முஸ்லிம் தனியார் சட்ட வரைபு அங்கீகாரத்தை பெறுவதற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திருத்த சிபாரிசுகள் சட்ட வரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சட்டவரைபு திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படுமெனவும் அடுத்த வருடம் முதல் சட்டத்தை அமுல்படுத்த முடியுமெனவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் ‘திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்திருத்தங்களை வரவேற்றுள்ளார்கள்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதும் 2020 ஆம் ஆண்டு முதல் இத்திருத்தங்களை அமுல்படுத்த முடியும். இத்திருத்தங்களினால் காதிநீதிமன்ற கட்டமைப்பு எமது நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கு சமமான தரத்தினைக் கொண்டதாக அமையும்.
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் இந்த திருத்தங்களை விமர்சிப்பதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.
vidivelli