வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வில் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவனாலும், தங்களின் பெற்றோர், சகோதரர்களின் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அவர்களின் கணவரால், அல்லது முன்னாள் கணவரால் அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியதாகும். அதாவது கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள், ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினரால், பெற்றோரால், கணவரால் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாசாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதி, மதம் மாறிச் செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பின் இயக்குநர் யூரி பெடோடோவ் கூறுகையில், “ ஆண்கள் கொலை செய்யப்பட்டாலும், பாலின சமத்துவத்தாலும், வேறுபாட்டாலும் பெண்களே அதிகமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
பெண்கள் உரிமைக்கான சர்வதேச அமைப்பான ‘உமன்கைன்ட் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் இயக்குநர் சாரா மாஸ்டர்ஸ் கூறுகையில் “ பாலின சமத்துவத்தின் விளைவுகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது. இந்த அறிக்கையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றமை கவலைக்குரியதாகும். இலங்கையிலுள்ள ஐ.நா. சனத்தொகை நிதியம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கைக்கிணங்க, 90 வீதமான பெண்கள் பொதுப் போக்குவரத்து பஸ்களில் பாலியல் சேஷ்டைகளுக்கு உள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவர்களில் வெறும் 4 வீதத்தினர் மாத்திரமே பொலிஸில் முறையிடுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மொனராகலையில் யுவதி ஒருவரை அவரது காதலன் பட்டப்பகலில் கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் இந்த இடத்தில் நோக்கத்தக்கதாகும்.
இவ்வாறு உலக நாடுகளில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் அது தொடர்பில் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றைத் தடுக்க இறுக்கமான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வாழ அவர்களது வீடுகளே ஆபத்தான இடமாக மாறிவிட்டதென்பது கவலை நிறைந்த தகவலாகும்.
இந்த அவல நிலையை மாற்றியமைக்க பாடுபட வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli