்புக்கூறும் நிலை இல்லாதிருத்தல், நிறுவனங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பெரும்பான்மை சமூகம் அனுபவித்து வருவதாகக் கருதப்படும் சிறப்புரிமைக்கு எதிரான மனக்கசப்பு என்பன இந்த சகவாழ்வுக்கும், சமாதானத்துக்கும் இப்பொழுது அச்சுறுத்தலை எடுத்து வந்துள்ளன.
“அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், குற்றமிழைக் கும் நபர்களை அவர்கள் எந்த இனங்களை, எந்த சமயங்களை சார்ந்தவர்களாக இருந்து வந்தாலும் சரி, தமது செயல்களுக்குப் பொறுப்புக்கூற வைப்பதற்கும் இலங்கை தீவிரமான வழிமுறைகளை முன்னெடுப்பதற்கான தருணம் இப்பொழுது வந்துள்ளது”என ஐ.நா. நிபுணர் குறிப்பிட்டார். “வன்முறை, இடப்பெயர்ச்சி மற்றும் பெண் அடக்குமுறை என்பவற்றையும் உள்ளடக்கிய இனத்துவ ரீதியான, சமய ரீதியான காழ்ப்புணர்ச்சிகள் தொடர்பான பெண்களின் அனுபவங்களும் வினைத்திறன்மிக்க விதத்தில் கவனத்தில் எடுக்கப்படுதல்வேண்டும்”.
“நம்பிக்கை மற்றும் சமாதானம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கும், அதேபோல நல்லிணக்கத்தை எடுத்து வருவதற்குமென சமூகங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான ஓர் உரையாடலுக்கான தேவை இருந்து வருகின்றது.
மிதவாதக் குரல்களுக்கான வெளிகள் வழங்கப்படுதல் வேண்டும் மக்கள் தமது கரிசனைகளை முன்வைப்பதற்கும், மனக்குறைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் அந்த வெளிகள் திறந்து விடப்படுதல் வேண்டும்” என ஐ .நா. நிபுணர் குறிப்பிட்டார்”.
“நல்லிணக்கம் மற்றும் சமாதான சகவாழ்வை மேம்படுத்துதல் ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு அரச நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகிய தரப்புக்களினால் உற்சாகமூட்டக்கூடிய பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதனை நான் பார்த்துள்ளேன்.
“எவ்வாறிருப்பினும், சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் என்பது சமய சகிப்புத்தன்மையை மட்டும் குறிக்கவில்லை; குறிப்பிட்ட நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான அல்லது நம்பிக்கையைக் கொண்டிராதிருப்பதற்கான, சொந்தத் தெரிவின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபரும் ஏற்றத்தாழ்வற்ற விதத்தில் நடத்தப்படுவதற்கான உரிமை தொடர்பான ஒரு விடயமாக அது இருந்துவருகின்றது.
அந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை அவர் அந்தரங்கமாக அல்லது பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடிய நிலையும் இருந்து வருதல் வேண்டும்”.
சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துதல், மூலகாரணங்களைக் கவனத்தில் எடுத்தல், அனைவருக்குமான கல்வியை விருத்தி செய்தல் மற்றும் சமய பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் என்பவற்றையும் உள்ளடக்கிய பல்வேறு வழிமுறைகளின் மூலம் சமய தீவிரவாதத்திற்கு எதிராக ஈடுகொடுக்கும் ஆற்றலைக் கட்டியெழுப்ப முடியுமென ஐ.நா. நிபுணர் கூறினார்.
தேர்தல்களுக்கு முன்னருள்ள காலப் பிரிவின்போது, மக்கள் அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு இயலுமையுடன் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனவும், தேர்தல் ஆதாயத்திற்காக இனத்துவ– சமய பதற்ற நிலைமைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் அரசாங்கத்திடமும், ஏனையவர்களிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்” என சஹீட் கூறினார்.
தனது விஜயத்தின்போது அவர் அரச அதிகாரிகளையும், உள்ளூர்மட்ட அதிகாரத் தரப்புக்களையும் சந்தித் தார். அவர் நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களுக்கு விஜயம் செய்ததுடன் இனக்குழுக்கள், சமய அல்லது நம்பிக்கை சமூகங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. முகவரகங்கள் ஆகிய தரப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தினார். தனது முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கையை விசேட அறிக்கையாளர் 2020 மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
vidivelli