நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக, பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆதரவளிக்குமாறு கோரியதாக எமக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது முறையற்ற செயலாகும். அவ்வாறு பின்வழியால் சென்று அதனை மேற்கொள்ள முடியாது. எங்களுடனும் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும்.
அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். யாருக்கும் தனிப்பட்ட ரீதியில் தீர்மானம் மேற்கொண்டு இதனை செய்ய முடியாது. அவ்வாறு செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் எங்களுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது. அதனால் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆளும் கட்சி தெரிவுசெய்வதற்கு காலம் தாழ்த்துவது அதன் பங்காளி கட்சி என்றவகையில் எமக்கும் பிரச்சினை மக்களுக்கும் பிரச்சினையாகும். அரசாங்கத்தை கொண்டு செல்லும் கட்சிக்கு யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை தெரிவுசெய்துகொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் நாங்கள் எமது கவலையை தெரிவிக்கின்றோம்.
அதனால் ஐக்கிய தேசியக் கட்சி இதுதொடர்பாக அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை விரைவாக தீர்த்துக்கொண்டு பொருத்தமான வேட்பாளரை அறிவிக்கவேண்டும். அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்றார்.
vidivelli